ஞாயிறு, 13 மார்ச், 2016

லூசி: பரிணாம வளர்ச்சியின் மைல் கல்!


குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த இனம் மனித இனம். இதற்கு ஆதாரங்கள், 1924 முதலே அவ்வப்போது பல கண்டங்களில் கற்கால எலும்புக்கூடுகள் கிடைத்து வந்தன.
ஆனால், 1970களில் தான் அடுத் தடுத்து நிறைய ஆதி கால எலும்புக் கூடுகள் கிடைக்க ஆரம்பித்தன. அவற்றில் முக்கியமானது, 1974 நவம்பர் 24 அன்று எத்தியோப்பியாவின் அபார் பிராந்தியத்தில் கிடைத்த எலும்புக் கூடுகளின் பகுதிகள் தான்.
மாரிஸ் தயீப் என்ற பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் குழு, 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட, 20 வயது மதிக்கத்தக்க பெண்ணின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தது. முழுமையாக கிடைக்காவிட்டாலும், கிடைத்த எலும்புக்கூடுகள் ஆதிகால மனித உடலமைப்பைப் பற்றி பல கதைகள் சொல்லின. எழுபதுகளில் பிரபலமாக இருந்த பீட்டில் இசைக் குழுவினரின் லூசி என்ற பாடல் தலைப்பையே அந்த எலும்புக்கூடுக்கும் வைத்தனர் ஆய்வாளர்கள்.
லூசி ஒரு மீட்டர் உயரமே உடையவள். இன்றைய மனிதர்களின் மூளைத் திறனில் மூன்றில் ஒரு பங்கே அவளுக்கு இருந்திருக்கும். குரங்கினத் தின் உடற்கூறு அம்சங்கள் சில இருந் தாலும், லூசி முதுகெலும்பை நிமிர்த்தி, இரண்டு கால்களால் மட்டுமே நடக்கும் மனித இனம் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்தனர். அந்த வகை இனத்திற்கு,
'ஆஸ்ட்ரலோபிதிகஸ் அபாரென்சிஸ்' என்று பெயரிட்டனர் மானுடவியல் வல்லுனர்கள். ஆனால், மனிதன் மூளைத் திறன் அதிகமான பிறகே நடக்க ஆரம்பித்தான் என்ற கருத்தை லூசி தகர்த்துவிட்டாள். லூசியின் மூளை அளவு சிறிதாக இருந்தாலும், அவள் இரண்டு காலால் நடப்பவள் என்பதை அவளது இடுப்பெலும்பும்,
கால் எலும்புகளும் காட்டிக் கொடுத்தன. தவிர, லூசி காலத்து மனிதர்கள் காட்டு மிராண்டித் தனமாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்றும், அவளுக்கு 15 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு, இடப் பெயர்ச்சி செய்த மனித குலம்தான் இன்று தழைத்து நிற்பதாகவும் ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.
இந்த கருத்தை சில ஆய்வாளர்கள் மறுத்தாலும், லூசியின் கண்டுபிடிப்பு மனித இனம் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பது பற்றி இருந்த கருத்துக்களை அடியோடு மாற்றிவிட்டது. கடந்த நவம்பர் 24 அன்று இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்து, 41 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் கூகுள் தனது தினசரி 'டூடுல்' ஒன்றில் லூசியை கவுரவித்தது.
-விடுதலை ஞாயிறுமலர்,12.12.15

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக