செவ்வாய், 28 அக்டோபர், 2025

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு



 ஸ்டாக்ஹோம், அக்.8   அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவ நோபல் பரிசு நேற்று முன்​தினம்  (6.10.2025) அறிவிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நேற்று (7.10.2025) வெளி​யிட்​டது.

அமெரிக்​காவை சேர்ந்த ஜான் எம். மார்​டினிஸ், பிரிட்​டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்​கேல் டெவோரெட் ஆகியோர் இந்த ஆண்டு இயற்​பியல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர். மூன்று விஞ்​ஞானிகளும் தற்​போது அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி வரு​கின்​றனர். குவாண்​டம் ஊடுரு​வல் குறித்த ஆய்​வுக்​காக அவர்​களுக்கு நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு இருக்​கிறது.

ஒரு பந்தை சுவரில் எறிந்​தால், அந்த பந்து திரும்பி வரும். இது அனை​வரும் அறிந்த இயற்​பியல் நிகழ்வு ஆகும். ஆனால் சில நுண்​ணியத் துகள்​கள் சுவரை துளைத்து மறு​பக்​கம் செல்​கின்​றன. இதுவே குவாண்​டம் ஊடுரு​வல் என்று அழைக்​கப்​படு​கிறது. கடந்த 1984, 1985-ஆம் ஆண்​டு​களில் குவாண்​டம் ஊடுரு​வலை 3 விஞ்​ஞானிகளும் அறி​வியல்​பூர்​வ​மாக நிரூபித்​தனர். இந்த சாதனைக்​காக அவர்​கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர். மருத்​து​வம், விண்​வெளி, பாது​காப்பு தொழில்​நுட்​பங்​கள், சூப்​பர் கணினி தயாரிப்பு உட்பட பல்​வேறு துறை​களில் குவாண்​டம் ஊடுரு​வல் தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படுகிறது.

-விடுதலை நாளேடு,08.10.25

வேதியியலில் புதிய கண்டுபிடிப்புகள் 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

 


ஸ்டாக்ஹோம்,அக்.9- உலோக-கரிம கட்ட மைப்பை உருவாக்கிய ஜப்பான், ஆஸி. மற்றும் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் அறி விக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக் கப்பட்டுள்ளது. ஜப்பா னின் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் சுசுமு கிடாகவா, மெல் போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன் மற்றும் கலி போர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் உமர் எம். யாகி ஆகியோர் உலோக – கரிம கட்ட மைப்பை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். இவர்கள் உருவாக்கிய கட்டமைப்பில் உள்ள பள்ளங்களில் மூலக் கூறுகள் உள்வந்து வெளியே செல்லும். பாலைவனப் பகுதி காற்றிலிருந்து தண்ணீரை எடுக்கவும், தண்ணீரில் உள்ள மாசுக்களை அகற்றவும், கார்பன் டை ஆக்சைடை ஈர்க்கவும், ஹைட்ரஜனை சேமிக்கவும், இந்த உலோக -கரிம கட்டமைப்பை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.

வேதியியல் ஆராய்ச்சி யாளர்கள் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு காண உலோக – கரிம கட்டமைப்பு புதிய வாய்ப்புகளை அளித்துள்ளதால், இந்த கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானி களுக்கும் வேதியிய லுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக ‘தி ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாடமி’ அறிவித்துள்ளது.

-விடுதலை,09.10.25

சனி, 25 அக்டோபர், 2025

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

 

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி



காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

விடுதலை ஞாயிறு மலர்

காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். ‘புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?’’. ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்’ என்று சிலர் கூறிவருகிறார்கள்.

எதை கணிப்பதாக இருந்தாலும் ஒரு எல்லை, ஒரு தொடக்கம், ஒரு முடிவு அல்லது ஒரு பொருள் தேவை. எடையை கணிக்க ‘நீர்’ அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளது.

நீரின் ‘லிட்டர்’ அளவும், ‘கிலோ’ அளவும் ஒன்று தான். 1 ஒரு லிட்டர் அளவுள்ள நீர், ஒரு கிலோ எடை இருக்கும். இதை அடிப்படையாக வைத்து;  மற்ற பொருள்களின் எடையை, அதாவது அடர்த்தியை வைத்து கணிக்கிறார்கள்.

வெப்ப நிலையை கணிக்க, செல்சியஸ் அளவு பயன்படுத்தப்படுகிறது. பனிக்கட்டியின் உருக தொடங்கும் நிலையை அடிப்படையாக வைத்து, அதிலிருந்து வெப்பநிலையை கணிக்கிறார்கள். அதாவது பனிக்கட்டி உருகத்தொடங்கும் வெப்பநிலை சுழியம் டிகிரி செல்சியஸ் (0°c) ஆகும். நீள, அகலங்களை அளக்க சாண், அடி, முழம் என மனித உறுப்புகளை மய்யமாக வைத்து அளக்கப்பட்டது. கணக்கு போட எண்களை அமைக்க மனிதனின் கைகளில் உள்ள பத்து விரல்களை மய்யமாக வைத்து கணிக்கப்பட்டது. இதற்கு ‘10 அடி மானம்’ என்று பெயர். கணினி ஆன் / ஆப் (இயங்கு நிலை / இயங்கா நிலை) என்ற முறையில் இயங்குவதால், இரண்டடி மானத்தில் இயங்குகிறது.

ஆண்டு கணக்கு பொதுவாக தற்போது கிறிஸ்து பிறப்பை (கிறிஸ்து வாழ்ந்தாரா? இல்லையா? என்பது வேறு செய்தி) மய்யமாக வைத்து கி.மு./ கி.பி. என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.

தமிழர்களின் ஆண்டு ‘சுறவம்’ (தை) மாதத்தில் முதல் நாள் தொடங்குகிறது. அதாவது சூரியன் தென் திசை பக்கமாக இருந்து வடதிசை பக்கமாக செல்லும் நிலையை மய்யமாக வைத்து ஆண்டு தொடங்குகிறது.

அப்போது ஆடு போன்ற ஒத்த வடிவம் உடைய விண்மீன் கூட்டம், வானில் தெரிய தொடங்குவதால் யாரு – ஆடு – ஆண்டு என்ற பெயரும் வந்தது. இந்த குறிகளை மய்யமாக வைத்து, தமிழ் ஆண்டு கணிக்கப்பட்டது.

இயந்திரங்களில், மோட்டார் இயங்கு திறனை, குதிரையின் இழு திறனை மய்யமாக வைத்து, ஒரு குதிரை திறன்; இரு குதிரை திறன்  (Horsepower) என்று கணிக்கப்பட்டது. இதே போல் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தற்போது இந்த அளவுகள் சிலவற்றில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. வெப்பநிலையை கணிக்க செல்சியஸுக்கு (°c)  பதிலாக, பாரன் ஈட் (°F) முறை பயன்படுத்தப்படுகிறது. அடிக்கு பதிலாக மீட்டர். லிட்டருக்கு பதிலாக கிலோ. ஏ.எம்./ பி. எம். முறைக்கு பதிலாக கிரீன் விச் நேரம் ( GMT ). மயில் என்பதற்கு பதிலாக கிலோமீட்டர். குதிரை திறனுக்கு(HP) பதிலாக கிலோ வாட்சு (KW) என்று பலவற்றை குறிப்பிடலாம். கி.மு./ கி.பி. என்பதற்கு பதிலாக பொ.மு./ பொ.பி. என மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த மாறுதல் அனைத்துமே நமது பயன்பாட்டு முறைக்கு எளிதாகவும், ஏற்றால் போல் இருப்பதற்காகவும், மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

செல்சியசில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், பாரன் ஈட்டில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது; ஒரே விடை தான் வரும். அளக்கும் முறையில் தான் வேறுபாடு, கிறிஸ்தவர்கள் கணித்துள்ள கி.மு. / கி.பி. ஆண்டு கணக்குப்படி (கிரிகோரியன் ஆண்டு) தந்தை பெரியார் பிறந்தது கி.பி. 1879 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஆகும். தமிழ் ஆண்டான திருவள்ளுவர் ஆண்டு கணக்குப்படி, தந்தை பெரியார் பிறந்தது தி.பி 1910, புரட்டாசி மாதம். இறந்தது கி.பி. 1973 டிசம்பர், தி.பி. 2004 மார்கழி என்று வரும்.

கிரிகோரியன் ஆண்டு படி கணக்கிட்டாலும் திருவள்ளுவர் ஆண்டு படி கணக்கிட்டாலும் தந்தை பெரியார் வாழ்ந்த ஆண்டுகள் 95 என்று தான் வரும். புத்தர், திருவள்ளுவருக்கு முன்னால் பிறந்திருந்தாலும்; திருவள்ளுவர் ஆண்டின்படி, புத்தர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார் என்பதை கண்டுபிடித்து விடலாம்.

அதே போல் தான், புவியின் சுழற்சியை கொண்டு, ஞாயிற்று (சூரிய) குடும்பத்தின் வயதை  கணக்கிடும் முறையும் ஆகும். அதாவது ‘ஒளி ஆண்டு’ என்கின்ற அளவை வைத்து கணக்கிடுகின்றனர். புவி  ஞாயிற்றை ({சூரியன்) சுற்றி வரும் காலம், ஓர் ஆண்டு ஆகும். இந்த ஓர் ஆண்டில், ஒளி எவ்வளவு தொலைவு பயணிக்கிறதோ, அது ஓர் ‘ஒளி ஆண்டு தொலைவு’ ஆகும். இந்த பயணத் தொலைவு ஏறக்குறைய 9.46 டிரில்லியன் கிலோமீட்டர் (5.88 டிரில்லியன் மைல்) ஆகும்.

புவியின் சுழற்சி வேகம் மாறுபட்டால் ஒழிய, கணக்கில் பிசகு வராது. அப்பொழுதும் கணக்கில் மாற்றம் செய்து கணக்கை சரிப்படுத்தி விடலாம்.

காலத்தையும் அளவையும் நமக்காகத்தான் பயன்படுத்துகிறோம்! வேற்றுக் கோளில் உள்ளவர்களுக்குமா பயன்படுத்துகிறோம்! அப்படியே பார்த்தாலும் ஈடுகட்டிவிடலாம்,

நிலவின் ஈர்ப்பு விசை, புவியின் ஈர்ப்பு விசையை விட 6 மடங்கு குறைவு. ஒரு மனிதனின் எடை புவியில் 60 கிலோகிராம் என்றால், நிலவில் அவரின் எடை 60/6 = 10 கிலோகிராம் இருக்கும்.

இந்த வகையில் அனைத்தையும் கணித்து விடலாம். இருக்கும் அளவுகளே போதுமானவை தான்.

அறிவியலை ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி



தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று  பொருட்கள் தேவை.

அவை

  1. எரிபொருள்
  2. வெப்பம்
  3. உயிர்வளி (ஆக்சிஜன்) என்பன.

இந்த மூன்று பொருள்கள் ஒன்று சேர்ந்தால் தான் தீ உண்டாகும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

எரிந்து கொண்டிருக்கும் பொருளை அணைக்க வேண்டுமானால். எரியும் பொருளின் வெப்பத்தை குறைக்க வேண்டும். அதற்காக தண்ணீர் அல்லது தண்ணீரால் நனைக்கப்பட்ட பொருள் கொண்டு அணைக்கலாம். (குளிர்விக்கும் முறை)

அடுத்தது உயிர்வளி எனப்படும் ஆக்சிஜன் கிடைப்பதை தடை செய்ய வேண்டும். தீயை மூட வேண்டும் அல்லது கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) எனப்படும் கரியமில வளியினை படரவிட்டு அணைக்க வேண்டும். (போர்வை முறை)

பெரிய அளவில் எரிந்து கொண்டிருக்கும் போது; தீ மேலும் பரவாமல் இருக்க, பக்கத்தில் உள்ள எரிபொருளை அப்புறப்படுத்த வேண்டும். (‘தீ’க்கு பட்டினி போடும் முறை)

  பூமியில் மட்டுமே தீ

நமது புவியில் மட்டுமே எளிதில் தீ உண்டாகும். மற்ற கோள்களிலோ விண்மீன்களிலோ, பால்வெளி மண்டலங் களிலோ (கேலக்சி) கூட தீ உண்டாகாது. நம் புவியில் மட்டுமே உயிர்வளி (ஆக்சிஜன் )உள்ளது. அதனால் இங்கு எளிதில் தீ உண்டாகின்றது

அதோடு மட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் (காற்றில்) ஒரு குறிப்பிட்ட அளவில் உயிர்வளி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தீ உண்டாகும். நமது வளிமண்டலத்தில் 20.95% உயிர்வளி உள்ளது. இது தீ உண்டாக போதுமான அளவு ஆகும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

தற்போது உள்ள இந்த விழுக்காட்டிற்கு, அதாவது 25%க்கு மேல் உயிர் வளி இருந்தால்  தற்போதுள்ள சாதாரண வெப்பநிலையிலேயே தானாகவே தீப்பிடித்து எரியும் நிலை ஏற்பட்டுவிடும். 15%க்கு கீழ் உயிர்வளி குறைந்தால் தீ அணைந்து விடும். தீயை உண்டாக்க முடியாது.

வெப்பம் எப்படி உண்டாகிறது?

வெப்பம் உண்டாக உராய்வு மட்டுமே போதும். இரண்டு பொருள்கள் உராயும்போது வெப்பம் உண்டாகிறது. அதேபோல் பொருள்கள் வினை புரியும்போதும் உராய்வு ஏற்பட்டு வெப்பம் உண்டா கிறது.

கட்டுரை, ஞாயிறு மலர்

மின் விளக்கு எரிகிறது என்று சொல்கிறோம் ஆனால் உண்மையில் மின்விளக்கு எரிவதில்லை. வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்கிறது.

மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்கு போன்றவற்றை எரிய விட்டுக் கொண்டு இருந்த நாம், பழக்கத்தின் பேரில் மின் விளக்கையும் எரிகிறது என்கிறோம். ஒளிர்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 ‘அக்னி பகவான்’
பெற்ற சாபமாம்

சிவபெருமான் இமய மலையின் உச்சியில், தன் மனைவி பார்வதியுடன் 100 தேவ ஆண்டுகள் உல்லாசமாக இருந்து, உடலுறவு இன்பத்தில் ஈடுபட்டு வந்தானாம்; இதனிடையே அக்னி பகவான் ‘புறா’ உருவம் கொண்டு அந்த இடத்திற்கு சென்று சிவபெருமானின் லீலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் சிவனின் விந்து நழுவி வீணானதாம். அதனால் பார்வதிதேவி தனக்கு குழந்தை பிறக்க விடாமல் செய்த அக்னி பகவானை “அக்னி(தீ)க்கு சயரோகம் (எலும்புருக்கி நோய்) பிடித்தது போல் உடன் புகையும் ஒரு பகுதியாக சேர்ந்து வரும்.”என்று சபித்து விட்டாளாம். அதனால் தான் தீ எரியும் போது புகையும் சேர்ந்து வருகிறதாம்.  காளிதாசர் இயற்றிய ‘’குமாரசம்பவம்’’ சருக்கம் – 10இல் இந்த கதை கூறப்பட்டுள்ளது.

உண்மையில் புகை எதனால் ஏற்படுகிறது

நீரை சூடு படுத்தும் போது நீரிலிருந்து நீராவி வெளி வருகிறது. இதுவும் ஒரு வகை புகை தான். நீரில் இருந்து வெளி வருவதால் அதை நாம் வேறுபடுத்தி நீராவி என்று சொல்கிறோம்.

 ஒகேனக்கல்

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்று ஒரு சுற்றுலா இடம் உள்ளது. ஒகேனக்கல் என்பது கன்னட மொழி பெயர். ‘ஒகனே’ என்றால் புகை. அதாவது ‘புகையும் கல்’ என்று பொருள். கல்லின் மீது நீர் மோதி சூடாகி, புகை போன்ற ஒரு நீர்த்துளிகளை உண்டாக்குகிறது. இதைத்தான் புகை என்கின்றனர்.

நாம் நடைமுறையில் புகை என்று சொல்வதைப் பற்றி பார்ப்போம்.

பொருட்கள் எரியும் போது தொடர்வினை ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து எரிகிறது. இதனால் இந்த பொருளில் உள்ள கரி, நீர் ஆகியவை ஆவி வடிவில் வெளியேறுகின்றன. அதாவது கரித்துகள், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் நீராவி கலந்த ஒரு பொருள் வெளியேறுகிறது இவைதான் கருநிற புகையாக தெரிகிறது.

பொருள் முழுமையாக எரிக்கப்பட்டால் புகை வருவதே தெரியாது. அரைகுறையாக எரிக்கப்படும் போது தான் புகை வருகிறது.

இந்த அறிவியல் உண்மை தெரியாத காலத்தில் மதத்தின் பெயரால் முட்டாள்தனமாக கருத்துகளை பரப்பியுள்ளனர். இதுபோன்ற கருத்துகளை மதவெறியர்கள் எப்படியாவது பாட புத்தகங்களில் சேர்த்துவிடலாம் என்று முயன்று வருகின்றனர்.

-விடுதலை ஞாயிறு மலர், 25.10.2025


சனி, 27 செப்டம்பர், 2025

பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை மூண்டால்…-செ.ர.பார்த்தசாரதி


பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை மூண்டால்…-செ.ர.பார்த்தசாரதி

கட்டுரை, ஞாயிறு மலர்

பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக சொல்லி; ‘மாயாஜால வித்தை’ (தந்திரக் காட்சி) காட்டுபவர்கள், கடைசியில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடாமலேயே மூட்டை கட்டி விடுவர்.

இது எதனால் என்றால் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விட்டால், கீரி பாம்பை கொன்று விடும் அதனால்.!

பாம்புகளின் வகைகள்

பாம்புகளில் நஞ்சு உள்ளவை நஞ்சு இல்லாதவை என இரண்டு வகை உள்ளது.  அதேபோல் நஞ்சு உள்ளவைகளிலும் இரண்டு வகைகள் உள்ளன. அவை:

1.. நீயூரோ டாக்சிக்’ (Neurotoxic) உள்ளவை.  2.‘ஈமோ டாக்சிக்’(Hemotoxic) உள்ளவை. என்பனவாகும்.

நியூரோ டாக்சிக் நஞ்சு உடலின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ‘ஈமோ டாக்சிக்’ நஞ்சு இரத்தத்தைப் பாதித்து, திசு சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

நாகப்பாம்புகள், மாம்பாக்கள் மற்றும் கிரெய்ட்கள் ‘நியூரோ டாக்சிக்’ நஞ்சை கொண்டுள்ளன, அதே நேரத்தில் ‘ராட்டில் ஸ்னேக்ஸ்’ மற்றும் ‘அட்டர்ஸ்’ போன்ற விரியன் பாம்புகள் ‘ஈமோ டாக்சிக்’ நஞ்சை கொண்டுள்ளன.

கீரிப்பிள்ளையும் பாம்பும்

கீரிப்பிள்ளைக்கும் பாம்புக்கும் சண்டை மூண்டால் கீரிப்பிள்ளையே வெல்லும்.   கீரிப்பிள்ளை விரைந்து செயல்படும் ஆற்றல் கொண்டது. இதனால் பாம்பிடம் சண்டை போட்டு, போக்கு காட்டி, பாம்பை சோர்வடைய வைக்கும். கீரிப்பிள்ளை தனது உடலில் இருக்கும் மயிர்களை சிலிர்க்க வைத்து பாம்புக்கு பெரிய உடலாக காண்பிக்கும்; இதனால் பாம்பின் கடி கீரிப்பிள்ளையின் உடல் மீது பதியாமல், மயிர் பகுதியிலேயே பதியும்.  அதோடு அதன் தோல் பகுதி மிகவும் கடினமானதால், கடியும் சரியாக பதியாது. கீரிப்பிள்ளை பாம்பின் தலையை சிதைத்தும்; கழுத்தை குதறியும் கொன்றுவிடும். கீரிப்பிள்ளையின் கடி மிக வலிமை வாய்ந்தது.  அப்படியே பாம்பின் கொத்து, கீரியின் உடம்பில் பட்டு நஞ்சு பாய்ந்தாலும் பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாது. காரணம் கீரிப்பிள்ளையின் உடம்பில் பாம்பின் நஞ்சுக்கான எதிர் புரதம் (Antibody), அதாவது மாறுபட்ட ‘அசிட்டோகோலின் ஏற்பி’ (Acetylcholine receptor) என்ற நச்சு முறிவு பொருள் (anti venom) உள்ளது. அதேபோல் கிளைக்கோ புரதம் ((Glycoprotein) என்கிற நஞ்சு எதிர்ப்பு பொருளும் உள்ளது. இந்தப் பொருள்கள் பாம்பின் நஞ்சை முறித்து விடும். இதனால் கீரிப்பிள்ளை பாம்பு கடியால் இறக்காது தப்பித்துவிடும்.   இதே போல் பாம்பு நஞ்சிற்கு எதிரான ‘புரதப் பொருள்’ உள்ள பல உயிரினங்கள் உள்ளன.

அதில் ஒன்று குதிரை. குதிரையின் காலில் பாம்பு கொத்திய பிறகு, குதிரையின் உடம்பில் பாம்பு நஞ்சுக்கு எதிரான புரதம் சுரந்து இரத்தத்தில் கலந்து விடும். இதனால் குதிரை பிழைத்து விடும்.

இதை பயன்படுத்தி குதிரையின் இரத்தத்திலிருந்து பாம்பு கடிக்கு ‘முறிவு மருந்து’ தயாரிக்கிறார்கள்.

 பாம்பு கடிக்கு மருந்து

பாம்பின் நஞ்சை சிறிய அளவில் மாற்றம் செய்து, ஊசி மூலம் குதிரைக்கு செலுத்துகிறார்கள். சில நாட்களில் குதிரையின் உடம்பில் ‘நஞ்சு முறிவு புரதம்’ சுரக்கிறது. குதிரையின் இரத்தத்தில் இருக்கக்கூடிய இந்த புரதத்தை பிரித்தெடுத்து, மனிதர்களுக்கு ஏற்படும் பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

அதேபோல், கோழியின் உடலில் சிறிய அளவில் பாம்பின் நஞ்சை செலுத்தி;, அது இடும் முட்டையின் மஞ்சள் கருவைக் கொண்டு பாம்பு கடிக்கு மருந்து தயாரிக்கின்றனர். பாம்பு கடிக்கு மருந்து உயிரினத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. ‘இறைச்சி உணவு’ கூடாது என்பவர்கள் (Non-Vegetarian); பாம்பு கடிக்கு பலியாக வேண்டியது தான்!

- விடுதலை ஞாயிறு மலர், 27.09.2025 

1. குதிரை மூலம் பாம்பு கடிக்கு நஞ்சு முறிவு மருந்து தயாரிக்கும் முறை

2. கோழி மூலம் பாம்பு கடிக்கு நஞ்சு முறிவு மருந்து தயாரிக்கும் முறை


வெள்ளி, 26 செப்டம்பர், 2025

மனித இனம் முற்றிலும் அழிந்து போக இருந்த நிலையில் வெறும் 2,280 பேரில் இருந்து முகிழ்த்த புதிய மனித இனம்


 ஒன்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, மனித இனத்தின் மூதாதையர்கள் ஒரு கடுமையான மக்கள்தொகை குறைவை (population bottleneck) எதிர்கொண்டனர். இது மனித இனத்தை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றது.

2023-ஆம் ஆண்டு ‘சயின்ஸ்’ (Science) இதழில் வெளியான ஒரு மரபணு ஆய்வு, அந்தக் காலகட்டத்தில் உலகின் மொத்த இனப்பெருக்கம் செய்யக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கை வெறும் 1,280 ஆக குறைந்திருக்கலாம் என்று கூறுகிறது.

இந்த குறைவு சுமார் 1,17,000 ஆண்டுகள் நீடித்திருக்கலாம். இந்த ஆய்வு ‘ஃபிட்கோல்’ (FitCoal) என்ற புதிய புள்ளியியல் முறையைப் பயன்படுத்தி, 3,000-க்கும் மேற்பட்ட நவீன மனிதர்களின் மரபணுக்களை பகுப்பாய்வு செய்தது. முடிவுகள், அந்தக் காலத்தில் நமது மூதாதையர்களின் மரபணுக்களில் 98.7% இழப்பு ஏற்பட்டதை வெளிப்படுத்தின.

ஸ்மித்சோனியன் இதழ் (Smithsonian Magazine) போன்ற ஆதாரங்களின்படி, இந்த மக்கள்தொகை குறைவு கடுமையான பனிப்பாறை உருவாக்கம், நீண்ட வறட்சி மற்றும் தீவிர காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கலாம். இவை உணவு ஆதாரங்களை அழித்து, உயிர்வாழ்வை பெரும் சவாலாக மாற்றின.

சுவாரஸ்யமாக, இந்தக் காலக்கட்டம் ஆப்பிரிக்கா மற்றும் யூரேசியாவின் புதைபடிவ பதிவுகளில் உள்ள ஒரு அறிய முடியாத இடைவெளியுடன் ஒத்துப்போகிறது. இது நவீன மனிதர்கள் (Homo sapiens), நியண்டர்தால்கள் மற்றும் டெனிசோவன்களின் கடைசி பொதுவான மூதாதையரின் தோற்றத்தைக் குறிக்கலாம்.

புதிய அறிவியல் ஆய்வுகள் மற்றும் அகழ்வாய்வு தகவல்கள்

2023 ஆய்வுக்கு பிறகு, 2024-ஆம் ஆண்டு ‘புரோசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸ்’ (PNAS) இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வு இந்த நிகழ்வை மேலும் ஆழமாக விளக்குகிறது.

இத்தாலியின் மிலன் பல்கலைக்கழகத்தின் ஜியோவானி முட்டோனி மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் டென்னிஸ் கென்ட் ஆகியோரால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்த மக்கள்தொகை குறைவை ஆப்பிரிக்காவிலிருந்து யூரேசியாவுக்கு ஒரு பெரிய இடம்பெயர்வுடன் (migration) இணைக்கிறது.

இது மிட்-ப்ளெயிஸ்டோசீன் டிரான்சிஷன் (Mid-Pleistocene Transition) என்ற காலநிலை மாற்ற காலத்துடன் ஒத்துப்போகிறது, அப்போது உலகளாவிய கடல் மட்டங்கள் வீழ்ச்சியடைந்து, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் வறட்சி அதிகரித்தது. இந்த காலத்தில் சவன்னா பகுதிகள் விரிவடைந்து, உணவு மற்றும் நீர் ஆதாரங்கள் குறைந்தன.

இந்த ஆய்வு யூரேசியாவில் உள்ள பழங்கால ஹோமினிட் (hominid) வாழிட தளங்களின் பதிவுகளை மறுபரிசீலனை செய்தது. சுமார் 9 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தளங்கள் நம்பகமான தேதிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டன, இது இடம்பெயர்வை உறுதிப்படுத்துகிறது.

கடல் வண்டல் பதிவுகள் (marine sediment records) மூலம் ஆக்சிஜன் அய்சோடோப் விகிதங்களை ஆய்வு செய்ததில், காலநிலை மாற்றங்கள் இந்த இடம்பெயர்வை தூண்டியதாக தெரிகிறது. குறைந்த கடல் மட்டங்கள் நிலப்பாலங்களை உருவாக்கி, ஆப்பிரிக்காவிலிருந்து யூரேசியாவுக்கு செல்ல உதவின. இந்த இடம்பெயர்வு மூலம், ஆரம்பகால ஹோமோ இனங்கள் (Homo erectus போன்றவை) அழிவை தவிர்த்தன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், 2024-ஆம் ஆண்டு இறுதியில் வெளியான ஆய்வுகள் இந்த நிகழ்வை காலநிலை மாற்றத்துடன் இணைத்து, மரபணு பன்முகத்தன்மை இழப்பை விளக்குகின்றன. 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான ஒரு கட்டுரை, இந்த நிகழ்வை மனித இனத்தின் “மிகவும் ஆபத்தான அத்தியாயம்” என்று விவரிக்கிறது, மரபணு சான்றுகளை மேலும் உறுதிப்படுத்துகிறது.

அகழ்வாய்வு (archaeological) சான்றுகள்: இந்த காலகட்டத்தின் புதைபடிவங்கள் அரிதாகவே உள்ளன, ஆனால் யூரேசியாவில் 9 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹோமினிட் தளங்கள் (எ.கா., ஐரோப்பா மற்றும் ஆசியாவில்) இடம்பெயர்வை சுட்டிக்காட்டுகின்றன. ஆப்பிரிக்காவில் புதைபடிவ இடைவெளி (fossil gap) இந்த bottleneck ஐ உறுதிப்படுத்துகிறது, ஆனால் முழுமையான சான்றுகள் இல்லை.

விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள்

இந்த நிகழ்வு நமது உயிர்வாழ்வின் கதையில் தகவமைப்பு (adaptation) மற்றும் மீண்டெழுதலின் (resilience) முக்கியத்துவத்தை காட்டுகிறது. காலநிலை மாற்றங்கள் மற்றும் இடம்பெயர்வுகள் மூலம் நமது மூதாதையர்கள் அழிவை தவிர்த்தனர்.

இன்று, காலநிலை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நமக்கு இது ஒரு எச்சரிக்கையாக உள்ளது. புதிய ஆய்வுகள் இந்த வரலாற்றை மேலும் விரிவாக்குகின்றன,  மேலும் அகழ்வாய்வுகள் நடத்தும் போது மனித இனத்தின் இன்றைய பரினாமவளர்ச்சியின் துவக்கப்புள்ளி கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

-விடுதலை ஞாயிறு மலர் 6.9.25

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

வெளி’ என்பது வெற்றிடம் அல்லவாம்! விந்தையான சுரங்கமாம்!



 ஸ்பேஸ் அல்லது விண்வெளி என்றால் வெற்றிடம் என்றுதான் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் விண்வெளி உண்மையில் வெற்றிடம் கிடையாது என்று தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நமது பூமி இருக்கும் சூரியக் குடும்பத்திலிருந்து தொலைதூர நட்சத்திரங்கள் வரை ஒரு விந்தையான சுரங்கப்பாதை பரவியிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் காலங்காலமாக நம்பி வந்த நிலையில், தற்போது இதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது.

இந்த சுரங்கப்பாதை சூடான, குறைந்த அடர்த்தி கொண்ட பிளாஸ்மாவால் ஆனது. இ-ரோசிட்டா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, நம் பால்வெளியின் மறைந்திருக்கும் கட்டமைப்புகள் பற்றிய புதிய தகவல்களை அளிக்கிறது. அத்துடன், விண்வெளி வெறுமையானது என்ற நீண்டகாலக் கருத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது.

பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகளிடையே ஒரு பொதுவான கருத்து நிலவி வந்தது. அதாவது, சூரியன் “உள்ளூர் சூடான குமிழி” எனப்படும் ஒரு விந்தையான பகுதிக்குள் அமைந்துள்ளது என்பதுதான் அது. இந்தக் குமிழி சுமார் 300 ஒளி ஆண்டுகள் அகலமானது. ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். ஓர் ஆண்டு முழுவதும் இது எவ்வளவு தொலைவில் பயணிக்கிறதோ அதைத்தான் ஒளி ஆண்டு என்கிறார்கள்.

இந்த சூடான குமிழி, சூப்பர்நோவா வெடிப்புகளால் இது உருவானது. சுற்றியுள்ள வாயுவை சூடாக்கி, சூடான, மெல்லிய பிளாஸ்மாவின் ஒரு குமிழியை உருவாக்கின. இதுவரை, இது தனிமைப்படுத்தப்பட்ட ஓர் அம்சமாகவே கருதப்பட்டது.

மாக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் எல். எல். சாலா மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நாம் முன்னாடி நம்பிக்கொண்டிருந்ததை விட இந்தக் குமிழி அதிகத் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆய்வில் சென்டாரஸ் விண்மீன் குழுவை நோக்கி நீட்டிக்கப்படும் ஒரு சுரங்கப்பாதை போன்ற அமைப்பையும், மேலும் கேனிஸ் மேஜர் திசை நோக்கி செல்லும் மற்றொரு பாதையையும் வெளிப்படுத்தியுள்ளன.

இப்போது நாம் இந்த குழியின் மய்யத்திற்கு அருகில் இருக்கிறோம், இது திட்டமிட்டது அல்ல, தற்செயலானது. மனித இனம் உருவாவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இது உருவாகிவிட்டது. குறிப்பாகச் சொல்வதெனில் நாம் வான வேடிக்கைகளை தவற விட்டுவிட்டோம். அது மட்டுமல்லாது, ஒரு பெரிய அண்ட நிகழ்வின் விளைவுக்குள் நாம் தற்செயலாக நுழைந்தது போல உள்ளது. எதிர்காலத்தில் இது பற்றிய ஆய்வு அதிகரிக்கும் அப்போது நாம் இன்னும் அதிகமான விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

- விடுதலை நாளேடு,21.8.25