வியாழன், 3 டிசம்பர், 2015

உலகிலேயே மிக நீளமான உயிரினம் எது ?


உலகிலேயே மிக நீளமான உயிரினம் எது ?
நீலத் திமிங்கிலம் அல்லது சிங்கப்பிடரி ஜெல்லிமீன் என்று பதில் கூறினால் அவை சரியான விடைகள் அல்ல. Lineus longissimus  என்னும் நாடாப் புழுதான் உலகத்திலேயே  மிக நீளமான உயிரினம் ஆகும். இதன் நீளம் 60 மீட்டர் வரை (200 அடி) நீளும் தன்மை கொண்டது. இது ஏறக்குறைய நீலத் திமிங்கிலத்தின் நீளத்தைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டதாகும். ஜெல்லிமீனை விட மூன்றில் ஒரு பங்கு கூடுதல் நீளம் கொண்டது.
ஒரு நாடாப்புழுவை ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் இரு முனைகளை இணைத்துக் கட்டினாலும், அதன் நீளம் அதை விட அதிகமாகவே இருக்கும். இது நெமேட்டா (Nemettea) புழுக்குடும்பத்தைச் சேர்ந்தது. நெமேட்டா என்பது கடல்கன்னி (Nemertes)  என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது. இவைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன; அவைகளில் பெரும்பாலானவை கடல்வாழ் உயிரினங்களாகும். மெல்லியதாகவும், நீளமான தாகவும் இருப்பவை அவை. அவற்றில் நீளமானவை கூட குறுக்களவில் ஒரு சில மில்லி மீட்டர் அளவே இருக்கும்.
நாடாப்புழு 30 மீட்டர் (100அடி) வரைதான் நீளும் என்று பலதரப்பினர் தெரிவிக்கின்றனர்.  இது சிங்கப் பிடரி ஜெல்லிமீனைப் போன்ற நீளம் கொண்டதல்ல.  ஆனால், அவற்றின் நீள்தன்மை மிகவும் அசாதாரணமானது என்று அண்மைக்காலத் தகவலல்கள் தெரிவிக்கின்றன. 50 மீட்டர் (165 அடி) வரை முழுமையாக நீளக்கூடிய நாடாப்புழுக்கள் பல காணப்பட்டுள்ளன.
அவை 50 கோடி ஆண்டு காலமாக இருந்து வருகின்றன என்பதை அவற்றின் கற்படிவங்கள் காட்டுகின்றன.
நாடாப்புழுக்களுக்கு இதயம் கிடையாது. தங்கள் சதையின் மூலமே அவை ரத்த ஓட்டத்தைப் பெறுகின்றன. தனியான வாயையும், கழிவு உறுப்பையும் பெற்றிருக்கும் ஒரு சாதாரணமான எளிய உயிரினம் இது.
நச்சுத்தன்மை கொண்ட கொக்கிகள் கொண்ட, ஒட்டிக் கொள்ளும், ஒரு நீண்ட மெல்லிய குழாயை  வேகமாக செலுத்த இயன்ற,  புலாலை விரும்பி உண்ணும் உயிரினம் இது. ரம்பம் போன்ற பற்களைக் கொண்ட இந்தக் குழாய்கள் கடின ஓடு கொண்ட நத்தை, நண்டு போன்ற உயிரினங்களைத் திகைப்படையச் செய்த பின், அவற்றை இவை உணவாகக் கொள்ளும். பெரும்பாலான நாடாப் புழுக்கள் கடலின் அடியில்  தங்கி சுற்றித் திரிபவையாகும். அவற்றில் சில வியக்கத்தக்க வகையில் வண்ணமாக ஒளிரக்கூடியவை.
Nemerteans  சிதைக்கப்பட்டாலும் இனப்பெருக்கம் அடையக்கூடியது. சில நாடாப் புழு இனங்கள் தங்களைத் தாங்களே சிறிய சிறிய துண்டுகளாக ஆக்கிக் கொண்டு, அந்தத் துண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய புழுவாக ஆகும் வகையில் இனப்பெருக்கு செய்ய இயன்றவை.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
-விடுதலை,5.1.12

விலங்குகளை சிவப்பு வண்ணத்தைக் காணச் செய்வது எது ?


விலங்குகளை சிவப்பு வண்ணத்தைக் காணச் செய்வது எது ?
அதிக அளவு விற்பனை யான நூலாசிரியரான ஜான் லிலி, யானையின் முன்னே வருபவர் ஒளிரும் வண்ண ஆடை அணிந்து வரமாட் டார், காளையின் முன்னே வருபவர் சிவப்பு ஆடை அணிந்து வரமாட்டார் என்று எழுதிய 1580ஆம் ஆண்டு காலத்திலிருந்தே சிவப்பு நிறத்தைக் கண்டு காளைகள் கோபம் கொள்கின்றன என்ற கட்டுக்கதை  நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், எலிகள், நீர்யானைகள், ஆந்தைகள், உணவுக்காக இரவில் வேட்டையாடி நிலத்தில் குழி பறித்து வாழும்  aardvarks  விலங்குகள், காளைகள் அனைத்துமே வண்ணங்களைக் காண முடியாதவைகள் ஆகும்.
காளையின் முன் வண்ணத்துணியை வைத்து போராளி ஆட்டும்போது அத்துணியின் அசைவைக் கண்டுதான் காளை முட்டுவதற்கு பாய்ந்து வருகிறது. அத்துணியில் வண்ணம் சேர்ப்பது வேடிக்கை பார்க்கும் மக்களை மயக்கத்தான்.
நீல நிறத்தையும், மஞ்சள் நிறத்தையும் நாய்களால் பிரித்து அறியமுடியும். ஆனால், பச்சையை சிவப்பு வண்ணத்தில் இருந்து வேறுபடுத்திக் காண அவைகளால் முடியாது. போக்குவரத்து விளக்குகள் செயல்படும் இடங்களில், மக்கள் கடந்து செல்வதை வைத்துதான் பாதையைக் கடப்பது பாதுகாப்பானதா அல்லவா என்று நாய்கள் முடிவு செய்கின்றன. அதனால்தான்   நடந்து செல்பவர்கள் பாதையைக் கடப்பதற்கு தற்போது உள்ள அமைப்பில் பீப் பீப் ஒலி எழுப்பப்படுகிறது.
சிவப்பு நிறத்தை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்ளும் உயிரினம் கோழிகள்தான். கோழி சிவப்பு வண்ணத்தைக் காண்பதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி கோழிப்பண்ணைக்காரர்கள் மட்டுமே நன்கு அறிந்துள்ளனர். ஏதேனும் ஒரு கோழியின் உடலிலிருந்து ரத்தம் வெளிப்பட்டால், மற்ற கோழிகள் அதை மூர்க்கமாகக் கொத்திக் கொத்தியே சாகடித்துவிடும். இதனை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், கோழிகள் ஒன்றையொன்று கொன்று கொள்ளும் வெறி அதிகமாகிவிடும்; பண்ணையில் உள்ள கோழிகளின் எண்ணிக்கையும் விரைவாகக் குறைந்து போகும். இந்தப் பிரச்சினைக்கு வழக்கமாகக் கடைபிடிக்கும் தீர்வு, சூடான கத்தியினால் அவற்றின் அலகுகளை வளைத்து விடுவதுதான். அப்போதுதான் அதன் மூலம் ஏற்படக்கூடிய அழிவின் அளவு குறையும்.
என்றாலும் 1989இல் அனிமேலன் என்ற ஒரு நிறுவனம் முட்டையிடும் கோழிகளுக்கு பொருத்தக்கூடிய சிவப்பு வண்ண சாயல் கொண்ட கான்டேக்ட் லென்சை அறிமுகப் படுத்தியது. தொடக்க காலத்தில் இது நல்ல பயன் அளித்தது. கோழிகள் எதைப் பார்த்தாலும் சிவப்பாகவே தெரியும் என்பதுதான் இதன் காரணம். அதனால் கோழிகளிடையான சண்டைகள் குறைந்தன. முன்பு போல் அவை சுறுசுறுப்பாக இல்லாமல் போனதால், அவற்றிற்குத் தேவையான தீவனத்தின் அளவும் குறைந்துவிட்டது. என்றாலும் அவை அதே எண்ணிக்கையிலான முட்டைகளை வைத்தன.
கோழிப்பண்ணை தொழிலே மிகக் குறைந்த 1.6 விழுக்காடு லாபத்தில்தான் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 25 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன. அவற்றில் 15 கோடி கோழிகள் 50 கோழிப் பண்ணைகளில் மட்டுமே உள்ளன. கோழிகளுக்கு சிவப்பு கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் முறையினால் அவர்களின் லாபம் மூன்று மடங்கு பெருகியது.
கோழிகளுக்கு கான்டாக்ட் லென்ஸ் பொருத்தும் பணி சிக்கல் நிறைந்ததாகவும், அதிக உழைப்பு தேவைப் படுவதாகவும் இருப்பது இழப்புக் கேடுதான்.  கண்ணாடி பொருத்தப்பட்டதால் இயற்கையான உயிர்க் காற்று கோழிகளின் கண்களுக்குக் கிடைக்காததால், கண்களில் வலியை ஏற்படுத்தி, விரைவில் அவை சீரழியச் செய்தது. விலங்குகள் மீதான கொடுமை இது என்று குற்றம் சாற்றப் பெற்றதால், இந்த கான்டாக்ட் லென்சை அனிமேலன்ஸ் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
-விடுதலை,9.1.12

செவ்வாய், 1 டிசம்பர், 2015

பசுவை புனிதமாக(?) மதித்த வரலாறு இல்லை!

பசு உணவுக்கே பயன்பட்டது!


(ஆதாரபூர்வ அலசல்)                                                          - சரவணா இராசேந்திரன்
மனிதன் பசுவை முதல் முதலாகப் பார்த்த போது அதை இன்றையப் பசுவாகப் பார்க்கவில்லை, மிகவும் கொடூர குணம் கொண்ட ஆவ்ரோச்ஸ் (aurochs) என்ற காட்டுவிலங்கினமாகத் தான் பார்த்தான், ஒரு ஆவ்ரோச்ஸ் விலங்கு சுமார் 500 கிலோவிற்கும் மேலாக பெரிய உருவமும், கடுமையாகத் தாக்கும் மனப்பான்மையும் கொண்டது, அதன் கொம்புகள் இன்றைய காளை மாடுகளின் நீண்ட கொம்புகளை விட இரண்டு மடங்கு அளவு இருந்தன.
பொதுவாக அமைதியுடன் குழுவாக சேர்ந்து புற்களை மேயும் பழக்கமுடைய இந்த ஆவ்ரோச்ஸ் எதிரிகள் யாரும் வந்தால் மட்டும், எதிர் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கும் குணம் கொண்டவை, சுமார் 4000 ஆண்டுகளாக ஆவ்ரோச்ஸ் விலங்கை அடித்துத் தின்று அதன் பலனை நன்கு அனுபவித்து விட்டான், அதனால் மனிதன் தற்போது அதனை தனது கட்டுக்குள் எப்படிக் கொண்டுவருவது என்று ஓய்வு நேரங்களில் சிந்திக்கத் தொடங்கினான். அறுபது பெண் ஆவ்ரோச்ஸ்க்கு ஒரு ஆண் ஆவ்ரோச்ஸ் என்ற விகிதத்தில் இருக்கும். மேலும் பெண் ஆவ்ரோச்ஸ் இருக்கும் இடத்தை விட்டு ஆண் ஆவ்ரோச்ஸ்கள் வேறு இடங்களுக்குச் செல்வதில்லை, ஆகவே அவர்களுக்கு காளைகள் பற்றிக் கவலையில்லை. கொழுத்து திரியும் பெண் ஆவ்ரோச்ஸ்தான் அவர்களுக்கு முக்கியம், ஆகவே கூட்டமாக வரும் ஆவ்ரோச்ஸ்களை 100 ஏக்கர் அதற்குமேல் பரப்புகொண்ட பிரதேசத்திற்குள் வளைத்துப் போட்டான், அந்தப் பகுதிக்குள்ளே அதற்குத் தேவையான தண்ணீர், உணவு தொடர்ந்து கிடைக்குமாறு உறுதி செய்துகொண்டான். அதே போல் அவை திரும்பிச் செல்லாதவாறு சுற்றிலும் வேலி அமைத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டான், இப்போது வளையத்திற்குள் மாட்டிக்கொண்ட ஆவ்ரோச்ஸ்கள் தொடக்கத்தில் வேலிகளைக் கடக்க முயற்சி செய்தன. ஆனால் ஆவ்ரோச்ஸ்கள் ஒன்றைப் புரிந்துகொண்டன, தங்களுக்குத் தேவையான உணவு கிடைக்கிறது, அதைவிட முக்கியம் புல்வெளிகளில் வாழும் கடுமையான வேட்டை மிருகங்களான சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய், கழுதைப்புலி போன்ற விலங்குகளிடம்  இருந்து தங்களுக்கும், முக்கியமாக தங்களது குட்டிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.

தற்போது அத்தனைக் கன்றுகளும் பாதுகாப்பாக தாய் ஆவ்ரோச்ஸ்சுடனே இருப்பதால் ஆவ்ரோச்ஸ்களின் மரபணுவில் முதல் மாற்றம் ஏற்படத் துவங்கியது. இந்த மாற்றம் 400 ஆண்டுகால இடைவெளியில் நடந்தது, அதாவது பெரிய எல்லைக்குள் மனிதர்கள் அடக்கிவைத்த 400 ஆண்டுகள் கழித்து வட்டத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்ற எச்சரிக்கையும் தனக்காக மனிதர்கள் உணவுடன் பாதுகாப்பும் தருவார்கள் என்ற உணர்வும் ஏற்படத் துவங்கியது, இது காலப்போக்கில் தனது கொடூர குணத்தை மாற்றி தற்போது நாம் பார்க்கும் பசுவாக (Cattle) மாறத் தொடங்கியது. மனிதன் புற்களின் மூலம் சிறிய குடிசைகளைக் கட்டி மாடுகளுடனே வாழத் துவங்கினான். சுமார் 35 ஆயிரம் ஆண்டுகளில் இந்த புதிய மாற்றம் மனித குலத்தை மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல  ஆங்காங்கே பெரிய நிலப் பரப்புகளை வளைத்து அதற்குள் பசுக்களை வளர்க்கத் துவங்கினான்.
இந்த காலகட்டத்தில் சிறிய பனியுகம் (Ice Age) தோன்றியது அட்லாண்டிக் பெருங்கடல் உறையத் துவங்கியதால் மத்தியத்தரைகடல் பகுதியில் பல்வேறு நிலப்பரப்புகள் வெளியே தெரியத் துவங்கின. முக்கியமாக ஜிப்ரால்டர் ஜலச்சந்தி அய்ரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்குமிடையே பெரிய நிலப்பாதையை திறந்துவிட்டது. அதே போல் கிழக்கே செங்கடலின் பெரும்பகுதி நீர் வற்றியதால் ஆசியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்குமிடையே பெரிய பாதை உருவாகியது, நிலக்குழுக்களின் மக்கள் தொகைப் பெருக்கம், அதிக அளவு கால்நடை போன்றவற்றை வைத்துக்கொண்ட அன்றைய மனிதர்கள் பெரிய குழுவாக இடம் பெயர்ந்தனர். புதிய நிலப்பரப்பு குறித்து எந்த ஒரு தெளிவும் இல்லாததால் மனித இடப்பெயர்வின்போது உணவுத் தேவைக்காக பசுவை நம்பி மட்டுமே இருந்தான்.
பனியுகம் முடிவதற்குள் அய்ரோப்பா, ஆசியக் கண்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வு செய்திருந்தனர், அய்ரோப்பாவில் இடம் பெயர்ந்த மக்களால் அங்குள்ள குரங்கின மனிதர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அய்ரோப்பாவில் ஏற்கனவே வாழ்ந்த மக்களை மிகவும் எளிதாக அடக்கிவிட்டனர். முக்கியமாக அந்த அய்ரோப்பிய குரங்கின மக்களின் ஆண்களை மட்டும் கொன்று விட்டு பெண்களை விட்டுவைத்தனர். குரங்கினப் பெண்களுக்கும் அய்ரோப்பிய மக்களுக்கும், ஆப்பிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்த மக்களுக்கும் இடையே கலப்பு ஏற்பட்டு புதிய இனம் உருவானது.  பனியுகம் முடிந்த பிறகு, மீண்டும் ஜிப்ரால்டர் ஜலச்சந்தி அட்லாண்டிக் மற்றும் மத்தியத் தரைகடல் நீரால் நிரம்பியது. செங்கடல் முழுமையாக நீரில் மூழ்கிவிட்டது.
நியண்டர்தால் மனிதன்
அய்ரோப்பாவில் வாழ்ந்த மக்கள் நியண்டர்தால் மனிதன் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த ஹோமோசெபியன்ஸ்களை விட உருவத்தில் பெரியவர்கள், பலசாலிகள். ஆனால் அவர்கள் தங்களது அறிவைப் பயன்படுத்தும் திறனில்லாதவர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் வேட்டையாடி வாழும் பழக்கமுடையவர்கள். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஹோமோசெபியன்ஸ்களால் மிகவும் எளிதில் அழிந்துபோனார்கள். நியண்டர்தால் பெண்களை ஹோமோசெபியன்ஸ்கள் பிடித்துவந்து தங்களது இனவிருத்திக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இதே போல் தான் ஆசியக்கண்டங்களில் ஹோமோசெபியன்ஸ்கள் பரவத் துவங்கினர். ஆனால் அப்படி பரவியவர்களால் கிழக்கு நோக்கிச் செல்லமுடியவில்லை, அதனால் மங்கோலியா, மற்றும் இந்தியப் பெருங்கடல், மற்றும் இந்தியத் தீபகற்ப மக்கள் தனித்துவம் பெற்றுவிளங்கினர்.
பசுமாட்டுக் கறியே சிறந்தது ஏன்? பசுவின் உணவை சிறிது உற்று நோக்குங்கள். படர் வகை புற்களை விட நாணல்வகைப் புற்களையே பசுக்கள் அதிகம் சாப்பிடும், நாணல் வகைப் புற்களில் அப்படி என்ன இருக்கிறது. சாதாரணமாக வீட்டு மாடியில் தண்ணீர் நிரம்பி வழியும் தண்ணீர் தொட்டிகளின் அருகில் இந்தவகைப் புற்கள் காணப்படும். இந்தப் புற்களைச் சாதாரணமாகப் பார்த்தால் அதன் நீளமான இலைகளில் அனைத்துப் பக்கங்களிலும் மெல்லிய ரோமங்கள் இருப்பதைக் காணலாம், இதை நுண்ணோக்கி கொண்டு பார்த்தால் ஆயிரக்கணக்கான கண்ணாடி இழைகளை உடைத்து வைத்து ஒட்டிவைத்தது போன்று இருக்கும், ஆம் இவை அனைத்தும் புற்களே தங்கள் இலைகளின் மீது உருவாக்கிக் கொண்ட சிலிகா ரோமங்கள், புற்கள் ஏன் சிலிகா ரோமங்களை உருவாக்கவேண்டும்? காரணம் இவ்வகைப்புற்கள் புல்வெளிகளில் ஒன்றன் மீது ஒன்றாக கோடிக்கணக்கில் போட்டிபோட்டுக் கொண்டு வளர்பவை. அப்படி வளரும் போது கிடைக்கும் சிறிய சூரிய ஒளியைக் கூட சேமித்து வைத்துக் கொள்ளவேண்டிய நிலை. மேலும் இலைகளை உண்ணும் பூச்சிகளின் தாக்குதல் அபாயமும் உள்ளதால் இயற்கையாகவே தங்களுக்குத் தேவையான சிலிக்காவை மண்ணில் இருந்து பிரித்து உரோமங்களில் சேமித்து வைக்கிறது.  பசுக்கள் ஏன் இந்தவகைப் புற்களை உண்ணவேண்டும்? பசு மாத்திரம் அல்ல, மான்களும் இந்தவகைப் புற்களை அதிகம் உண்கின்றன, இதற்குக் காரணம் விரைவான இனப்பெருக்கம் மற்றும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கத் தேவையான ஆற்றல் போன்றவை சிலிகா வகைப் புற்களால் கிடைக்கிறது. பசுமாட்டின் உடலில் இந்த சிலிகா தாதுஉப்புக்கள் அதன் சதைப் பகுதியில் அதிகமாக சேமிக்கப் படுகிறது.  பசுமாட்டை மனிதன் சாப்பிடும் போது முதலில் அவனது நரம்புகளுக்கு இடையேயான தொடர்புகள் வலுப்பெறுகிறது, இதனால் மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது. பசுவைச் சாப்பிட ஆரம்பித்தது முதல் 40,000 ஆண்டுகால இடைவெளியில் மனிதனின் மூளை 3000 மடங்கு செயல்திறன் அதிகரித்துள்ளது. பசுவை மனிதன் சாப்பிடாமல் இருந்திருந்தால் இன்றும் கொரில்லாக்-களைப் போலவும், சிம்பன்சிகளைப் போலவும் மனிதர்களும் காடுகளில் கிடைத்ததைத் தின்று குகைகளிலும், மரப் பொந்துகளிலும் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள்.
பசுக்களை எந்த மதமும் முக்கியப் படுத்தியதில்லை,
முன்பு கூறியது போலவே காளைகளின் எண்ணிக்கை பசுக்களின் எண்ணிக்கைக்கு  குறைவானது, ஆகவே காளைகளை அன்றைய மனிதர்கள் மிகவும் கவனமாக பராமரித்து வந்தனர். உலகின் அனைத்து நதிக்கரை நாகரீகத்திலும் பசுவைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை, ஆனால் காளைகளை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளனர்.
சுமேரியர்கள் காளைகளின் கண்களை சூரியனுக்கு ஒப்பான சக்தியுள்ள ஒன்றாகக் கருதினர்.
எகிப்தியர்கள் காளைகளை தங்களது மன்னர்களின் நேரடித் தூதுவர்களாகக் கருதினர். சிந்துசமவெளி நாகரீகத்திலும் காளையின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு குறிப்புகள் உள்ளன.
கிரேக்கக் கதைகளில் காளைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி அனைத்து நாகரீக மக்களும் காளைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒரே ஒரு காரணம் மட்டுமே, அது காளை இனப்பெருக்கத்திற்கும் முக்கியமானதாக கருதப்பட்டது.
பசுவின் பால் தயிர் மோர் வெண்ணை, நெய் போன்றவைகள் ஆரம்பகால மனிதனுக்கு தேவையற்ற ஒன்றாகவே இருந்துள்ளன, முக்கியமாக மனித குழுக்களின் இடப்பெயர்வின் போது பசுக்களின் பாலை பயன்படுத்தக் கற்றுக்கொண்டான், இருப்பினும் அது குழுக்களாக வாழ்ந்த மனிதர்களின் முக்கிய உணவாகக் கருதப்படவில்லை, அக்காலகட்ட மனிதனுக்குத் தேவையானது பசுவின் சதைப்பகுதியே அன்றி பால், தயிர், வெண்ணை, நெய் அல்ல.
எனவே, தொடக்க காலம் முதலே பசுமாடு உணவாகப் பயன்படுவதற்கும் காளை மாட்டினைப் பெற்றுத் தருவதற்குமான தேவையாகத்தான் பார்த்தானே தவிர புனிதமாக(?) அவன் கருதுவதற்கு இதில் ஒரு வெங்காயமும் இல்லை. தரவுகள்:
“Brain Boost” November 23, 2013 (television documentary) History Channel
Grass leaf silicification
Grass\botany\ encyclopedia
www.pnas.org/content/80/3/790.full.pdf
An African Trilogy (Peter Matthiessen)
The State of the World’s Animal Genetic Resources for Food and Agriculture
By Barbara Rischkowsky, Dafydd Pilling
The Genetics of Cattle, 2nd Edition - Page 467
-உண்மை,16-30.11.15

மழைத்துளி சிப்பியில் விழுந்து முத்தாகும்?



சிப்பிக்குள் மழைநீர் வீழ்ந்து, அதுதான் பின்னர் முத்தாக மாறுகிறது என்ற கருத்து பரப்பப்படுகிறது. கண்ணதாசன்கூட தனது கவிதை ஒன்றில் இப்படித்தான் எழுதினார். ஆனால், இக்கருத்து முற்றிலும் தவறானதாகும்.
முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழக் கூடியவை. முத்துக் குளிக்கின்றவர்கள்-கூட கடலின் அடியில் மூழ்கிச் சென்றுதான் முத்து எடுக்கின்றனர். எனவே, முத்துச் சிப்பிக்குள் மழைத்துளி வீழ்வதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியிருக்க மழைத்துளிதான் முத்தாக மாறுகிறது என்பது மடமை.
முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது. மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது. மாறாக மழைத் துளியால் அல்ல.
-உண்மை,16-30.11.15

மல்லிகைப் புரட்சிக்கு நோபல் பரிசு



நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், பெரும் பயன் விளைவிக்கும் - தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளை கண்டுபிடித்தவர்களுக்கும், சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர் களுக்கும் வழங்கப்படும், உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.
சுவீடிய அரசுக் கல்விக் கழகத்தாலும், சுவீடியக் கல்விக் கழகத்தாலும், கரோலின்சுகா நிறுவனத்தாலும், நார்வே நோபல் குழுவாலும் தனியொருவருக்கோ, நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகிறது.

இயற்பியல் 2015:
ஆர்தர் மெக்டொனால்டு (Arthur B. MCDonald)
டகாகி கஜீதா (Takaaki Kajita)
பொருளாதாரம் 2015:
ஆங்கஸ் டீடன் - ஸ்காட்லாந்து
(Angus Deaton)
மருத்துவம் 2015:
வில்லியம் சி. கம்ப்பெல்
(William C. Campbell)
சடோகி ஒமுரா (Satoshi Omura)
யுயுது (You You Tu)
வேதியியல் 2015:
தாமஸ் லிண்டால் (Thomas Lindahl)
பால் மோட்ரிச் (Paul Modrich)
ஆசிஸ் சங்கார் (Aziz Sancar)
அமைதி 2015:
துனிசிய தேசியக் கலந்துரையாடல் அமைப்பு
(The National Dialogue Quertet)
இலக்கியம் 2015:
ஸ்வெட்லாலானா அலெக்ஸிவிச்சு (Svetlana Alexievich)
பொருளாதாரம் 2015 : ஆங்கஸ் டீடன் - ஸ்காட்லாந்து. “வறுமை ஒழிப்பு நிபுணர்”
ஆங்கஸ் டீடன் 1945 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார். இங்கிலாந்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றிய பிறகு பிரிட்டனில் இருந்து அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் ஆய்வாளராகச் சேர்ந்தார்.
“நுகர்வு, வறுமை மற்றும் நலன், குறித்த இவரது ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இயற்பியல் 2015 : இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜப்பான் விஞ்ஞானி தகாக்கி கஜிதாவுடன், கனடா விஞ்ஞானி ஆர்தர் மெக்டொனால்டு “நியூடிரினோ” (Nutrinos) ஆராய்ச்சிக்காக பெற்றுள்ளனர்.
நியூடிரினோ பற்றி மெக்டொனால்டு கூறும்போது,
“நியூடிரினோ துகள் இயற்பியலில் நான் செய்த ஆய்வுகள் பரிதியை (சூரியனை) இயக்கிவரும் அணுப்பிணைவு (Nucfear fusion reations that power the sun)  இயக்கங்களை அளக்க உதவும். சூரியனின் இயக்க அளப்பாடுகளைத் துல்லியமாக அறிய முடிவது, பூமியில் செய்யப்படும் ஆய்வுகளைப் புரிந்து கொள்ளப் பேரளவு உதவுகிறது” என்றார்.
அமைதி - 2015 : அமைதிக்கான நோபல் பரிசு துனிஷியாவைச் சேர்ந்த சமூகக் குழுக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
The National Dialogue Quortet என்று அழைக்கப்படும் துனிஷியாவின் சமூக அமைப்புகளின் ஒன்றியத்துக்கு அமைதிக் கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு துனிஷியாவில் ஏற்பட்ட ஆட்சிக்கு எதிரான அமைதிப் புரட்சியை ஆங்கிலத்தில் “Jasmine Revolution of 2011” என்கிற பெயரில் அழைக்கிறார்கள். இதன்மூலம் துனிஷியா வில் பன்மைத்துவ ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப இந்த சமூக அமைப்புகளின் ஒன்றியம் ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான பங்களிப்பைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.
இலக்கியம் - 2015 : உலக இலக்கியத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றிருப்பவர், பேலாரூஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்வெட்லானா அலெக்ஸ்யெவிச் என்ற பெண் எழுத்தாளர்.
“கடந்த 40 வருடங்களாக இவர் சோவியத் மற்றும் பிற்பட்ட காலத்து வரலாற்றைத் தீட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் இது சம்பவங்களின் வரலாறு அல்ல, உணர்ச்சிகளின் வரலாறு, இவருடைய எழுத்துகள், நம் காலத்தின் கடும் துன்பங்களும், சோகங்களும் எழுதப்பட்ட ஒரு நினைவுச் சின்னமாக விளங்கும் பலகுரல் ஒலிப்பு”.
வேதியியல் 2015 : சுவீடனைச் சார்ந்த தாமஸ் லிண்டாஸ், அமெரிக்காவைச் சார்ந்த பால் மோட்ரிச், துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் அஜீஸ் சான்சார் ஆகிய மூவருக்கும் வழங்கப் பட்டுள்ளது.
மரபணுக்களில் கோளாறுகள் ஏற்படும்போது அதனை உடல் எவ்வாறு தானாகவே சரி செய்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக, இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மேலும், பல்வேறு பரம்பரை நோய்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்தும், புற்றுநோய், வயது முதிர்வு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான மூலக்கூறு மாற்றங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள இவர்களின் கண்டுபிடிப்புகள் பெரும் உதவி புரிந்துள்ளன.
மருத்துவம் 2015 : மருத்துவத் துறைக்கான நோபல் பரிசானது, உடல் இயங்கியல் அல்லது மருந்தியல் துறைக்கு வழங்கப் படுகிறது. அந்த வகையில் வில்லியம் சி. கம்ப்பெல், சடோசி ஒமுரா மற்றும் யுயுது ஆகிய மூவருக்கும் கூட்டாக வழங்கப் பட்டுள்ளது.
இந்த நோபல் பரிசு இரண்டு கண்டுபிடிப்புகளுக்காக, இரு பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது ஒன்று நாக்குப் பூச்சி ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்ததற்காக வில்லியம் சி.கம்ப்பெல் சடோசி ஒமரா ஆகியோருக் கும், மற்றொன்று மலேரியாவிற்கான சிகிச்சை முறை குறித்து கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதற்காக யுயுது என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
-பெரியார் பிஞ்சு மாத இதழ்

