ஞாயிறு, 11 ஜனவரி, 2015

செயற்கை ரத்தம்

























முழு ஹீமோகுளோபின் சத்துடன் 



செயற்கை ரத்தம் 



கண்டுபிடிப்பு: டில்லி பல்கலை. 



மாணவர்கள் சாதனை


போர்முனைகள், எதிர்பாராத விபத்துகள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள், உயிரைக் காக்கும் முக்கிய அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றின்போது மட்டும்தான் விலை மதிக்க முடியாத ரத்தத்தின் அவசியத் தேவை என்னவென்று நம்மில் பலருக்கு புரிகின்றது.
இன்றைய நிலவரப்படி, அரிய வகை நீங்கலாக சாதாரண வகை ரத்தம் ஒரு யூனிட் சுமார் 500 முதல் 800 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இதற்கு மாற்றாகவும், இயற்கையான மனித ரத்தத்துக்கு இணையாகவும், செயற்கை ரத்தத்தை தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் உலகின் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதில் சில நாடுகள் வெற்றி கண்டும் உள்ளன.
எனினும், அந்த செயற்கை ரத்தத்தில் எல்லாம் இயற்கையான வகையில் சுரக்கும் மனித ரத்தத்தில் உள்ளது போன்ற சமவிகித அளவில் ஹீமோகுளோபின் என்ற உயிர்ச்சத்து இல்லாமல் இருப்பது, இந்த ஆராய்ச்சியைப் பொருத்தவரையில் ஒரு பின்னடைவாக கருதப்படுகின்றது.
இந்நிலையில், டில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர்வேதியல் துறை மாணவர்கள் முழு ஹீமோகுளோபின் சத்துடன் செயற்கை ரத்தத்தை கண்டுபிடிக்கும் பெருமுயற்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர். பேராசிரியர் சுமன் குண்டூ தலைமையில் நடைபெற்று வந்த இந்த ஆராய்ச்சியின் வெற்றி பற்றிய தகவல் ஜர்னல் ஆஃப் பயோலாஜிக்கல் கெமிஸ்ட்ரி என்ற சர்வதேச அறிவியல் பருவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கையான முறையில் மனித ரத்தத்தில் உறைந்துள்ள ஹீமோகுளோபின், ரத்த சுழற்சி முறையின்போது ஹீமே என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருளை வெளிப்படுத்தும்.
ஹீமோகுளோபினின் மூலக்கூறில் இருந்து இது வெளியாவதை தடுக்க ஒரு வகை ரசாயன அமிலத்தை செலுத்தி, செயற்கை ரத்தத்தில் இந்த ஹீமோவை கட்டுப்படுத்தும் ''மையோகுளோபின் என்ற புதிய கண்டுபிடிப்பை செலுத்தியதன் விளைவாக, பின்னர் நடத்தப்பட்ட சோதனையின்போது இயற்கையான ரத்தத்தில் உள்ளதைப் போல் அனைத்து சத்துகளும் நிறைந்ததாக அந்த செயற்கை ரத்தம் மாறியது.
அதே வேளையில், ரத்த சுழற்சியின்போது அதிலிருந்து ஹீமேவும் வெளியாகவில்லை. எனவே, இந்த ஆராய்ச்சியை மேலும் மேம்படுத்தி அடுத்த இரண்டு அல்லது மூன்றாண்டுகளில் இயற்கை ரத்தத்துக்கு அசல் மாற்றாக இந்த செயற்கை ரத்தத்தை வர்த்தக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்த முடியும் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..
வர்த்தக ரீதியாக இந்த செயற்கை ரத்தம் விற்பனைக்கு வரும் வேளையில், தற்போது கொடையாளிகளின் மூலம் பெறப்படும் ரத்தத்தின் விலையை விட சுமார் 10 சதவீதம் குறைவான விலையில் இது கிடைக்கும். மேலும், தற்போது விற்பனையாகிவரும் இயற்கை ரத்தத்தை அதிகபட்சமாக 50 நாட்கள் வரைதான் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்திருக்க முடியும்.
ஆனால், இந்த செயற்கை ரத்தத்தை மூன்றாண்டு காலம் வரை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தலாம். எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டுசென்று கையிருப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியைப் போன்ற எட்டு கோள்கள் கண்டுபிடிப்பு
பூமியைப் போன்ற தன்மைகள் கொண்ட எட்டு கோள்களைத் தாங்கள் அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
நாசா நிறுவனத்தின் கெப்லெர் விண்வெளி தொலை நோக்கியைக் கொண்டு இவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கோள்கள் பூமியைப் போலவே பாறைகள் மிகுந்திருக்கக்கூடும் என்றும், நீர் நிரம்பிய கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்குரிய பிற விஷயங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்தக் கோள்கள் பூமியைவிட இரண்டு மடங்குக்கும் மேல் குறைவான அளவுள்ளவை, அவை மிக அதிக வெப்பமோ அல்லது மிகக் குளிரான வெப்பநிலையோ இல்லாதவை என்று விஞ்ஞானிகள் கூறினர். ஆனால் இந்த கோள்களில் ஏதாவது ஒன்றாவது வாழ்வதற்கு உரிய இடமாக இருக்குமா என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. இவைகள் நம்பிக்கையளிக்கும் இடங்கள் என்று மட்டும் கூறினர்.
ஆனாலும், இந்த கோள்களுக்கு மனிதர்களால் விரைவில் சென்றுவிட முடியாது. ஏனென்றால் அவை பல நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன. ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் விண்வெளி பவுதிக மய்யத்தைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களது இந்த முடிவுகளை வாஷிங்டனில் நடந்த அமெரிக்க விண்ணியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.
விடுதலை,8.1.15

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக