சனி, 3 செப்டம்பர், 2016

செத்தவர் பிழைத்த அதிசயம்!

இறந்துவிட்டார் என மருத்துவமனை அறிவித்து 15 மணி நேரம் கழித்து, மயானத்திற்கு தூக்கிச் செல்லும்போது, உயிர் திரும்பினால் அதனை என்ன சொல்வார்கள்?

எமன் தப்பாகக் கணக்கிட்டு உயிரைக் கொண்டுசென்று உண்மை தெரிந்து மீண்டும் உயிரைக் கொடுத்தான் என்பர். அவ்வாறு பிழைத்த சிலரும் எமலோகம் போய் எமனைச் சந்தித்ததாய் கதை சொல்வர்.

ஆனால், இவை கற்பனைகள்; கதை அளப்புகள். உண்மை என்ன? கீழேயுள்ள உண்மை நிகழ்வைப் படியுங்கள்.

படத்திலுள்ள பத்மாபாய் லோதா ராஜஸ்தானை சேர்ந்தவர். 59 வயதாகும் இவருக்கு மே 16ஆம் தேதி திடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு கட்டத்தில் வென்டிலேட்டர் வைக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு இறந்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. பிறகு அடுத்த நாள் காலை 9 மணிவரை மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டார்.

இதனிடையே ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ் நாட்டில் இருக்கும் அவருடைய சொந்தபந்தங்கள், மும்பையில் வசிக்கும் இரு மகள்களுக்கு தகவல் சென்று அவர்களும் விமானத்தில் பறந்து வந்தனர்.

17ஆம் தேதி, மருத்துவமனையிலிருந்து உடல் எடுத்து வரப்பட்டு இறுதிச் சடங்குகளுக்கான சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் அவர் அருகில் அமர்ந்து கூர்ந்து அவரை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி! அவரது உடலில் சில அசைவுகள் ஏற்பட, அடுத்த சில நிமிடங்களில், பத்மாபாய் சுவாசிப்பது நன்கு தெரிந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அய்.சி.வார்ட்டில் சேர்க்கப்பட்டு, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். சீக்கிரம் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிவித்தது.

இதனிடையே பத்மாபாய்க்கு உயிர் திரும்பியதால் நெருங்கிய உறவுகளிடையே சந்தோஷம்.

ஆகவே, மூச்சுத்திணறலால் ஒருவருக்கு மூச்சு ஒரு கட்டத்தில் நின்றுவிட்டாலும், தானே, திரும்ப வாய்ப்பு உள்ளது. இதுதான் செத்தவர் பிழைத்தாகக் கூறப்படும் நிகழ்வு. எனவே, இறப்பை மருத்துவர்கள் ஒருமுறைக்கு சிலமுறை சோதித்து உறுதிசெய்ய வேண்டும்!
-உண்மை இதழ், 1-.15.7.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக