ஞாயிறு, 13 மார்ச், 2016

லூசி: பரிணாம வளர்ச்சியின் மைல் கல்!


குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த இனம் மனித இனம். இதற்கு ஆதாரங்கள், 1924 முதலே அவ்வப்போது பல கண்டங்களில் கற்கால எலும்புக்கூடுகள் கிடைத்து வந்தன.
ஆனால், 1970களில் தான் அடுத் தடுத்து நிறைய ஆதி கால எலும்புக் கூடுகள் கிடைக்க ஆரம்பித்தன. அவற்றில் முக்கியமானது, 1974 நவம்பர் 24 அன்று எத்தியோப்பியாவின் அபார் பிராந்தியத்தில் கிடைத்த எலும்புக் கூடுகளின் பகுதிகள் தான்.
மாரிஸ் தயீப் என்ற பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் குழு, 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட, 20 வயது மதிக்கத்தக்க பெண்ணின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தது. முழுமையாக கிடைக்காவிட்டாலும், கிடைத்த எலும்புக்கூடுகள் ஆதிகால மனித உடலமைப்பைப் பற்றி பல கதைகள் சொல்லின. எழுபதுகளில் பிரபலமாக இருந்த பீட்டில் இசைக் குழுவினரின் லூசி என்ற பாடல் தலைப்பையே அந்த எலும்புக்கூடுக்கும் வைத்தனர் ஆய்வாளர்கள்.
லூசி ஒரு மீட்டர் உயரமே உடையவள். இன்றைய மனிதர்களின் மூளைத் திறனில் மூன்றில் ஒரு பங்கே அவளுக்கு இருந்திருக்கும். குரங்கினத் தின் உடற்கூறு அம்சங்கள் சில இருந் தாலும், லூசி முதுகெலும்பை நிமிர்த்தி, இரண்டு கால்களால் மட்டுமே நடக்கும் மனித இனம் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்தனர். அந்த வகை இனத்திற்கு,
'ஆஸ்ட்ரலோபிதிகஸ் அபாரென்சிஸ்' என்று பெயரிட்டனர் மானுடவியல் வல்லுனர்கள். ஆனால், மனிதன் மூளைத் திறன் அதிகமான பிறகே நடக்க ஆரம்பித்தான் என்ற கருத்தை லூசி தகர்த்துவிட்டாள். லூசியின் மூளை அளவு சிறிதாக இருந்தாலும், அவள் இரண்டு காலால் நடப்பவள் என்பதை அவளது இடுப்பெலும்பும்,
கால் எலும்புகளும் காட்டிக் கொடுத்தன. தவிர, லூசி காலத்து மனிதர்கள் காட்டு மிராண்டித் தனமாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்றும், அவளுக்கு 15 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு, இடப் பெயர்ச்சி செய்த மனித குலம்தான் இன்று தழைத்து நிற்பதாகவும் ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.
இந்த கருத்தை சில ஆய்வாளர்கள் மறுத்தாலும், லூசியின் கண்டுபிடிப்பு மனித இனம் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பது பற்றி இருந்த கருத்துக்களை அடியோடு மாற்றிவிட்டது. கடந்த நவம்பர் 24 அன்று இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்து, 41 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் கூகுள் தனது தினசரி 'டூடுல்' ஒன்றில் லூசியை கவுரவித்தது.
-விடுதலை ஞாயிறுமலர்,12.12.15

செவ்வாய், 22 டிசம்பர், 2015

உலகின் மிகப்பெரிய பறவையின் புதைபடிமம் கண்டுபிடிப்பு


இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்களிலேயே மிகப்பெரிய பறவையின் புதைபடிமத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக் கிறார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமத்தை விரிவாக ஆராய்ந்ததில், மிகப்பெரிய தொரு பறவையின் பாதுகாக்கப்பட்ட எச்சங்களை அதில் இவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இந்த பறவைகள் தமது இறக்கைகளை விரித்தால் அதன் அகலம் ஆறு மீட்டர் முதல் ஏழரை மீட்டர் வரை இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். அதாவது 20 முதல் 24 அடி அகல இறக் கைகளை கொண்டதாக இந்த பறவை இருந்திருக்கும் என்பது விஞ்ஞானி களின் கணக்கு.
தற்போது உயிர்வாழும் பறவைகளி லேயே அல்பட்ராஸ் என்னும் கடற் பறவைதான் மிகப்பெரிய பறவையாக அறியப்படுகிறது. இவற்றின் இறக்கை களின் அகலம் அதிகபட்சம் மூன்று மீட்டர் என்று கணக்கிடப்படுகிறது. அப்படி பார்க்கும்போது இந்த புதை படிம பறவை அல்பட்ராஸைவிட இரண்டு மடங்கு பெரிய பறவையாக இருந்திருக்கும் என்பது இந்த விஞ்ஞானிகளின் கணக்கு.
இரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கணக்கிடப்படும் இந்த பறவையின் உருவத்தை விஞ் ஞானிகள் கணினி மூலம் மாதிரி வடிவை உருவாக்கிப் பார்த்தபோது அந்த பறவை வானில் பறந்தபோது மிகச் சிறப்பாகவும், கம்பீரமாகவும், லாவக மாகவும் பறந்திருக்கக்கூடும் என்று கணித்திருக்கிறார்கள்.
ஆனாலும் இந்த பறவையின் மிகப்பெரிய உருவமும் எடையும் அது நிலத்திலிருந்து வானத்துக்கு மேலெழும்பும் போதும் வானில் இருந்து நிலத்துக்கு கீழிறங் கும்போதும் அதற்கு கடும் சிரமத்தைக் கொடுத்திருக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
பெலகோர்னிஸ் சந்தெர்ஸி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பறவையின் புதைபடிமம் தெற்கு கரோலினா கடற்பரப்பில் கண்டெ டுக்கப் பட்டது. இது கடல்நாரையின் முன்னோர்களில் ஒன்றாக இருந்திருக் கக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
-விடுதலை,10.7.14

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பூமியின் தட்பவெப்ப நிலையின் பின்னணி



உலகில் இன்று வெப்பப் பிரதேசங் களாக உள்ள சில பகுதிகள் பழங் காலத் தில் குளிர்ப் பிரதேசங்களாக இருந்து பின்னர் மாற்றம் அடைந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருது கின்றனர். ஆனால் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பகுதிகள் எப்போதுமே ஒரே மாதிரியான வெப்பமான பிரதேசமா கவே இருந்து வந்திருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தீர்மானிக்கின்றனர்.
பூமியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தட்பவெப்பநிலை குறித்து புவியியல் அறிஞர்களால் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.
பூமியின் மீது படர்ந்து படிந்து கிடக்கும் பனிப் போர்வையின் இடமாற்ற மே அந்தந்தப் பிரதேசத்தின் தட்ப வெப்பநிலையைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு கருத்து. பூமியின் மீது படிந்துள்ள பனிக்கட்டியின் எடை மில்லியன் கன மைல்களாகும். இது பூமியின் மொத்தப் பரப்பில் 10 சதவீதம்.
ஆல்ப்ஸ் மலை மீதுள்ள பனிக் கூரையை புவியியல் அறிஞர்கள் நெடுங் காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்ற னர். இம்மலை மீதுள்ள பனிக்கட்டியின் தன்மையை ஒத்த பனிக்கட்டிகள் உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
ஓரிடத்தில் இருக்கும் பிரம்மாண்ட மான பனிப் படிவங்கள் இடம் விட்டு இடம் நகரக்கூடும் என்றும், அவ்வாறு நகர்ந்து செல்லும்போது ஆங்காங்கே பிரம்மாண்ட பனிப் பாறைகளை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்றும் அறிஞர் கள் கருதுகிறார்கள்.
இவ்வாறு பனிப் படலம் இடம் விட்டு இடம் மாறும்போது பனிப்படலம் போய்ச் சேர்ந்த இடம் குளிர்ச்சித் தன்மையையும், அது இடம் விட்டு நகர்ந்த பகுதி வெப்பத் தன்மையையும் பெற்றிருக்கக் கூடும் என்றும் அறிஞர்கள் நினைக்கின்றனர்.
பனிப் படலங்கள் இடம்பெயரும் போது ஆங்காங்கே பெரிய ஏரிகள் தோன்றின. அம்மாதிரி ஏரிகள் கனடா விலும், அமெரிக்காவிலும் உள்ளன. பல பெரிய ஏரிகள், பனிப்படலங்கள் விட்டுச் சென்ற சின்னங்கள் என்றே கருதப் படுகின்றன. பனிப்போர்வையின் வரு கையும், விலகலும் தட்பவெப்பநிலை யை மட்டுமல்லாமல் கண்டங்களின் உருவங் களையும் மாற்றி அமைக்கின்றன. உதாரணமாக, அண்டார்டிகாவிலும், கிரீன்லாந்திலும் உள்ள பனிப்பாறைகள் அனைத்தும் உருகத் தொடங்கினால் கடல் மட்டமானது 200 அடிக்கு மேல் உயர்ந்துவிடும்.அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டால் கடல் ஓரத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் மூழ்கடித்துவிடும்.
-விடுதலை,12.6.14

வேற்றுக் கோள் மோதியதில் உருவான நிலா: புதிய ஆதாரம்

பூமி உருவாகிவந்த சமயத்தில் அதன் மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக புதிய ஆய் வுகள் காட்டுகின்றன.
நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் அப்போலோ விண்கலத்தில் நிலவுக்கு சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்து வந்த நிலவுப் பாறைகளில் இரசாயன ஆய்வுகளை மேற்கொண்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் இதனைத் தெரிவிக்கின்றனர்.
நானூற்றைம்பது கோடி ஆண்டுகள் முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கோள் வந்து பூமியின் மீது பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள் தான் பூமியைச் சுற்றி ஒன்றுதிரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு கோட்பாடாக இருந்துவருகிறது.
சூரிய குடும்பமும் உருவான விதம் தொடர்பான சாத்தியக்கூறுகளை கணினிகள் மூலமாக அனுமானித்த போதும் நிலவு உரு வானதற்கு பொருந்திவரக்கூடிய விளக்கமாக இதுதான் இருந்துவருகிறது.
தியா: ஆனால் இந்த கோட்பாட்டுக்கு தடய பூர்வ ஆதாரம் எதுவும் அதற்கு இது வரை இல்லாமல் இருந்துவந்தது. அப்படி வந்து மோதியதாக கருதப்படும் கோளுக்கு கிரேக்க கதையிலிருந்து எடுத்து தியா என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்திருந்தார்கள். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் கள் நிலவுப் பயணம் சென்று அங்கிருந்து பாறைகளை எடுத்து வந்த பின்னர் அதில் செய்யப்பட்டிருந்த ஆய்வுகளை வைத்து, நிலவுப் பாறைகள் முழுக்க பூமியிலிருந்து சென்றவைதான் - அதாவது பூமிப் பாறை களில் காணப்படும் இரசாயன மூலக்கூறு களும் அடையாளங்களும்தான் அந்த பாறைகள் முழுமையிலும் தென்பட்டதாக கருதப் பட்டது.
ஆனால் மேலும் நூதனமான ஆய்வுகளை தற்போது நிலவுப் பாறைகளில் மேற்கொண்ட போது, பூமிப் பாறைகளின் இரசாயன கூற்றுக்கு சம்பந்தமில்லாத வெளிக்கிரக தோற்றத்துக் கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனியிலுள்ள கொயெடிங் கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-விடுதலை,12.6.14


மனித உடலில் புதிய தசை நார் கண்டுபிடிப்பு


நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களைத் திருப்பி நகர்த்தும் போது இந்த தசைநார்கள் தான் கால்களுக் கான பாதுகாப்பு அரணாக அமைகிறதாம்.
நமது முழங்கால் பகுதியில் இதுவரை அறியப்படாத தசைநார் ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளதாக பெல்ஜியத்தின் முழங் கால் மருத்துவ நிபுணர்கள் அறிந்துள்ளார்கள். தொடை எலும்புக்கு மேல்புறத்தி லிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப் பட்ட முன்னங்கால் வரையான பகுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ்ஸு, பேராசிரியர் ஜோஹன் பெல் லெமன்ஸ் ஆகிய மருந்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களைத் திருப்பி நகர்த்தும் போது இந்த தசைநார்கள் தான் கால்களுக் கான பாதுகாப்பு அரணாக அமைகிறதாம். இப்படி ஒரு தசைநார் முழங்காலை ஒட்டி அமைந்திருக்கும் என்று நீண்டகாலமாக கருத்துக்கள் இருந்து வந்த போதிலும், இப்போதுதான் அது பற்றிய ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த முழங்கால் சிகிச்சை நிபுணர் ஜோயல் மெல்டன். மருத்துவப் பரிசோதனைகள் செய்வ தற்காக தங்களது உடலை தானமாகத் தந்த 41 பேரின் உடலிலிருந்து முழங்கால்களை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்தபோது இதைக் கண்டறிந்துள்ளனர். எல்லோரது முழங்கால் எலும்புகளிலும் இந்த தசைநார்கள் இருப்பதையும், அவை எல்லாம் ஒரே வடிவமைப்பில் இருப்பதையும் விஞ்ஞானிகள் பார்த்துள்ளார்கள்.
பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய முழங்கால் காயங்களின்போது, அவற்றை சரியாகப் புரிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் இந்த தசைநாரின் அமைப்பு உதவும் என்பது மருத்துவர்கள் கருத்து. கால்களின் முன் பக்கவாட்டில் இருக்கின்ற இந்த தசைநாரில் ஏற்படுகின்ற காயங்களே ஏராளமான முழங்கால் உபாதைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்பதும் க்ளஸ்ஸு மற்றும் ஜோஹன் பெல்லொமன்ஸ் ஆகியோரின் கருத்து. கால்களில் ஏற்படும் வலி மற்றும் உபாதைகள் தொடர்பான சிகிச்சைகளுக்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்பது குறித்து தீவிர ஆராய்ச்சி நடக்கிறது.
-விடுதலை,12.6.14


சனி, 12 டிசம்பர், 2015

சோதனைக் குழாய் மூலம் பிறந்த உலகின் முதல் நாய்க் குட்டிகள்!



வாஷிங்டன்,  டிச.11_ உலகிலேயே முதல் முறையாக சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கப்பட்ட 7 நாய்க் குட்டிகள் அமெரிக்காவில் பிறந்துள்ளன.
அமெரிக்க விஞ்ஞானி கள் இந்த சாதனையால், அரிய வகை நாய்களைப் பாதுகாப்பதற்கும், மனிதர் கள் மற்றும் விலங்கினங் களின் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் புதிய வழி கிடைத்துள்ள தாக நிபுணர்கள் தெரி விக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக் காவிலிருந்து வெளியாகும் "பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயின்ஸ் ஒன்' அறிவியல் இதழில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக கால்நடை மருத்துவத் துறையைச் சேர்ந்த விஞ் ஞானிகளின் முயற்சியில், சோதனைக் குழாயில் கருத்தரிப்பு செய்யப்பட்ட 7 வெவ்வேறு இனம் மற்றும் கலப்பின நாய்க் குட்டிகள் கடந்த ஜூலை மாதம் பிறந்தன.
நீண்டகாலமாவே, சோதனைக் குழாய் கருத் தரிப்பு முறையில் மனிதர் கள் குழந்தை பெற்று வந்தாலும், அதே முறை யில் நாய்களை கருத்த ரிக்கச் செய்யும் முயற்சி இதுவரை வெற்றி பெற வில்லை. பெண் நாய் களின் கருத்தரிக்கும் பருவம் மிகவும் மாறு பட்டது என்பதால் அவற் றின் சினை முட்டையை தனியாக எடுத்து, அதனைக் கருவுறச் செய்ய முடியாமல் இருந்து வந்தது.
தற்போது, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனைக் குழாய் மூலம் நாய்க்குட்டி களையும் பிறக்கச் செய் திருப்பதே அமெரிக்க விஞ்ஞானிகளின் சாதனை யென அந்த  அறிவியல் இதழில் கூறப்பட்டுள் ளது.
-விடுதலை,11.12.15
-

சனி, 5 டிசம்பர், 2015

மனிதனின் பரிணாம வளர்ச்சி!


தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆராய்ச்சிகள் பல புதுப்புதுத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கின்றன.  முதலில் உலகம் தட்டை என்று நம்பப்பட்டது.  பின்னர் ஆராய்ச்சிகள், அதைத் தொடர்ந்த பயணங்கள் உருண்டை என்று நிரூபித்தன. 

இப்படித்தான் மனிதனின் பரிணாம வளர்ச்சியும், குரங்கினின்று _ அதிலும் சிம்பன்சி எனும் குரங்கு வகையினின்று மாற்றம் பெற்று வளர்ச்சியடைந்தவன்தான் மனிதன்.

இப்படிப்பட்ட மாற்றத்தைப் பெற 50 லட்சம் ஆண்டுகள் ஆகின என இதுவரை இருக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சமீபத்தில் ராபர்ட் டி.மார்ட்டின் என்பவரால் சையின்ஸ் டெய்லி இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இவரது கூற்றுப்படி சிம்பன்சியினின்று மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சியின் காலம் மேலும் 30 லட்சம் ஆண்டுகட்கு முந்தையது எனத் தெரிகிறது.

அதாவது 50 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்குப் பதில் 80 லட்சம் ஆண்டுகட்கு முன்பே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாம்!  மனிதனுக்கு முந்தைய இந்த சிம்பன்சிகளுக்கும் முந்தைய ஆதார உயிரினம் 8 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளனவாம்! 

அறிவியலே விந்தை _ அதிலும் விந்தை இந்த அறிவியலை ஆராயும் மானிட மூளை!
(நன்றி: ஜனசக்தி 16.4.2011)
-விடுதலை ஞா.ம.23.4.11