பால்வெளி மண்டலம்




பிரபஞ்ச ரகசியத் தொடரில் அவ்வப்போது பால்வெளி மண்டலம் என்ற பெயரை பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் பால்வெளி மண்டலம் பற்றி தமிழில் அவ்வளவான செய்திகள் அதிகம் இல்லை, அப்படியே இருந்தாலும் அறிவியல் வார்த்தைகள் சரியாக தமிழ்படுத்தப் படாமலும், தெளிவில்லாமலும் உள்ளது.
அப்படிப்பட்ட கட்டுரைகள் வானியல் பற்றி நன்கு விபரம் அறிந்த சிலருக்கு மட்டும் புரியும் படியாக உள்ளது. பால்வெளி மண்டலம் என்பது நாம் குடியிருக்கும் வீடு போன்றது நமது வீட்டைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டாமா? எளிய தமிழில் எதிர்காலத்தில் விண்ணை ஆளப்போகும் பிஞ்சுகளுக்காக இதைக் கொடுத்துள்ளோம். இது பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல பால்வெளி மண்டலம் பற்றி அறிய ஆர்வமுள்ள அனைவருக்குமானது.
தொடர்ந்து படித்து வந்த சூரியன், கோள்கள், விண்மீன் மண்டலங்கள், ஒளிர்முகில் கூட்டம் இதர, இவை அனைத்தும் நமது பால்வெளி மண்டலத்தில் தான் அடங்கியுள்ளது.
இரவு நாம் வானில் காண்பவை  அனைத்தும், நமது பால்வெளி மண்டலத்தின் மிகச்சிறிய பகுதியே. எடுத்துக்காட்டாக பால்வெளி மண்டலத்தை நாம் வசிக்கும் வீடாக  எடுத்துக் கொண்டால் நாம் இருக்கும் பகுதி வீட்டு அலமாரியில் வைத்திருக்கும் ஒரு சிறிய தீப்பெட்டி போன்றது தான்,
நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை வானத்தை நன்கு கூர்ந்து கவனித்தால் வடக்கிலிருந்து தெற்கு முகமாக அழகிய சிறிய வண்ணச்சிதறல் பட்டையைப் போன்று ஒன்றைக் காணலாம்.  நீங்கள் பார்க்கும் அந்த அழகிய வெண்சிதறல் பட்டைதான்  பால்வெளி மண்டலம் அல்லது பால்வீதி ஆகும். இதை ஆகாய கங்கை என்று கூறி பல மூடநம்பிக்கை கதைகளைத் திணிப்பார்கள்.
ஆகவே மூடநம்பிக்கைப் பெயரான ஆகாய கங்கை (வட மொழியில் ஆகாஷ் கங்கா) என்ற பெயரைப் பயன்படுத்துவது தவறான கருத்தைக் கொடுத்துவிடும்
சாதாரண தொலைநோக்கி கொண்டு பார்க்கும் போது எண்ணிலடங்கா விண்மீன் சிதறல்கள் இந்த பால்வீதியில் இருப்பதைக் காணலாம். நவீன தொலைநோக்கி கொண்டு பார்க்கும் போது விண்மீன்கள் மேலும் தெளிவாகத் தெரியும்.
வடக்கு முகமாக காசியோப்பியா என்ற விண்மீன் மண்டலத்தில் இருந்து,   ஓரையான் வழியாக தெற்கே தென்சிலுவை செண்டாரஸ் விண்மீன் மண்டலத்தில் முடியும், இந்தப் பால்வீதியின் விளிம்புகளைப் பார்த்தால் ஒழுங்கற்று காட்சிதரும்.
நன்றாக கவனித்து வந்தால் சில இடங்களில் பெரியதாகவும் சில இடங்களில் இரண்டாக பிரிந்து பிறகு ஒன்று சேர்வது போல் காட்சிதரும். சித்திரை (ஸ்பைகா), ஸ்வாதி  (அர்க்டூரஸ்), மகம் (ரெகுலஸ்), பாமல்ஹெனத் போன்ற பிரபலமான விண்மீன்களின் பின்பலத்தில் இவை காட்சி தரும். முக்கியமாக இந்த விண்மீன்கள் குளிர்காலத்தில் தெரியும்.
ஆகவே இந்த விண்மீன்களை நாம் தொடர்ந்து பார்ப்போமோயானால் பால்வீதியை நாம் எளிதில் காணலாம்.
பால்வெளி மண்டலத்தை நமக்கு அடையாளம் காட்டியவர்
நீண்ட காலமாக துருவப்பகுதி மற்றும் அய்ரோப்பியப் பகுதியில் பாலை வானில் சிதறிவிட்டது போல் (Milky Way) காட்சி தரும் பொருளைப் பற்றி அறிய பல அறிவியல் ஆய்வாளர்கள் முனைந்தனர். அதில்  முதன்முதலாக வெற்றிகண்டவர் தொலை நோக்கியைக் கண்டறிந்த கலிலியோ தான்,
கோள்களை ஆய்வு செய்வதற்காக, தானே தயாரித்த தொலைநோக்கியைக் கொண்டு வானை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார், அவர் கண்டுபிடித்த தொலை நோக்கி தற்போதுள்ள சாதாரண தொலை நோக்கியைவிட சக்தி குறைந்தது என்றாலும் அவர் அதன் மூலம் நமக்கு பல்வேறு கேள்விகளுக்கான விடைகளைச் சொல்லிச்சென்றார்.
அதில் ஒன்று தான் இந்தப் பால்வெளி மண்டலம், கோள்களைப் பற்றிய தனது ஆய்வின் போது எண்ணிலடங்கா விண்மீன் பட்டைகளைக் கொண்ட பால்வெளி மண்டலத்தையும் அவர் ஆய்வு செய்யத் தவறவில்லை,
கலிலியோவின் பால்வெளி மண்டலம் பற்றிய பல்வேறு ஆய்வு 1920 வரை பலரால் கவனிக்கப் படாமலேயே இருந்தது. 1920 ஆம் ஆண்டு ஹர்லொவ் சேப்லீ, அவரது உதவியாளர் ஹேபர் குர்டிஸ் இருவரும் கலிலியோவின் ஆய்வுக் குறிப்புகளில் உள்ள பால்வெளி மண்டலம் பற்றி ஆய்வு செய்ய முடிவுசெய்தனர்.
இவர்களுக்கு எட்வின் ஹப்பிள் உதவிபுரிந்தார். அன்றிலிருந்து இன்று வரை நாம் பல கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங் களைப் பற்றி தெரிந்து கொண்டோம்.
விழாக்காலங்களில் எரியும் சங்குசக்கர பட்டாசு போன்று தோற்றமளிக்கும் பால்வெளி மண்டலம் சுமார் லட்சத்து எண்பதாயிரம் (1,80,000) ஒளியாண்டு அளவில் உள்ளது. அதாவது ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குச் செல்ல 1,80,000 ஒளியாண்டுகள் ஆகும்.
இது 100-முதல் 400 பில்லியன் விண்மீன்களை உள்ளடக்கியது, இதில், நமது சூரியனும் ஒன்று, சில அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு டிரில்லியன் விண்மீன்கள் வரை இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
இந்த விண்மீன்கள்களை மையமாக வைத்து நமது சூரியக்குடும்பத்தில் உள்ளக் கோள்களைப் போல் சுமார் 100--மில்லியன் கோள்கள் இருக்கலாம் என்று கருதுகிறார் கள். நாம் இதுவரை 4000-த்திற்கும் மேற்பட்ட கோள்களைக் கண்டுபிடித்து விட்டோம். அந்தக் கோள்களில் நம்மைப் போன்ற உயிரினங்கள் உள்ளதா என்ற ஆய்வும் நடந்து வருகிறது.
நாம் தற்போது இந்த பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதிக்கு அருகில் இருக்கிறோம், நமக்கும் மையப்பகுதிக்கும் உள்ள தூரம் 21,000 ஒளியாண்டுகள் ஆகும்.
பிறப்பு
பெருவெடிப்புக் கொள்கைக்குப் பிறகு பல்வேறு பொருட்கள் உருவாகி அண்டத்தின் வெற்றுவெளியில் நான்கு புறமும் பரவத் துவங்கியது. அவ்வாறு பரவியப் பொருட்களில் அதிகமாக உள்ளவை தூசுகள் தான். இந்த தூசுகள் நாம் முன்பு பார்த்த ஒளிர்முகில் போன்றவைதான்,
ஆனால் இவ்வகை தூசுக்கள் பல ஆயிரம்கோடி மடங்கு பெரியவை, ஒளிவேகத்தில் நான்குபுறமும் பரவிக்கொண்டு இருந்த இந்த தூசுகள் நாளடைவில் தங்களுக்குள்ளே ஈர்ப்புவிசை காரணமாக மையப் புள்ளி ஒன்றை இலக்காக வைத்து சுழல ஆரம்பிக்கின்றது. நாளடைவில் அருகருகில் உள்ள தூசுப் படலங்கள் அனைத்தையும் ஈர்க்கும் போது அது சுருள்வடிவமுள்ள அழகிய பால்வெளி மண்டலங்களாக உருமாறுகிறது.
எடுத்துக்காட்டாக நாம் பஞ்சுமிட்டாய் செய்யும் இயந்திரத்தை எடுத்துக் கொள்ளலாம், பஞ்சுமிட்டாய் செய்பவர் சர்க்கரையை சுழல் சக்கர அடுப்பின் மையத்தில் கொட்டிய பிறகு வேகமாக சுழலும் பாத்திரத்திற்குள் மெல்லிய பஞ்சு போல் படியுமல்லவா அது போல் தான் நமது பால்வெளி மண்டலமும் காட்சிதரும்.
விண்வெளி ஆய்விற்காக ஹப்பிள் (Hubble) என்ற மிகப்பெரிய  தொலை நோக்கியை நாசா வானியல் ஆய்வாளர்கள் கடந்த 1990--ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆ-ம் தேதி விண்ணில் செலுத்தினர். இந்த தொலைநோக்கியின் மூலம் ஏராளமான புகைப்படங்கள் பெறப்பட்டு, தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நமது  பால்வளி மண்டலம் பற்றிய பல்வேறு உண்மைத் தகவல்களைப் படம்பிடித்து அனுப்பி வருகிறது.
முக்கியமாக நமது பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி பற்றி பல்வேறு தகவல்கள் கணக்கீடுகளின் மூலம் கிடைத்தாலும் அதை கண்களால் கண்டு தகவல்களை உறுதிப்படுத்த விண்ணியல் ஆய்வாளர்கள் பேராவல் கொண்டு இருந்தனர். அவர்களின் ஆர்வத்திற்கு ஈடு செய்யும் வகையில் ஹப்பிள் பல்வேறு படங்களை அனுப்பி இருந்தது,
பால்வெளி மண்டலங்களுக்கிடையே இருக்கும் கருந்துளை பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
-பெரியார் பிஞ்சு மாத இதழ்,நவம்பர் 2015

திங்கள், 30 நவம்பர், 2015

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?



வங்கக் கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ கத்தின் கரையோர மாவட்டங் களில் பரவலாக மழை இருக்க லாம் என்று டிவி அல்லது ரேடி யோவில் வானிலை அறி விப்பின் போது தெரிவிப்பார்கள். மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில் சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும். ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.

ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக அதிகமாக இருக்கும்.வேறிடத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம். காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக முக்கியம். வானிலைத் துறையினர் காற்றழுத்தத்தை அளக்க மேலே சொன்ன (சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு என்ற) கணக்கை பின்பற்றுவதில்லை.அவர்கள் கணக்குப்படி கடல் மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லி பார். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.

காற்றழுத்தமானிகள் தெரிவிக்கின்ற எண்ணற்ற தகவல் களை வைத்து காற்றழுத்த நிலவரப் படம் தயாரிப்பார்கள். எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரி அழுத்தம் இருக்கிறதோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து கோடு போடுவார்கள். இதற்கு  lsobar என்று பெயர். மேலே உள்ள படத்தில்  எல் என்ற எழுத்து  Low என்பதைக் குறிப்பதாகும். எச் என்பது  High என்பதைக் குறிப்பதாகும்.படத்தில் 1008 என்று குறிப்பிடப்பட்ட கோட்டைக் கவனிக்கவும். அக்கோடு அமைந்துள்ள இடங்கள் அனைத்திலும் காற்றழுத்தம் அந்த அளவில் இருக்கிறது என்று அர்த்தம். ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் அதிகமாக இருக்க நேரிடலாம். நட்ட நடுவே காற்றழுத்தம் குறைவாக உள்ள இடத்தை  Low  என்று குறிப்பிடுவார்கள். நேர் மாறாக நட்ட நடுவே ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அது  High.

மேடாக இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கியவையாக வருகின்றன. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து.. ஆகவே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் மழை பெய்யும் வாய்ப்பு தோன்றுகிறது.

-விடுதலை,19.11.15
.