வியாழன், 17 ஆகஸ்ட், 2017

தாவரவியலின் முன்னோடி!


மனிதர்களைப் போலவே தாவரங்களுக்கும் உணர் வுகள் உண்டு. ஆனால், அந்த உணர்வுகளை மதிப்பவர்கள் வள்ளலார் போன்ற சிலரே!
மனிதர்கள் தங்களது ஆரம்ப காலத்திலிருந்து தாவரங் களைச் சார்ந்திருக்கிறார்கள். உணவாகவும் மருந்தாகவும் உடலை மறைக்கவும் எனத் தாவரங்கள் பலவிதங்களில் மனிதர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கின்றன.

உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற, மருத்துவக் குணங்களைக் கொண்ட தாவரங்கள் பலவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பாதுகாக்க, இந்தியாவில் ஒரு பெண் பெருமுயற்சிகளை மேற்கொண்டார். அதுவும் நாடு விடுதலை அடைந்து சுதந்திர இந்தியாவாகத் திகழ்ந்த 
50-களில்! அவர் ஜானகி அம்மாள். 

அவருடைய தந்தை இ.கே.கிருஷ்ணன் தலசேரியில் துணை நீதிபதியாகப் பணியாற்றினார். இயற்கை மீது அவருக்கிருந்த காதலால், தன்னுடைய வீட்டில் பல வகையான தாவரங்களைக் கொண்ட தோட்டம் ஒன்றைப் பராமரித்துவந்தார். அவர் மூலமாகவே ஜானகிக்கும் தாவரங்கள் மீது ஈர்ப்பு வந்திருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்றார் ஜானகி. பிறகு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, சில காலம் அங்கேயே ஆசிரிய ராகவும் பணியாற்றினார். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்து, தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஒரு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில், தாவரவியல் துறையில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்ற இந்தியப் பெண், அநேகமாக ஜானகியாகவே இருப்பார்! 

இன்று நாம் உண்ணும் இந்திய கரும்பில் இனிப்பு இருப்பதற்குக் காரணம் ஜானகி அம்மாள்தான். 1934 முதல் 1939-ஆம் ஆண்டுவரை கோவையில் உள்ள கரும்பு நிறுவனத்தில் மரபணுவியலாளராகப் பணியாற்றினார். ஹைபிரிட் வகைக் கரும்புப் பயிர்களை அவர் உருவாக்கினார். அதற்கு முன்புவரை இனிப்புச் சுவையுள்ள கரும்புகளை இந்தியா, ஜாவா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்துவந்தது.

ஒரு பெண்ணாகவும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவராகவும் இருந்த ஜானகிக்கு அந்த நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் துன்பங்கள் நேரிட்டன. எனவே அங்கிருந்து விலகி, 1940 முதல் 1945-ம் ஆண்டுவரை லண்டனில் உள்ள ஜான் இன்னேஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் உயிரணுவியலாளராகப் பணியாற்றினார். பிறகு இங்கிலாந்தின் விஸ்லி பகுதியில் இருந்த ராயல் தோட்டக்கலைச் சங்கத்தில் மக்னோலியா எனும் ஒருவகைத் தேயிலைத் தாவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் காரணமாக, அந்தத் தாவரத்தின் இன்னொரு வகைக்கு மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தான், சி.டி.டார்லிங்டன் எனும் பிரபல உயிரியலாளருடன் இணைந்து தி குரோமோசோம் அட்லஸ் ஆஃப் கல்டி வேடட் பிளாண்ட்ஸ் எனும் புத்தகத்தை எழுதினார்.

ராயல் தோட்டக்கலைச் சங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஜானகி அம்மாளுக்கு, அன்றைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனம் (பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா) அமைப்பைத் திருத்தி அமைக்க அழைப்பு விடுத்தார். 1951-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த அவர், மரபுசார் தாவரவியல் அல்லது இனக்குழு தாவரவியல் என்று பொருள்படும் எத்னோபாட்டனி ஆய்வுகளை முதன்முதலாக முன்னெடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக 1956-ம் ஆண்டு சிகாகோவில் நடந்த பூமியில் ஏற்படும் மாற்றத்தில் மனிதனின் பங்கு எனும் மாநாட்டில், பழங்குடி மக்களின் மரபு அறிவைப் பற்றிக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

1970-ம் ஆண்டு சென்னைக்குத் திரும்பிய அவர், தனது இறுதிக் காலத்தை மதுரவாயலில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உயராய்வு மய்யத்தின் கள ஆய்வுக்கூடத்தில் கழித்தார். அங்கு, மருத்துவக் குணங்கள் கொண்ட தாவ ரங்களை உடைய தோட்டம் ஒன்றை அவர் பராமரித்து வந்தார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது 1984-ம் ஆண்டு பிப்ரவரி 7 அன்று இயற்கை எய்தினார். தாவரவியல் ஆராய்ச்சியுடன் தனது பணியை நிறுத்திக்கொள்ளாமல், கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் போராட் டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவர். 

அவரின் நினைவாக 2000-ஆம் ஆண்டிலிருந்து தாவரவியல், விலங்கியல் வகைப்பாட்டியலில் சிறந்து விளங்குபவர்களுக்கு, இ.கே.ஜானகி அம்மாள் வகைப் பாட்டியல் தேசிய விருது வழங்கப்படுகிறது. அதைச் சிரத்தையாகச் செய்த அரசு, அவரின் கடைசி காலத்தில் அவர் பணியாற்றிய மதுரவாயல் ஆய்வுக்கூடத்தை மறந்துவிட்டது. அங்கு அவர் வளர்த்த தோட்டம் இன்று பராமரிப்பின்றிப் புல்லும் பூண்டும் மண்டிப் புதராகக் காட்சியளிக் கிறது. அந்த ஆய்வுக்கூடக் கட்டிடங்கள் பாழடைந்துகிடக்கின்றன. ஆனால் அதே நேரம், ஜம்முவில் அவரின் நினைவாக உருவாக்கப்பட்ட ஜானகி அம்மாள் மூலிகைப் பூங்கா போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. வடக்கில் வாழ்கிறது தெற்கில் அழிகிறது!

-விடுதலை,17.8.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக