திங்கள், 5 செப்டம்பர், 2016

கற்கால மனிதன் கயிறு தயாரித்தது எப்படி?


40,000 ஆண்டுகளுக்கு முன்பு அய்ரோப்பாவில் கால் பதித்த ஆதி மனிதர்கள், வேட்டைக்கு மிக அவ சியமான கயிறை எவ்வாறு தயாரித்தனர் என்பது குறித்து இதுவரை இருந்து வந்த மர்மம் விலகியுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி யில் வெளியாகும் தொல் லியல் துறைக்கான அறி வியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அய்ரோப்பாவில் கற்கால மனிதர்கள் கயிறுகளைப் பயன்படுத்தி வந்தனர் என்பது, அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பானைகளில் பதிந்துள்ள கயிறுகளின் தடங்கள் மூலம் தெரிய வருகிறது.
மேலும், அந்தக் காலகட்டத்திய கலைப் பொருள்கள் சிலவற்றிலும் கயிறு சித்திரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆதி மனிதர்கள் கயிறுகளைப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தாலும், அவர்கள் அந்தக் கயிறை எவ்வாறு தயாரித்தனர் என்ற விவரம் இதுவரை தெரியாமல் இருந்து வந்தது.
இந்தச் சூழலில், டியூபிங்கென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் கனார்டு என்பவரால் புகழ்பெற்ற ஹோலே ஃபெல்ஸ் குகையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளும், அதனைக் கொண்டு தொல்லியல் நிபுணர் வீர்லே ராட்ஸ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வும் அந்த மர்மத்தை விலக்கியது.
நிக்கோலஸ் கண்டெடுத்த அந்தப் பொருள், அழிந்துபோன "மாமத்' யானை இனத்தின் தந்தத் துண்டு ஆகும்.
20.4 செ.மீ. நீளமுள்ள அந்தத் தந்தத்தில், 7 முதல் 9 மி.மீ. விட்டம் கொண்ட நான்கு துளைகள் மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இதுபோன்ற துளைகளுடன் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் கம்பிகளை நேராக்கும் கருவிகள் எனவும், அலங்காரப் பொருள்கள் எனவும் கூறப்பட்டு வந்தன. ஆனால், நிக்கோலஸ் கனார்டு கண்டெடுத்த தந்தத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், அதிலுள்ள துளைகள் வெறும் அலங்காரத்துக்காக செதுக்கப்படவில்லை எனவும், அது கயிறுகளைத் திரிப்பதற்கு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவி எனவும் தெரிவித்தனர்.
இதன் மூலம், கற்கால மனிதர்களின் கயிறு தயாரிப்பு முறை குறித்து இதுவரை இருந்து வந்த புதிருக்கு விடை கிடைத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலை ஞாயிறு மலர், 30.7.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக