வியாழன், 14 டிசம்பர், 2017

மிக அதிக எடை கொண்ட கருந்துளை கண்டுபிடிப்பு
வானியல் நிபுணர்கள் தொலைதூரத்தில் உள்ள மிக அதிக எடை கொண்ட கருந்துளை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.

பெருவெடிப்புக்கு 690 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பார்க்கும் இந்த கருந்துளை, வியத்தகு 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

ஆனால் சூரியனின் எடையை விட 800 மில்லியன் மடங்கு எடை கொண்ட இந்த கருந்துளை, பிரபஞ்சம் தோன்றியதற்குப் பிறகு இத்தகைய மிகப்பெரிய அளவை மிகச்சிறிய நாட்களில் எட்டியுள்ளது வியப்பிற்குரியதாகும்.

நேச்சர் என்ற அறிவியல் சஞ்சிகை இது தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த கருந்துளை ஒரு நட்சத்திர மண்டலத்தின் மய்யத்தில் இருந்துகொண்டு அண்டும் பொருள்களை இழுத்துக்கொண்டுள்ளது. எனவே இது குவாசர் என்று அழைக்கப்படுகிறது.

குவாசர் - மிகவும் பிரகாசமான மற்றும் அதிக தொலைவில் உள்ள விண்பொருள்களில் ஒன்றாகும். அவை பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியமான ஒன்றாகும்‘’ என்று ஜெர்மனியில் உள்ள மாக்ஸ் பிளாங்க் வானியல் நிறுவனத்தைச் சேர்ந்த இக் கட்டுரையின் இணை ஆசிரியர் ப்ராம் வெனிமன்ஸ் கூறுகிறார்.

இந்த குவாசர் மிகவும் சுவாரஸ்யமானது ஏனென்றால் பிரபஞ்சம் அதன் தற்போதைய வயதில் 5 சதவிகிதமாக இருக்கும் சமயத்தில் இருந்து இது வந்திருக்கிறது.

இந்த நேரத்தில்தான், முதல் நட்சத்திரம் தோன்றியதற்கு முன்பு, பிரபஞ்சம் இருண்ட காலத்திலிருந்து வெளிவரத் துவங்கியது.

குவாசரின் தொலைவானது ரெட்ஷிப்ட் என்னும் ஒரு அளவுகோல் மூலம் அளவிடப்படுகிறது. பேரண்டம் விரிவடைவதன் காரணமாக குவாசரின் ஒளியின் அலை நீளம் புவியை அடைவதற்கு முன்பு எந்த அளவு இழுபட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட் ஷிப்ட் மதிப்பிடப்படுகிறது. புதிதாக கண்டு பிடித்த கருந்துளை 7.54 ரெட்ஷிப்ட் அளவைக் கொண்டுள்ளது.

எந்த அளவிற்கு ரெட்ஷிப்ட் அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அதன் தொலைவும் அதிகமாக இருக்கும்.

இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு, அதிக தொலைவுள்ள குவாசராக அறியப்பட்டது, பிரபஞ்சம் தோன்றி 800 மில்லியன் ஆண்டுகள் ஆன பொழுது தோன்றியது.

விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டபோதும் இவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு பொருளை காண்பதற்கு அய்ந்தாண்டு காலம் ஆகியிருக்கிறது. என்றும் இந்த பிரும்மாண்ட கருந்துளை உருவாவதற்கான செயல்முறை ஒன்று பேரண்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்திருக்கிறது என்றும் கூறுகிறார் கட்டுரையின் இணை ஆசிரியர் எடுராடோ பனாதோஸ்.

‘’அது என்ன செயல்முறை? அதைத்தான் ஆய் வாளர்கள் ஓயாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்.

எதிர்பாராத இந்த கண்டுபிடிப்பு உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆய்வு மய்யங்களில் இருந்து பெறப்பட்ட தகவல் களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பிற்கு உதவிய பலவற்றில் ஹவாயின் ஜெமினி வடக்கு தொலைநோக்கி மய்யமும், நாசாவின் வைட் ஃபீல்டு அகச்சிவப்பு ஆய்வுத் தொலைநோக்கியும் முக்கிய மானவை ஆகும்.
- விடுதலை நாளேடு,14.12.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக