திங்கள், 10 அக்டோபர், 2016

ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக்கூடிய மிக நுண்ணிய கேமரா கண்டுபிடிப்பு

ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக்கூடிய அளவிலான மிக நுண்ணிய கேமராவை ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
ஒரு உப்புத் துகள் அளவு கொண்ட இந்த கேமராவை மருத்துவ சேவைகளுக்கும், இரகசியக் கண்காணிப்புப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முப்பரிமாண அச்சிடல் முறையைப் பயன்படுத்தி இந்த கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு தலை முடிகளின் அகலம் கொண்ட கண்ணாடி இழைகளில் பொருத்தக்கூடிய இந்த கேமராவிலுள்ள லென்ஸ்கள் தலா 0.1 மி.மீ. அகலம் கொண்டது. இதனைக் கொண்டு 3 மி.மீ. தொலைவிலிருக்கும் பொருட்களையும் துல்லியமாகக் காண முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதில் பொருத்தப் பட்டுள்ள 1.7 மீட்டர் நீள கண்ணாடி இழைகள், கேமரா படம் பிடிக்கும் காட்சிகளை மின் வடிவில் கடத்தி திரைக்குக் கொண்டு வருகின்றன.இந்தக் கேமராக்கள் மருத்துவத் துறைக்கு மிகவும் பயன்படக்கூடியவை.
உடலுக்குள் இருக்கும் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை களைக் கண்டறியும் எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளை இந்த கேமராக்கள் மிகவும் எளிமையாக்கும் என நம்பப் படுகிறது.இந்தக் கேமராக்களை ஊசி மூலம் மூளைக்குள் செலுத்தியும் பரிசோதிக்கலாம். இதுமட்டுமின்றி, கண் காணிப்புப் பணிகளுக்கு இந்த கேமராக்கள் பேருதவியாக இருக்கும். கண்ணுக்குப் புலப்படாத கண்காணிப்புக் கேமராக்களாகவும் இவற்றைப் பயன்படுத்த முடியும். இந்த ஆய்வின் வெற்றி, மருத்துவ சேவை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
-விடுதலை,7.7.16

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

அஜினோ மோட்டோ அள்ளி வழங்கும் நோய்கள்

மோனோ சோடியம் குளுட்டோமேட்’ என்ற வேதிப்பெயர் கொண்ட உப்பு, அஜினோ மோட்டோ ஆகும்.

இதன் விஷத்தன்மை குழந்தைகளுக்குப் பலவித ஆபத்துக்களை உண்டாக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது கலந்த உணவைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பு வெகுவாகக் குறையும். இதனால் உடல் வளர்ச்சி குறையும்.

மூளையில் ‘ஆர்க்குவேட் நுக்ளியஸ்’ என்னும் பகுதியை பாதிப்பதால் எடை தாறுமாறாக அதிகரிக்கும். மூளை மட்டுமன்றி இரைப்பை, குடல், கல்லீரல் போன்ற உறுப்புகளில் அழற்சியையும் இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளுக்கு காரணம் கண்டுபிக்க முடியாத வயிற்று வலி உண்டாகும்.

ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இதைச் சாப்பிட்டதும் மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு உடல் வியர்க்க ஆரம்பிக்கும். அஜினோ மோட்டோவைப் போன்றே விரைவு உணவுக்கடைகளிலும், 5 நட்சத்திர ஓட்டல்களிலும் பயன்படுத்தப்படும். ‘ஜீரோஏடேட் ஹைட்ரோஜெனடேட்’ என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்-படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு உள்ளது. இந்த எண்ணெய்யை பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது. பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது.
பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்-கிழங்கு வற்றல், பீட்சா, சாக்லெட் மற்றும் சில துரித உணவுகள் இந்த

எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உண்பதால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இதயநோய், புற்றுநோய் உடல் பருமன் எல்லாம் வந்துவிடும்.

விருந்துகளில் உண்போர் வயிற்று வலியால் பாதிக்கப்படுவது இதனால்தான். இவற்றால் உடலில் அனைத்துவிதமான நோய்களும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமே! 

தகவல்: கெ.நா.சாமி

-உண்மை,16-30.9.16

திங்கள், 5 செப்டம்பர், 2016

கற்கால மனிதன் கயிறு தயாரித்தது எப்படி?


40,000 ஆண்டுகளுக்கு முன்பு அய்ரோப்பாவில் கால் பதித்த ஆதி மனிதர்கள், வேட்டைக்கு மிக அவ சியமான கயிறை எவ்வாறு தயாரித்தனர் என்பது குறித்து இதுவரை இருந்து வந்த மர்மம் விலகியுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி யில் வெளியாகும் தொல் லியல் துறைக்கான அறி வியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அய்ரோப்பாவில் கற்கால மனிதர்கள் கயிறுகளைப் பயன்படுத்தி வந்தனர் என்பது, அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பானைகளில் பதிந்துள்ள கயிறுகளின் தடங்கள் மூலம் தெரிய வருகிறது.
மேலும், அந்தக் காலகட்டத்திய கலைப் பொருள்கள் சிலவற்றிலும் கயிறு சித்திரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆதி மனிதர்கள் கயிறுகளைப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தாலும், அவர்கள் அந்தக் கயிறை எவ்வாறு தயாரித்தனர் என்ற விவரம் இதுவரை தெரியாமல் இருந்து வந்தது.
இந்தச் சூழலில், டியூபிங்கென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் கனார்டு என்பவரால் புகழ்பெற்ற ஹோலே ஃபெல்ஸ் குகையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளும், அதனைக் கொண்டு தொல்லியல் நிபுணர் வீர்லே ராட்ஸ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வும் அந்த மர்மத்தை விலக்கியது.
நிக்கோலஸ் கண்டெடுத்த அந்தப் பொருள், அழிந்துபோன "மாமத்' யானை இனத்தின் தந்தத் துண்டு ஆகும்.
20.4 செ.மீ. நீளமுள்ள அந்தத் தந்தத்தில், 7 முதல் 9 மி.மீ. விட்டம் கொண்ட நான்கு துளைகள் மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இதுபோன்ற துளைகளுடன் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் கம்பிகளை நேராக்கும் கருவிகள் எனவும், அலங்காரப் பொருள்கள் எனவும் கூறப்பட்டு வந்தன. ஆனால், நிக்கோலஸ் கனார்டு கண்டெடுத்த தந்தத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், அதிலுள்ள துளைகள் வெறும் அலங்காரத்துக்காக செதுக்கப்படவில்லை எனவும், அது கயிறுகளைத் திரிப்பதற்கு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவி எனவும் தெரிவித்தனர்.
இதன் மூலம், கற்கால மனிதர்களின் கயிறு தயாரிப்பு முறை குறித்து இதுவரை இருந்து வந்த புதிருக்கு விடை கிடைத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலை ஞாயிறு மலர், 30.7.16

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

இதயத்தின் எலெக்ட்ரிக் சர்க்யூட்!

இதயத்தின் வலது மேலறையின் வெளிப்பக்கத்தில் ‘எஸ்.ஏ.நோடு’(Sino Atrial Node) என்று ஒரு புடைப்பு இருக்கிறது. இதில்தான் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதயத்தைத் துடிக்கச் செய்வதும் இதுதான். இரண்டு மேலறைகளுக்கும் இரண்டு கீழறைகளுக்கும் நடுவில் ‘ஏ.வி.நோடு’ (Atrio Ventricular Node) இருக்கிறது. இதற்குக் கீழே ‘ஹிஸ்_பர்கின்ஜி நார்க்கற்றைகள்’ (Bundle of His-Purkinje) இதனுடன் இணைக்கப்-பட்டிருக்கின்றன. இவை கிளைகளாகப் பிரிந்து வலது, இடது கீழறைகளை அடைகின்றன. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பை இதயத்தின் ‘எலெக்ட்ரிக் சர்க்யூட்’ எனச் சொல்லலாம். எஸ்.ஏ.நோடில் நிமிடத்துக்கு 72 தடவை மின்தூண்டல்கள் உற்பத்தியாகி, ஏ.வி.நோடுக்குப் பாய்கிறது. இந்த சர்க்யூட் மூலம் முறைப்படி இதயத் தசைகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுவதால், இதயம் சீராகத் துடிக்கிறது.

-உண்மை இதழ்,1-15.8.16

சனி, 3 செப்டம்பர், 2016

செத்தவர் பிழைத்த அதிசயம்!

இறந்துவிட்டார் என மருத்துவமனை அறிவித்து 15 மணி நேரம் கழித்து, மயானத்திற்கு தூக்கிச் செல்லும்போது, உயிர் திரும்பினால் அதனை என்ன சொல்வார்கள்?

எமன் தப்பாகக் கணக்கிட்டு உயிரைக் கொண்டுசென்று உண்மை தெரிந்து மீண்டும் உயிரைக் கொடுத்தான் என்பர். அவ்வாறு பிழைத்த சிலரும் எமலோகம் போய் எமனைச் சந்தித்ததாய் கதை சொல்வர்.

ஆனால், இவை கற்பனைகள்; கதை அளப்புகள். உண்மை என்ன? கீழேயுள்ள உண்மை நிகழ்வைப் படியுங்கள்.

படத்திலுள்ள பத்மாபாய் லோதா ராஜஸ்தானை சேர்ந்தவர். 59 வயதாகும் இவருக்கு மே 16ஆம் தேதி திடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு கட்டத்தில் வென்டிலேட்டர் வைக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு இறந்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. பிறகு அடுத்த நாள் காலை 9 மணிவரை மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டார்.

இதனிடையே ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ் நாட்டில் இருக்கும் அவருடைய சொந்தபந்தங்கள், மும்பையில் வசிக்கும் இரு மகள்களுக்கு தகவல் சென்று அவர்களும் விமானத்தில் பறந்து வந்தனர்.

17ஆம் தேதி, மருத்துவமனையிலிருந்து உடல் எடுத்து வரப்பட்டு இறுதிச் சடங்குகளுக்கான சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் அவர் அருகில் அமர்ந்து கூர்ந்து அவரை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி! அவரது உடலில் சில அசைவுகள் ஏற்பட, அடுத்த சில நிமிடங்களில், பத்மாபாய் சுவாசிப்பது நன்கு தெரிந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அய்.சி.வார்ட்டில் சேர்க்கப்பட்டு, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். சீக்கிரம் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிவித்தது.

இதனிடையே பத்மாபாய்க்கு உயிர் திரும்பியதால் நெருங்கிய உறவுகளிடையே சந்தோஷம்.

ஆகவே, மூச்சுத்திணறலால் ஒருவருக்கு மூச்சு ஒரு கட்டத்தில் நின்றுவிட்டாலும், தானே, திரும்ப வாய்ப்பு உள்ளது. இதுதான் செத்தவர் பிழைத்தாகக் கூறப்படும் நிகழ்வு. எனவே, இறப்பை மருத்துவர்கள் ஒருமுறைக்கு சிலமுறை சோதித்து உறுதிசெய்ய வேண்டும்!
-உண்மை இதழ், 1-.15.7.16

வியாழன், 30 ஜூன், 2016

செல்ல நாயின் திசுக்களில் இருந்து இரண்டு குட்டி நாய்கள்



தங்களது செல்ல நாய் இறந்துவிட் டதால் அதே போல் நாயை உருவாக்க நினைத்த லண்டன் இணையரின் ஆசையை நிறைவேற்றிய கொரிய உயிர் அறிவியலாளர்கள்  நாயின் உடலில் இருந்து திசுவை எடுத்து அதே போல் தோற்றம் மற்றும் குணநலமுடைய இரண்டு குட்டி நாய்களை உருவாக்கிக் காட்டி சாதனை படைத்துள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த லாரா ஜாக்வின் ரிச்சர்ட் ரெமெடோ இவர்கள் நீண்ட காலமாக பாக்ஸர் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றைச் செல்லமாக வளர்த்து வந்தனர். இதற்கு டைலின் என்று பெயர் சூட்டினர் இந்த நாய் முதுமையின் காரணமாக விரைவில் இறந்து போகும் நிலை ஏறபட்டது. நாயின் பிரிவை தாங்களால் தாங்கமுடியாது என்ற நிலையில் தாங்கள் வளர்க்கும் நாயைப் போன்றே குளோனிங் (நாயின் திசுக்களில் புதிய உயிர் உருவாக்குதல்) முறையில் வேறொருநாயை உருவாக்க நினைத் தனர். இதனை அடுத்து பல்வேறு அறிவியல் ஆய்வாளர்களிடம் தங்களின் விருப்பத்தை கேட்டுக்கொண்டனர்.
கொரியாவைச் சேர்ந்த சோம் உயிர் ஆய்வியல் கழகம் இவர்களின் வேண்டு கோளை ஏற்று அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டது. இதனிடையே நாய் மரணிக்கும் முன்பாக அதன் உடலின் நாக்கு பாகத்தில் உள்ள திசுக்களை எடுத்துக் கொண்டது. திசுவை எடுத்த சில நாட்களில் முதுமையின் காரணமாக, டைலின் என்று பெயர்சூட்டப்பட்ட அந்த நாய் மரணமடைந்தது. இந்த நிலையில் கொரிய அறிவியலாளர்கள் டயலின் நாயின் திசுவை பெண் பாக்சர் இன நாயின் கருமுட்டையையும் இணைத்து சோதனைக்குழாயில் வைத்து கரு முட்டை  மற்றும் திசுக்கள் இணைந்து புதிய கரு ஒன்றை உருவாக்கினர்.
புதிதாக உருவான கருவை பெண் நாயின் கருப்பையில் செலுத்தினர். பெண் நாயின் கருப்பபையில் முழு மையாக வளர்ச்சி யடைந்த நிலை யில் இரண்டு நாய்க் குட்டிகளை ஈன் றுள்ளது. அந்த நாய்க்குட்டிகள் இரண்டுமே மரணம்டைந்த டையலின் நாயைப் பிரதி எடுத்ததைப் போல் உள்ளன.
இது குறித்து லாரா ஜாக்வின் த கார்டியன் என்ற இதழுக்கு கூறியதா வது,  நாங்கள் மீண்டும் எங்கள் டயலின் வருகையை எதிர்ப்பார்த்திருக்கிறோம். முதலில் ஒரு டயலின் தான் இருந்தது, தற்போது எங்க ளுக்கு புத்தாண்டு பரிசாக இரண்டு டயலின்கள் வருகை தரவிருக்கிறது என்று கூறினார்.
தென் கொரிய உயிர் ஆய்வாளர்களின் முதல் முயற்சியிலேயே குளோனிங் குட்டிகள் வெற்றிகரமாக உருவாகியுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் பலர் தங்களது செல்லப்பிராணி களை இவ்வாறு மீண்டும் புதிதாக ஒரே தோற்றம் குணநலமுடைய குட்டி களை உருவாக்க முடியும் என சோம் உயிர் ஆய்வியல் கழகம் தலைமை ஆய்வாளர் பேராசிரியர் ஹூ சுக் வாங் கூறினார்.
-விடுதலை ஞா.ம.,,2.1.16

திங்கள், 27 ஜூன், 2016

மீன்களின் பல்வேறு வகைகள்


மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை.
* மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
* முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண் ணிக்கை அதிகம்.
* மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்ப நிலையைப் பொறுத்து மாறும்.
* ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்பு களைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.
* மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ் வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது.
* பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளி யேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸி ஜனை எடுத்துக் கொண்டு கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகின்றன.
* மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை.
* மீன்களுக்கு புறச் செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன.
* காட், சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். உணவாகவும், எலும்பு மற்றும் செதில்கள் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
* மிகச்சிறிய மீன் கோபி. இது 13 மி.மீட்டர் அளவே இருக்கும். மிகப்பெரிய மீன் திமிங் கலம். இது 18 மீட்டர் நீளம் இருக்கும்.
* லங் ஃபிஷ் என்ற மீன் நுரையீரல் மூலம் சுவாசிக்கும்.
* ஆழ் கடலில் ஒளியை உமிழும் மீன்கள் வசிக் கின்றன.
* பறக்கும் மீன்கள் குறிப்பிட்ட தூரத்திற்குத் தாவிச் செல்லக் கூடியவை.
* மிக வேகமாகச் செல்லக்கூடியது செயில் ஃபிஷ்
* பெரிய மீன்களின் வாயையும் உடலையும் சுத்தம் செய்யக்கூடியது க்ளீனர் மீன்.
* பஃபர் ஃபிஷ் தட்டையாக இருக்கும். எதிரியைக் கண்டதும் தண்ணீரைக் குடித்து உருண்டையாகிவிடும். அதைக் கண்ட எதிரி பயந்து ஓடும்!
* சூரிய மீன் என்ற வகை மீன் கோடிக் கணக்கில் முட்டைகள் இடும்.
* சர்ஜன் மீன் என்ற மீனின் வால் பகுதியில் இரு பக்கமும் சிறிய கத்தி போன்ற அமைப்பு உள்ளன.
-விடுதலை,19.6.14