ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

ஆக்ஸிஜன்உற்பத்திசெய்யமுடியாதா? பற்றாக்குறையின் பின்னணி என்ன? கார்ப்பரேட்டுகளின்சதுரங்கஆட்டம்

#ஆக்ஸிஜன்உற்பத்திசெய்யமுடியாதா? பற்றாக்குறையின் பின்னணி என்ன? #கார்ப்பரேட்டுகளின்சதுரங்கஆட்டம்

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லி அழிந்து விடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகிறார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் மட்டுமே இந்தத் தருணத்தில் செத்து மடிந்த மக்கள் எத்தனை பேர்? ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை ஜெர்மனியில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதாக செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றன.

#இந்தியாவில்ஆக்ஸிஜன்தயாரிப்பது அப்படி என்ன கம்ப சூத்திரமா?

நிச்சயமாக இல்லை. சுவாசத்திற்கு பயன்படும் ஆக்ஸிஜன் 100 சதவித ஆக்ஸிஜன் கிடையாது என்பது பலருக்குத் தெரியாது. நாம் இங்கே குறிப்பிடும் ஆக்ஸிஜன் என்பது வெறும் அழுத்தப்பட்ட காற்றுதான். காற்றில் ஆக்ஸிஜன் 21 சதவிகிதம் இருக்கிறது , 77 சதவிகிதம் நைட்ரஜன், மீதி இரண்டு சதவிகிதம் இதர வாயுக்கள். அழுத்தப்பட்ட ஆக்ஸிஜனிலிருந்து தூசுத் துகள்கள், கார்பன்டைஆக்ஸைடு, ஈரம் ஆகியவற்றை நீக்கிவிட்டு அழுத்தப்பட்ட கனமான உலோக உருளைகளில் அடைக்கப்படுகிறது. சுத்திகரிப்பு என்பது சிக்கலான ரசாயன செயல்பாடு அல்ல. சிலிக்கா ஜெல்லை (இது ஒரு மண்வகை - Porus silicondioxide) ஒரு உருளையில் அடைத்து அந்த உருளையின் வழியாக அழுத்தப்பட்ட காற்று சென்றால் சிலிக்கா ஜெல் ஈரத்தை மட்டும் உறிஞ்சி விடும். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஈரமான சிலிக்கா ஜெல்லை வெப்பக்காற்று செலுத்தி மீட்டெடுக்கலாம். அதே போல் கார்பன்டைஆக்ஸைடையும் உறிஞ்சும் பல ரசாயனப் பொருட்கள் உண்டு. எனவே ஆக்ஸிஜன் சிலிண்டர் என்று கூறப்படுவது சுத்திகரிக்கப்பட்ட காற்றே.

#ஆக்ஸிஜன்தயாரிப்பில்உள்ள பிரச்சினை தான் என்ன?

அழுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட காற்றை எடுத்துச் செல்லும் கனமான உலோக உருளைகள் போதிய அளவு உற்பத்தி செய்யப்படவில்லை என்பதே உண்மை. ஓராண்டுகளுக்கு மேலாக நாம் கொரானாவால் அல்லலுற்றுக் கொண்டிருக்கும்போது இதற்கான திட்டமிடல் இருந்திருக்க வேண்டாமா? ஒரு பெருந்தொற்று பேரவலத்தை ஒரு சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கும்போது, சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிக்கட்டும் என்று ஒரு அரசு விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அரசு தலையிட்டு உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்ய மறுக்கிறது.

இந்த மார்ச் மாதத்தில் மட்டும் உலோக உருளைகளும் ரெகுலேட்டர்களும் அதிகம் உற்பத்தி செய்திருந்தால் கூட இந்த நிலை ஏற்பட்டிருக்காது:காற்றை அழுத்தி தூசை நீக்கி ஈரத்தையும் கார்பன்டைஆக்ஸைடையும் நீக்கி உருளையில் அடைப்பதற்கு எதற்கு ஸ்டெரிலைட் ஆலை? ஒரு சாதாரண ஷெட் போதும். அதற்குள் இரண்டு மூன்று கம்ப்ரஸர்களை நிறுவி இதர உபகரணங்களையும் நிறுவினால் போதும். நகரப் பகுதிகளில் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு இதைப் போன்று ஆக்ஸிஜன் உற்பத்தி ஸ்தலத்தை நிர்மானித்தால் இந்த ஷெட்களை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளிலிருந்து உருளைகளைக் கொண்டு வந்து ரீ ஃபில் செய்து கொள்ளலாம்,

காற்றை 150 Kg/Cm2 அளவுக்கு அழுத்தும் திறன் உள்ள கம்ப்ரஸர்கள் வேண்டும். மூன்று நான்கு கம்ப்ரஸர்கள் இணையாக இயங்க வேண்டும். ஒன்று பழுதானாலும் மற்ற மூன்று இயங்கும். அப்படியே சுத்திகரிக்கும் உருளைகள் வழியாக காற்று சென்று இறுதியாக நிரப்பு உருளைகளில் (Refill Cylinder) வந்து சேர வேண்டும். 25 சதுர கிலோமீட்டர்களில் 50 மருத்துவமனைகள் இருக்குமா?

மருத்துவமனைகள் பற்றாக்குறை என்றாலும்கூட வீடுகளுக்கு எடுத்து சென்று வீட்டிலேயே ஆக்ஸிஜன் கொடுக்கலாம். ஒரு நிரப்பு உருளையின் கொள்ளவு 20 லிட்டர் என்றால் 5,000 சிலிண்டர்கள் நிரப்புவதற்கு உற்பத்தி செய்ய 1 லட்சம் லிட்டர் காற்று தேவை, அதாவது 100 கனமீட்டர் காற்று. இந்த காற்றை 150 கிலோவிற்கு அழுத்தினால் மொத்த கொள்ளவு 15000 nmcft ஆகும். இதை எளிதில் 60 x 40 அதாவது 2400 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தில் அமைத்துவிடலாம்.

பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளில் சமாளிக்கப்பட்டுவிட்டால் நமக்கு ஏராளமான அலுமினிய உருளைகள் உபரியாக மிஞ்சும். இது ஒரு பெரிய சூழலியல் பிரச்சினை கிடையாது. அலுமினிய உருளைகளை உருக்கி வேறு அலுமினியப் பொருட்கள் செய்துவிடலாம். பிளாஸ்டிக் போன்று மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் அலுமினியத்தில் கிடையாது. கம்ப்ரஸர்கள் இதரத் தேவைகளுக்கு பயன்படும்.

#இதற்காகஇந்தியாவின்தென்கோடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமா? வெளிநாடுகளில் இருந்து #இறக்குமதிசெய்யவேண்டுமா?

இந்தியாவின் ஒரு மூலையில் அதாவது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் அழுத்தப்பட்ட காற்றை தயாரித்து தண்டவாளத்தில் எடுத்துச் செல்லக்கூடிய புல்லட்களில் அடைத்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் கொண்டு சென்றால் எவ்வளவு பொருள் விரயம்? இது யாருக்கு லாபத்தை தரும்?

சுய விளம்பரத்துக்காக மட்டும் இயங்கும் மனிதர்களைக்கொண்ட அரசு இதை செய்யுமா? கார்ப்பரேட்களின் லாபத்தை மட்டுமே மனதில் இறுத்தி செயல்படும் அரசு இதைச் செய்யுமா?

#கட்டுரையாளர்குறிப்பு
எஸ். விஜயன், மூத்த பொறியாளர். ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவம் கொண்டவர். தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

#மின்னம்பலம்இணையஇதழில்
வெளியான கட்டுரை

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக