சனி, 19 மே, 2018

சூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் ‘வினோத விண்கல்’
சூரிய மண்டலத்தில் கோள்களுக்கு அப்பால் உள்ள கைப்பர் திணை மண்டலத்தில் கார்பன் அதிகம் உள்ள விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நெப்டியூன் கோளுக்கு அப்பால் இருக்கும் பனிக்கட்டி களின் குவியலை வட்டமடித்துக்கொண்டிருக்கும் அந்த விண்கல், அந்தக் கோளில் இருந்து உருவாகவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுமார் 300 கிலோமீட்டர் அகலமுள்ள அந்த மாபெரும் விண்கல், சிறிய கோள்களான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ அல்லாத வேறு கோள்களின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, நமது சூரிய மண்டலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.

பூமியில் இருந்து நெடுந்தொலைவில் இருக்கும் அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்யவே விஞ்ஞானிகளுக்கு பல ஆண்டுகள் ஆனது.

“முதலில் அந்த விண்கல் குறித்த தரவுகளைப் பெற்ற போது, நாங்கள் தவறான தகவல்களையே பெற்றுள்ளோம் என்று கருதினோம். ஏனெனில் அது கைப்பர் திணை மண்டலத்தில் இருக்கும் ஒரு விண்கல்லைப் போல இல்லை,” என்று அந்த ஆய்வில் பங்கேற்ற குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் டாம் செக்கல் பிபிசியிடம் தெரிவித் தார்.

கோள்களைக் கடந்து இருக்கும் சூரிய மண்டலத்தின் ஒரு பகுதியான கைப்பர் திணைமண்டலத்தில் இருக்கும் விண்கற்கள், தங்களின் மேற்பரப்பில் பனியால் அதிகம் மூடப்பட்டிருக்கும். ஆனால், 2004 ணிகீ 95 என்று பெயரிடப் பட்டுள்ள இந்த விண்கல் கார்பனை அதிக அளவில் கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பில்லோசிலிகேட்ஸ்  என்று கூறப்படும் தாதுக்களையும் கொண்டுள்ளது.

இந்த விண்கல்லில் திரவ வடிவில் நீர் இருந்ததால், அதன் பாறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறும் சக்கல், “2004 ணிகீ95 விண்கல் சூரியனில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது. அதன் வெப்ப நிலை மைனஸ் 235 டிகிரி செல்சியஸ். எனவே அதன் மேற்பரப்பில் பனி உறைந்த நிலையில் இருக்கும்.

இதற்கு முன்பு திரவ வடிவில் இருந்தது என்றால், அந்த விண்கல் முன்னொரு காலத்தில் சூரியனுக்கு அருகில் உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதன் வெப்பம் அதிகமாக இருந்தது என்றும் தெரிய வருகிறது,” என்கிறார்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரியான் ஜோன்ஸ், “கைப்பர் திணைமண்டலத்தில் உள்ள ஒரு விண்கல்லில் பில்லோசிலிகேட்ஸ் தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை,” என்று கூறு கிறார்.

சூரிய மண்டலம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்கும் கோட்பாடுகளில் ஒன்றான ‘கிராண்ட் டேக் அனுமானம்‘  தொடக்க காலத்தில் சூரிய மண்டலம் கொந்தளிப்பு மிகுந்த பிரதேசமாக இருந்ததாகக் கூறுகிறது. அப்போது வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் சூரியனுக்கு அருகில் நகர்ந்து சென்று, மீண்டும் தற்போது இருக்கும் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைபெற்றன.

இந்த நிகழ்வுகளின்போது, விண்ணில் இருந்த பெரும் அளவிலான வாயுக்களால் உண்டான விண்கற்கள், சூரிய மண்டலத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கலாம். அதன்பின் அவை அந்த இடங்களிலேயே நிலைகொண் டிருக்கலாம். 2004 ணிகீ 95 விண்கல் அந்த அனுமானதுடன் ஒத்துப்போகிறது.

2004 ணிகீ95 விண்கல் போலவே பல பொருட்கள் கைப்பர் திணைமண்டலத்தில் இருந்தாலும் அவை குறித்த போதிய தகவல்களை திரட்ட முடியவில்லை என்கிறார் செக்கல். நாசாவின் நியூ ஹாரிசான்ஸ்  ஆய்வுக் கலம் ஜனவரி 1, 2019 அன்று அல்டிமா தூல் எனும் விண்கல்லை சென்றடையவுள்ளது.

அது சூரிய மண்டலத்துக்கு வெளியே அமைந்துள்ள விண் பொருட்கள் பற்றிய தரவுகளை அறிய முடியும்.

அண்டார்டிகாவில் 27,200 கோடி டன் அதிகரித்த பனிப்பொழிவுஅண்டார்டிகாவில் தற்போது நிலவும் பனிப்பொழிவு 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடுமையாக இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது 1801-1810 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவைவிட 2001-2010 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவின் அளவு 27 ஆயிரத்து 200 கோடி டன் (272 பில்லியன் டன்) அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே குழுவினர் நடத்திய அந்த ஆய்வு முடிவுகளை, அதில் பங்குபெற்ற லிஸ் தாமஸ், வியன்னாவில் நடைபெற்ற அய்ரோப்பிய புவி அறிவியல் ஒன்றியத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில்  சமர்ப்பித்தார்.

அந்தப் பனிக் கண்டத்தில் 79 இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பனிக்கட்டிகள் மூலம் கடந்த காலங்களில் உண்டான பனிப்பொழிவு குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் கூடுதல் பனி நீரின் அளவு சாக்கடலின் பரப்பளவைப் போல இரு மடங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

நியூசிலாந்து நாட்டின் நிலப்பரப்பு முழுவதையும் ஒரு மீட்டர் ஆழமுள்ள நீரில் மூழ்கடிக்க இந்த நீர் போதுமானது.  பருவநிலையில் வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக லிஸ் தாமஸ் கூறுகிறார்.

1992 முதல் கடல் மட்டம் அதிகரித்ததில், அண்டார்டிக் கண்டத்தில் உருகிய பணிகள் 4.3 மில்லி மீட்டர் உயர்வுக்கு பங்கு வகித்திருப்பதாக தங்களின் சிறந்த மதிப்பீடுகள் தெரிவித்துள்ளதாக என்று அவர் கூறுகிறார்.

கூடுதல் பனிப்பொழிவு கடல் மட்டத்தைத் தாழ்த்தி இருந்தாலும், அண்டார்டிகாவில் ஓரங்களில் உண்டாகும் பனி இழப்பைத் தடுக்கப் போதுமானதல்ல என்று அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்
- விடுதலை நாளேடு, 17.5.18

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக