வியாழன், 9 மார்ச், 2023

மரபணு ஆராய்ச்சிக்காக சவாண்டே பேபோவுக்குக் கிடைத்த நோபல் பரிசு! (மனித இன தோற்றம்)

 

 நிர்மல் ராஜா

உயிரியலாளர்

மைக்கேல் க்ரைடன் எழுதிய ‘ஜுராசிக் பார்க்’ நாவலில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த டைனோசர்களை, அதன் மரபுத் தொகுதி யைக் கொண்டு குளோனிங் செய்து மீட்டுட்ருவாக்கம் செய்வார்கள். குளோ னிங், மரபணு ஆய்வு போன்றவை மக்களிடையே மிகவும் புதிய சொற்களாக இருந்தன. ‘பல்லாயிரம் ஆண்டுகளுக் குள் முன்னர் அழிந்து போன உயிரி னத்தின் எச்சத்தில் இருந்து மரபணுவைப் பிரித்து எடுக்க முடியுமா?’ என்ற கேள்வி எழுந்தது. ‘முடியும்’ என வெகு சிலரே சொன்னார்கள்; அதுவும் பெருத்த சந்தேகங்களிடையே!

பொதுவாக ஓர் உயிரினத்தின் அனைத்துத் தகவல்களும் அதன் மரபணுத் தொகுதியில் இருக்கும். சமையல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து அதிலுள் ளதைப் போல சமைத்தால் அந்த உணவை நாம் உருவாக்கலாம் என்பது போல, மரபணுத் தொகுதி என்பது பல்லாயிரம் மரபணுக்கள் சேர்ந்தது. மரபணுக்கள் ஓர் உயிரினத்தின் இயல்புகளைப் பற்றிய தகவல்களைச் சந்ததிகளூடே கடத்தவல்லது. 

சொல்லப்போனால் நமது மரபணுக் கள் நமது முன்னோர்களின் உடலின் மூலம் அவர்களின் முன்னோர்களிடம் இருந்து வந்தவையே. இறந்தாலும் இறவா வரம் பெற்றவை மரபணுக்கள். இதை ரிச்சர்ட் டாக்கின்ஸ் ‘இறவாச் சுருள்’ என்கிறார். இறவாச் சுருள் என்றாலும், இவற்றால் ஓர் உடலினுள் மட்டுமே இறவாமல் இருந்து, அவ் வுடலில் இருந்து இன்னோர் உடலுக்கு (இனப்பெருக்கம் மூலம்) தாவிச் செல்ல முடியும். ஓர் உயிரினம் இறந்து விட்டால் அதன் உடலில் வெகு சில காலமே டிஎன்.ஏ. இருக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகும். டி.என்.ஏ.வின் அரை வாழ் காலம் வெறும் 521 ஆண்டுகளே! அதாவது 521 ஆண்டுகளில் அதனுள் இருக்கும் கடடமைப்புகள் உடைந்து போகும். இன்னொரு 521 ஆண்டுகளில் ஒன்றும் இல்லாமல் போய் விடும். இறந்த உடல் அழுகி உருத்தெரியாமல் போவது போல!

ஆனால் சில சூழ்நிலைகளில் அவ்வு டல்கள் பல காலத்துக்கு கெடாது இருக்கும். எகிப்து மம்மிகள் போல காரத்துக்காகவும், ஆல்ப்ஸ் மலையில் சுமார் அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து பனிப் பாறைகளில் இயற்கையாகப் பதப்படுத்த மனித உடல் போலவும், சில சூழ்நிலைகளில் டிஎன்ஏ பல நூற்றாண்டுகளுக்குக் கெடாது இருக்கும். அதாவது மைனஸ் அய்ந்து டிகிரி செல்சியஸ் தட்பவெப்பத்தில் டிஎன்ஏ சுமார் அறுபது லட்சம் ஆண்டு கள் வரை சிதையாமல் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். 

‘டைனோசரகள் மரபணுக்கள் கிடைப்பது சாத்தியமில்லை. ஆனால் அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களை எடுக்கலாமே?’,  ‘ஆராய்ந்தால் நமக்கும் அவர்களுக்கு மிடையே இருக்கும் தொடர்பு நமது பரிணாம வரலாற்றை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுமே?’ போன்ற கேள்விகள் சுவீடனைச் சேர்ந்த மரபியலாளர் ஸ்வாண்டே பேபோவுக்கு எழுந்தன. 

1986-இல் சுவீடனின் உப்சாலா பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், பின்னர் பல நாடுகளில் ஆராய்ச்சியை தொடர்ந்து வந்தார் 1990களில் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாக் நிறுவனத்தில் பரிணாம மானிடவியல் துறையைத் தொடங்க முக்கிய காரணமாக இருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மிக்களில் இருந்து மரபணுக்களை பிரித்தெடுக்க முயன்றார். பல தோல்விகள். மரபணுக்கள் மம்மிக்களிடம் இருந்து வந்தாலும் கூடவே அவற்றைக் கையாண் டவர்கள், சோதனைக் கூடங்களில் இருந்தவர்களின் மரபணுக்களும் சேர்ந்தே வந்தன. பின்னர் பல ஆராய்ச்சிகளின் முடிவில் தொன்மை யான மரபணுக்களைப் பிரித்து எடுப்பது எப்படி என ஒரு முறையான நெறி முறையை வகுத்தார். 

1997-இல் பேபோ சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து போன நியாண்டர்தால் மனிதர்களின் எலும்பு களில் இருந்து டி.என்.ஏ.வைப் பிரித்து எடுக்க முடியும் என நிரூபித்தார், 2010-இல் சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நியாண்டர்தால் மனிதரின் எலும்பில் இருந்து முழு மரபணுத் தொகுதியையும் பிரித்தெடுத்து வெளியிட்டார். அது வரை  எலும்புகளும், கற்கருவிகளும் அகழ்வாராய்ச்சியில் தூசு படிந்து இருந்த தொல் மானுடவியல் ஆராய்ச்சியை முதன் முதலாக பரிசோ தனைக் கூடத்துக்குக் கொண்டு வந்தார் பேபோ. தொன்மையான மரபணுக்களை, இன்று உயிரோடு இருக்கும் நமது மரபணுக்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தபொழுது பல உண்மைகள் வெளிவந்தன. 

அதாவது அதுவரை புதிராக இருந்த நியண்டர்தால்களின் ஆரம்பம் தெளிவா னது. சுமார் ஏழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொது மூதாதையரில் இருந்து நியாண்டர்தால்களும் மனிதர் களும் பரிணமித்தனர். இன்றைய அய்ரோப்பாவில் அவர்கள் பரிணமித் தாலும், பின்னர் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. சந்திப்புகள் ஒரு கட்டத்தில் அன்பாகவும் மாறியது. மனிதர்களும் நியாண்டர்தால்களும் கலந்து பிள்ளை கள் பெற்றுக்கொண்டனர். அதாவது இன்று ஆப்பிரிக்கர்கள் அல்லாத மனிதர் களின் மரபணுக்களில் சுமார் 1 முதல் 2% வரை நியண்டர்தால்களின் மரபணுக்கள் இருப்பதை காணலாம். நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தனித்த மனித இனமே, மற்றொரு மனித இனத்துள் கலந்து முற்றிலும் அழிந்து போனது. 

பேபோவின் கண்டுபிடிப்புகள் மனிதப் பரிணாமம் பற்றிய புரிதலைப் புரட்டிப் போட்டது. அகழ்வாராய்ச்சியில் கிடைக்காத ஆதாரங்களை, நமது மரபணுக்களில் தேடலாம் என உலகுக்கு அறிவித்தார். பேலியோ ஜீனோமிக்ஸ் - தொல் மரபியல் என்ற புதிய துறையைத் தோற்றுவித்தார்.  

முதன் முதலாக மரபணுக்கள் மூலம் இன்னொரு மனித இனத்தை பேபோ கண்டுபிடித்தார். 2010-இல் சைபீரியாவின் அல்டாய் மலைத் தொடரில் இருக்கும் டெனோசோவா குகையில் 40,000 ஆண்டுகள் பழமையான ஒரு விரல் எலும்புத்துண்டு கிடைத்தது. முதலில் யாருடையது என தெரியவில்லை ஒரு வேளை ஒரு நியாண்டர்தாலுடையதாக இருக்கலாம் என கருதினர் ஆராய்ச்சி யாளர்கள். பின்னர் பேபோ மற்றும் அவரது குழுவினர் அவ்வெலும்பில் இருந்து மரபணுத் தொகுதியைப் பிரித் தெடுத்து ஆராய்ந்தபோது, அது நியாண்டர்தாலுடனோ, ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் மரபணுக் களுடனோ பொருந்திப் போகவில்லை. 

சுமார் அய்ந்து லட்சம் முதல் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவில் வாழ்ந்து அழிந்த மற்றொரு மனித இனம் என்பதைக் கண்டுபிடித்தார். மேலும் மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கும் இன்றைய மனிதர்களில் சுமார் 5% வரை அந்த டெனிசோவன்களின் மரபணுக்கள் இருப்பது தெரிந்தது. கற்காலத்தில் மனிதர்கள், நியாண்டர் தால்களுடன் மட்டுமல்லாமல் டெனிசோ வன்களுடனும் கலந்தனர் என்பது தெரியவந்தது. 

இவரின் ஆராய்ச்சியின் விளைவால் மனிதப் பரிணாம வரலாறு ஓர் உயர் வரையறு தொலைக்காட்சியில் (High Definition TV) தெரிந்தாலும், மிகவும் சிக்கலான ஒரு கதையைக் கொண்டது என நமக்கு புரிந்தது.

நியாண்டர்தால் மனிதர்களில் இருந்து நமக்குக் கடத்தப்பட்ட மரபணுக்கள் இன்று கோவிட் தொற்றில் இருந்து இக்கால அய்ரோப்பியர்களைக் காப்பாற் றியது என தனது ஆராய்ச்சியை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த 68 வயது இளைஞர்.  

இன்று ஆதிச்சநல்லூரிலும், கீழடி யிலும், சிந்து சமவெளியிலும் நடக்க விருக்கும் அடுத்த கட்ட ஆராய்ச்சி தொல் மரபியல் ஆராய்ச்சியே என்றால், அறிவியலுக்கான பேபோவின் பங்க ளிப்பும் அதன் முக்கியத்துவமும் நமக்கு புரிந்து இருக்கும்.

சவாண்டே பேபோவுக்கே இந்த ஆண்டின் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக