புதன், 11 ஜனவரி, 2017

நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை




நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை நீண்ட நாட்களுக்கு நினைவு கொள்கிறோம். அதே நேரம் சிலவற்றை குறுகிய காலத்தில் மறந்து விடுகிறோம்.

இது எப்படி நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.

மனித குலத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக மனிதர் கள் வாழ்வதற்காகவும் நல்ல நினைவுகள் நீண்டகாலம் நீடித்திருக்கின்றன என்று உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தீய நினைவுகளை விட்டொழித்து நல்ல நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது, வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் மற்றும் நிலைமைகளை சமாளித்து சாதகமான அம்சங்களை முன்னெடுக்க உதவுகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தீய நினைவுகள் விரைவாக மங்குகின்றன எனும் ஒரு கோட்பாடு 80 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக முன்வைக்கப்பட்டது.

பின்னர் 1970 ஆம் ஆண்டுகள் தொடக்கம் இதுகுறித்து பல்லின மக்களிடம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணம் தொடர்பான நினைவுகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் தாங்கள் அதில் கழித்த உல்லாசமான நாள்கள், சந்தித்த மக்கள் ஆகியவை குறித்து உடனடியாக நினைவு கூர்ந்தனர்.

அதே நேரம் தாமதமான விமானப் பயணம் போன்றவற்றை அவர்கள் நினைவு கூரவில்லை.

இதையடுத்து இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள உளவியல் விஞ்ஞானிகள், மனிதர்களிடையே விரும்பத் தகாத நினைவுகள் மற்றும் கசப்புணர்வுகள் வேகமாக மங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

ஆகவே இயற்கையாகவே தீய நினைவுகள் விரைவாக மங்கத் தொடங்குகின்றன என்பது நாடுகளையும் கலாச்சாரங்களையும் கடந்த ஒன்றாக உள்ளது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தமது கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

இளரத்தம் பாய்ச்சி மூப்பின் பாதிப்புகளை குறைக்க முடியும்



வயோதிகத்திலும் மூளையில் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூப்படைவதால் உடலில் ஏற்படும் தாக்கங்களை எதிர்காலத்திலே ஒரு நாள் நம்மால் கட்டுப்படுத்திட முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மூப்பான சுண்டெலிகளுக்கு இளம் சுண்டெலிகளின் ரத்தத்தை செலுத்தி ஆய்வுகளை நடத்திய நிலையில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அவ்வாறாக ரத்தம் செலுத்தப்பட்ட வயோதிக சுண்டெலிகளின் மூளைத் திறனும் செயற்பாடுகளும் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இயற்கையான ரசாயனங்களின் பலனால் மூப்படைந்த வர்களின் மூளையிலும் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சுண்டெலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மனிதர்களிடத்திலும் இனி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வை வழிநடத்திய மருத்துவர் டோனி விஸ் கோரே, நேச்சர் மெடிசின் என்ற நூலில் எழுதியுள்ளார்.

ஆனால் டிமென்ஷியா, அல்செய்மர்ஸ் போன்ற மூளை பாதிப்பு நோய்கள் மூப்படைவதால் மட்டும்தான் வருகின்றன என்று கூறுவதற்கில்லை என்று அந்நோய்கள் சம்பந்தமாக அய்க்கிய ராஜ்ஜியத்தில் சேவை ஆற்றிவரும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பை தடுக்கும் - ஆய்வு

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.

அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9  ஆண்டுகளுக்கு பிறகும் ஆரோக்கிய மாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

-விடுதலை,8.5.14

.


நிலா அது... வானத்து மேலே...




பூமி உருவாகி வந்த சமயத்தில் அதன் மீது வேறொரு கோள் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.

பூமி உருவாகி வந்த சமயத்தில் அதன் மீது வேறொரு கோள் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் அப்போலோ விண்கலத்தில் நிலவுக்கு சென் றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துவந்த நிலவுப் பாறைகளில் ரசாயன ஆய்வுகளை மேற் கொண்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நானூற்றைம்பது கோடி ஆண்டுகள் முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கோள் பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள் தான் பூமியைச் சுற்றி ஒன்று திரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்து வருகிறது.

சூரிய குடும்பமும் உருவான விதம் தொடர்பான சாத்தியக்கூறுகளை கணினிகள் மூலமாக அனுமானித்தபோதும் நிலவு உருவானதற்கு பொருந்தி வரக்கூடிய விளக்கமாக இதுதான் இருந்து வருகிறது.

ஆனால் இந்த கோட்பாட்டுக்கு தடய பூர்வ ஆதாரம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்துவந்தது. அப்படி வந்து மோதியதாக கருதப்படும் கோளுக்கு கிரேக்க புராணத் திலிருந்து எடுத்து தியா என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்திருந்தார்கள்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி யாளர்கள் நிலவுப் பயணம் சென்று அங்கிருந்து பாறைகளை எடுத்து வந்த பின்னர் அதில் செய்யப்பட்டிருந்த ஆய்வு களை வைத்து, நிலவுப் பாறைகள் முழுக்க பூமியிலிருந்து சென்றவைதான், அதாவது பூமிப் பாறைகளில் காணப்படும் ரசாயன மூலக்கூறுகளும் அடையாளங்களும்தான் அந்த பாறைகள் முழுமையிலும் தென்பட்ட தாக கருதப்பட்டது.

ஆனால் மேலும் நூதனமான ஆய்வு களை தற்போது நிலவுப்பாறைகளில் மேற்கொண்டபோது, பூமிப் பாறைகளின் ரசாயன கூற்றுக்கு சம்பந்தமில்லாத வெளிக் கோள் தோற்றத்துக்கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனி யிலுள்ள கொயெடிங்கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-விடுதலை,22.8.14

வியாழன், 5 ஜனவரி, 2017

தூக்கத்தில் உளறுவது எதனால்?




யாராவது தூக்கத்தில் நடப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. அதேநேரம், தூக்கத்தில் திடீரென்று ஒரு சிலர் முணுமுணுப்பதையும் உளறு வதையும் நிச்சயம் நீங்களும் கேட்டிருப்பீர்கள்.

தூக்கத்தின்போது இப்படிப் பேசுவதற்குக் காரணம் என்ன? தூக்கத்தின்போது நமது உடல் உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுக்கின்றன என்றே பொதுவாக நம்பப் படுகிறது. பல உறுப்புகள் ஓய்வு எடுத்தாலும், மூளை முழுமையாக ஓய்வு எடுப்பதில்லை. விழிப்பு நிலையிலிருந்து கனவு காணும் நிலைக்குச் சென்றுவிடுகிறது.

இப்படித் தூக்கத்தில் கனவு காணும்போது, நரம்பு களுடன் உள்ள தொடர்பை மூளையின் இயங்கு முறை தற்காலிகமாகத் துண்டித்துவிடுகிறது. இதன் காரணமாகத் தான் தூங்கும்போது பேசுவது, உடல் அசைவுகள் போன்றவை தடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தத் துண்டிப்பு எல்லா நேரமும் கச்சிதமாக நடப்பதில்லை.

பெரும் பிரச்சினையா?

கனவிலிருந்து பெறப்படும் சமிக்ஞைகள் சில நேரம் நரம்புகள் வழியாகக் கசிந்து உடல் மூலம் வெளிப்படலாம். இதன் காரணமாகவே நாம் முணுமுணுக்கிறோம்; முனகு கிறோம். இன்னும் சிலரோ தெளிவாகவும் பேசுவார்கள்; அதிகபட்சமாக நடக்கவும் செய்வார்கள்.

தூக்கத்தில் ஒருவர் பேசுவது தொடர்பற்ற குழப்ப மான வாக்கியங்களாக இருக்கலாம். ஆனால், பெரும் பாலும் அது இலக்கணப் பிழையற்றே இருக்கும். தூங்குபவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த சம்பவத்தின் தாக்கமாக அந்தப் பேச்சு இருக்கலாம். அதேநேரம் சம்பந்தமற்று விசித்திரமாகவும் முட்டாள் தனமாகவும்கூட இருக்கலாம்.

தூக்கத்தில் பேசுவதை ஒரு பிரச்சினையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், ஒருவருக்கு உள்ள மன அழுத்தம், மற்ற உளவியல் பிரச்சினைகள் போன்றவை தூக்கத்தில் பேசுவதை அதிகரிப்பதற்கான சாத்தியம் நிறையவே இருக்கிறது.

-விடுதலை,5.1.17