சனி, 29 அக்டோபர், 2016

நிலவு தோன்றியது எப்படி?: ஆய்வில் புதிய தகவல்



பிரபஞ்சத்தில் பூமி தோன்றிய புதிதில் ஒரு கிரகத்தின் அளவு கொண்ட ஒரு பொருள் பூமியின் மீது மோதியதில் நிலவு உருவானதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமி தோன்றிய புதிதில் 450 கோடி ஆண்டுகளுக்கு முன், வேறு ஒரு கிரகம் பூமியின் மீது பயங்கரமாக மோதியது என்றும், அப்போது சிதறிய பொருட்கள் விண்வெளியில் ஒன்றிணைந்து நிலவாக உருவானது என்றும் விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டு பிடித்தனர். ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவுக்கு சென்றபோது அங்கிருந்து தோண்டி எடுத்து வந்த பாறை படிமங்களையும், பூமியின் தரைமட்டத்துக்கு கீழே 2,900 கி.மீ ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட படிமங் களையும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்தனர். இதில் பூமியில் இருக்கும் இரும்பு, ஆக்சிஜன் போன்ற கலவைகள், நிலவின் பாறைகளிலும் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வேறு ஒரு கிரகத்தின் மோதலால் சிதறிய பொருட்களில் இருந்து நிலவு தோன்றியது என்ற கோட்பாடு ஓரளவுக்கு பொருந்துவதாக தெரிய வந்துள் ளது. அதே சமயம் மோதல் நிகழ்வினால் தான் நிலவு உருவானதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திரவ பொருட்களை மோத வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் கிடைத்த முடிவை கொண்டு, இளம் பூமியில் வேறு ஒரு கிரகம் மோதி நிலவு உண்டானது என்பதை தோராயமாகவே கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-விடுதலை,6.10.16

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

தீயின் புதிய வடிவம் கண்டுபிடிப்பு!

நகரங்களில் தீ விபத்துகள், காட்டுத் தீ பேரிடர்கள் போன்றவற் றால், தீயின் இயற்பியல், வேதியியல் தன்மை களை, விஞ்ஞானிகள் விலாவாரியாக ஆராய ஆரம்பித்தனர். இருந் தும் அண்மையில் தான், சில சூழல்களில் ஒரு, ‘நீலச் சுழல்’ போல தீ எரிவதை விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர்.
பொதுவாக தீ விபத்துகளில் பெரிய அளவு தீச் சுவாலைகள் ஏற்படும்போது, அவை ஒரு சூறாவளி போல சுழன்று எரியும். ஆனால், போதிய அளவு ஆக்சிஜன் கிடைத்தால், மஞ்சள் நிற சுவாலை, முழுக்கவும் அழகிய நீல நிற சுவாலையாக மாறி, சுழன்று சுழன்று எரிவதை, அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தண்ணீரின் மீது எரிபொருள் படலத்தை உருவாக்கி, அதன் மீது எரியும் தீயின் தன்மை களை, மேரிலாந்து விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மேற்கொண்ட ஆய்வில், தீ திடீரென நீல நிறச் சூறாவளியாக மாறி, முதலில் வேகமாக வும், பெரிதாகவும் எரிந்தது. அவ்வப்போது ஆக்சிஜன் போதாமையால், நீலச் சுழல் தீயின் நடுவே மஞ்சள் தீ தோன்றி மறைந்தது.
மற்றபடி நிறைய ஆக்சிஜனை செலுத்தும்போது மாசற்ற நீலச் சுழல் தீ சுழன்றடித்து வேகமாக எரிந்து, மெல்ல உயரம் குறைந்து, தண்ணீரின் மேல் உள்ள எரிபொருள் தீர்ந்ததும் அணைந்து அடங்கியது. கடலில் எரிபொருள் கப்பல்கள் விபத்துக்கு உள்ளாகும்போது, ஆண்டுக்கணக்கில் கச்சா எண்ணெய் மிதப்பது மிகப் பெரிய சுற்றுச்சூழல் கேடு. நீலச் சுழல் தீயை கடலின் மேல் உருவாக்க முடிந்தால், விரைவில் அந்த எண்ணெய் படலத்தை அது,  எரித்து விடும் என்று மேரிலாந்து விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


சூரியனை விட 30 மடங்கு
பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!

விண்வெளியின் பால் வீதியில், நம் சூரியனைவிட, 30 மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்று இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து, 11 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது போன்ற புதிய நட்சத்திரங்களை ஆராய்ந்தால், விண் வெளியில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் எப்படி உருவா கின்றன என்பது தெரியவரும் என, விண்வெளி விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பெரிய அணுத்துகள் களைக் கொண்ட மேகக்கூட்டத்திலி ருந்து உருவாகிவரும் இந்த புதிய நட்சத்திரம், இப்போதும் வேகமாக வளர்ந்து வருவதாக, இதை கண்டறிந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
துகள்கள் மிக்க மேகக் கூட்டத்திலிருந்து பொருட்களை ஈர்த்து வளரும் இந்த நட்சத்திரம் முழுமை பெற்றதும், அதன் அளவு இன்னும் பெரியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.   விடுதலை,1.9.18

பார்வையற்றவர்களுக்காக பயோனிக் கண்


பார்வை என்பது நம் கண்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் ஓர் அற்புத வரம். வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்குப் பார்வை முக்கியம். இருட்டில் இருந்து கொண்டு பூட்டைத் திறந்து பாருங்கள். அப்போது தெரியும், பார்வையின் அவசியம்.
பிறவியிலேயே பார்வை இழப்பதற்கும், வளர்ந்த பிறகு பார்வையைப் பறிகொடுப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் இரண்டரை கோடிப் பேர் பார்வையை இழந்து தவிக்கிறார்கள். இப்படி இழந்த பார்வையை மீட்டுத் தருவதற்கு மருத்துவ உலகம் பல்வேறு தொழில் நுட்பங்களைப் புகுத்தி வருகிறது. இவற்றில் சமீபத்திய வரவு, பயோனிக் கண்!
இதைப் பற்றித்தெரிந்துகொள்ள வேண்டுமானால் நமக்குப் பார்வை எப்படிக் கிடைக்கிறது என்கிற அடிப்படை அறிவியல் தெரிய வேண்டும்...கண்ணின் வெளியில் தெரிகிற வெண் மையான பகுதிக்கு ஸ்கிலீரா என்று பெயர். அதன் மேல் படர்ந்திருக்கும் மெல்லிய திசு உறைக்குக் கஞ்சங்டிவா என்று பெயர். அடுத்து ஒரு வட்டமாகத் தெரிவது அய்ரிஸ். கண்ணுக்கு நிறம் தருவது இதுதான்.
நீலம், பச்சை, மாநிறம், கறுப்பு என்று ஏதேனும் ஒரு நிறத்தில் இது அமைந்திருக்கும். இதன் நடுவில் பாப்பா என்று அழைக்கப்படுகிற ஒரு துவாரம் இருக்கும். இதன் வழியாகத்தான் நாம் பார்க்கிற காட்சிகள் கண்ணுக்குள் நுழைகின்றன.
கைக்கடிகாரத்தை மூடியிருக்கிற கண்ணாடி மாதிரி ஐரிஸை மூடியிருக்கிற திசுப்படலத்துக்கு கார்னியா என்று பெயர். கண்ணில் ரத்தக்குழாய் இல்லாத பகுதியும் இதுதான். நிறமில்லாத பகுதியும் இதுதான்.
கேமராவில் உள்ள அப்பர்ச்சர் அமைப்பு மாதிரிதான் இதுவும். அதிக வெளிச்சம் வந்தால் பாப்பா சிறிதாகச் சுருங்கி விடுகிறது. குறைந்த வெளிச்சம் என்றால் பெரிதாக விரிந்து கொடுக்கிறது. இந்தச் செயலுக்கு இதன் இரண்டு பக்கங்களிலும் உள்ள சிலியரி தசைகள் உதவுகின்றன.
கார்னியாவுக்குப் பின்புறம் விழிலென்ஸ் உள்ளது. அதற்குப் பின்னால் விழித்திரை உள்ளது. நாம் பார்க்கும் பொருளின் பிம்பத்தைக் கார்னியாவும் லென்சும் விழித்திரையின் மேல் விழச்செய்கின்றன. இந்த பிம்பம் விழித்திரையிலிருந்து கிளம்பும் கண் நரம்பு வழியாக மூளைக்குக் கடத்தப்படுகிறது. அந்தக் காட்சி ஆக்சிபிடல் கார்டெக்ஸ் பகுதியில் பகுக்கப் படுகிறது. இதன் பலனால் நாம் பார்க்கும் பொருள் என்ன என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
இந்தக் கட்டமைப்பில் எங்கு பிழை ஏற்பட்டாலும் பார்வை குறையும்; அல்லது பறி போகும். கார்னியாவில் பழுது ஏற் பட்டால், தானமாகப் பெறப்பட்ட கார்னியாவைப் பொருத்தி பார்வையை மீட்கலாம். லென்ஸில் பாதிப்பு ஏற்பட்டு கிட்டப்பார்வை,
தூரப்பார்வை தோன்றுமானால் கண்ணில் கண்ணாடி அணிந்துகொண்டோ, கான்டாக்ட் லென்ஸைப் பொருத்திக்கொண்டோ சமாளித்து விடலாம். லென்ஸில் கேடராக்ட் வந்து பார்வை குறைந்தால் செயற்கை லென்ஸைப் பொருத்திக் கொள்ள, பார்வை கிடைத்துவிடும். விழித்திரைக் கோளாறுகளால் பார்வையை இழக்கும்போது லேசர் சிகிச்சை கைகொடுக்கிறது.
பார்வை பறிபோன ஒருவருக்கு இப்படிப் பல வழிகளில் பார்வையை மீட்டுத்தரும் மருத்துவ உலகம், மரபுக்கோளாறினால் ஏற்படுகிற பார்வை இழப்பை மீட்டுத் தருவதற்கு இன்னமும் சரியான வழியைக் கண்டுபிடிக்கவில்லை. இவர்களுக்குக் கை கொடுக்கவே இப்போது வந்திருக்கிறது பயோனிக் கண்கள்.
பயோனிக் என்றால் எலெக்ட்ரானிக் மற்றும் மென் பொருள்களால் தயாரிக்கப்பட்ட செயற்கை உடலுறுப்பு என்று அர்த்தம். உடலில் இயற்கை உறுப்பு செய்யும் அதே வேலையை இந்த பயோனிக் உறுப்பு உடலின் வெளியிலிருந்து செய்யும்.
முதன்முதலில் 1983இல் போர்ச்சுக்கீசிய மருத்துவர் ஜோவோ லோபோ ஆன்டியூன்ஸ் என்பவர்தான் பயோனிக் கண் பொருத்தும் முறையைக் கண்டுபிடித்தார். இவருடைய கண்டு பிடிப்பில், வெறும் இருட்டாகத் தெரிந்த ஒருவருக்கு பயோனிக் கண்ணைப் பொருத்தியதும் சிறிது வெளிச்சமும் காட்சிகள் நகர்வதும் தெரிந்தன. காட்சிப் பொருள் முழுவதுமாகத் தெரிய வில்லை.
இவருக்குப் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அமைப்பில் பல மாறுதல்களைச் செய்து முழுமையான பார்வை கிடைப்பதற்கு முயற்சித்து வந்தனர்.
அவர்களின் முயற்சிக்கு இப்போது ஓரளவு வெற்றி கிடைத் திருக்கிறது. இந்தச் சாதனையைப் புரிந்திருப்பவர்கள் அமெரிக்காவில் ரோசெஸ்டரில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த 68 வயது ஆலன் ஜெராடுக்கு இருபதாண்டுகளுக்கு முன்பு விழித்திரையில் ரெட்டினைட்டிஸ் பிக்மென்டோசா என்ற நோய் வந்து பார்வை பறிபோனது.
இது ஒரு பரம்பரைக் கோளாறு. மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை இல்லை என்ற நிலைமைதான் இதுவரை நீடித்தது. இவருக்கு பயோனிக் கண்ணைப் பொருத்தி சாதித்திருக்கிறார் டாக்டர் ரேமண்ட் லெஸ்ஸி. இவர்தான் இந்த ஆராய்ச்சிக்குழுவின் தலைவர்.
முதலில் ஆலனின் வலது கண்ணின் விழித்திரையில் சிலிக்கன் சில்லைப் பொருத்தினோம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு செகண்ட் சைட் நிறுவனம் இவருக்கென்றே தயாரித்துக் கொடுத்த பயோனிக் கண்ணாடியைத் தந்தோம்.
கண்ணாடியின் மூக்குப் பகுதியில் உள்ள கேமரா, எதிரே காண்கிற காட்சிகளைப் படமெடுத்து அவரது பாதிக்கப்பட்ட விழித்திரைக்குச் செலுத்த, அங்குள்ள சிலிக்கன் சில்லு அந்தக் காட்சிகளை மின் சமிக்ஞை களாக மாற்றி பார்வை நரம்பு வழியாக மூளைக்கு அனுப்ப, மூளை எதிரே பார்ப்பது பூவா, பழமா, பேருந்தா, ஆட்டோவா என்று தெரிவித்து விடுகிறது.
இருப்பினும் ஒரு சராசரி மனிதரால் பார்க்க முடிகிற மாதிரி தெள்ளத் தெளிவாகக் காட்சிகள் தெரியாது. ஆனால் இப்போது எதிரே இருப்பவரை அடையாளம் காண முடிகிறது என்கிறார்.
-விடுதலை,18.8.16

அண்டார்டிகாவின் ஒரு பகுதியாக இந்தியா இருந்தது: புதிய ஆய்வில் தகவல்

இந்தியத் துணைக் கண்டமானது 100 கோடி ஆண்டு களுக்கு முன்பு அன்டார்க்டிகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்ற கருத்துக்கான ஆதாரத்தை புவிய மைப்பியல் விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆய்வில் நிரூபித்துள்ளனர்.
இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியின் வெளிப்புற அடுக்குகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தொன்மையான பாறைகள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது கண்டங்கள் உருவானது தொடர்பான முக்கிய விஷயங்களைக் கண்டறிந்தனர்.
இது குறித்து இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய கோரக்பூர் அய்.அய்.டி கல்வி நிறுவன பேராசிரியர் தேவாசிஸ் உபாத்யாயாவும், சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளாஸ் மெஸ்கரும் பிடிஅய் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
அன்டார்டிகா கண்டமும் இந்தியத் துணைக் கண்டமும் ஒரு காலத்தில் மிகப்பெரிய ஒரே கண்டமாக இணைந் திருந்தன என்றும் அவை 150 கோடி ஆண்டுகளுக்கு முன் தனியாகப் பிரிந்தன என்றும் கூறப்பட்டு வந்த கருத்தை எங்களால் முதல் முறையாக மெய்ப்பிக்க முடிந்துள்ளது.
அதன் பின் இந்தியாவும் அன்டார்க்டிகாவும் ஒரு கடலால் பிரிந்தன. இந்தக் கடலானது நிலப்பகுதியால் மீண்டும் மூடப்பட்டதால் இரு கண்டங்களும் மீண்டும் ஒன்றிணைந்தன. அந்த கண்டங்களுக்கிடையே சுமார் நூறு கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உருவானது.
இரு கண்டங்களும் மீண்டும் ஒரு முறை பிரிந்து, பழைய கடல் இருந்த இடத்தில் புதிதாக ஒரு கடல் உருவானது. அதன் பின் கண்டங்களின் இயக்கத்தில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது. சுமார் 60 கோடி ஆண்டு களுக்கு முன் அவை மீண்டும் மோதிக்கொண்டபோது மற்றொரு மலைத்தொடர் உருவானது. தென்னிந்தியா வரையிலான கிழக்குத் தொடர்ச்சி மலை மட்டுமின்றி இலங்கை, மடகாஸ்கர் வரை மலைத்தொடராக அது நீண்டது. அவை அனைத்தும் அப்போது இந்திய துணைக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.
அதன் பின் மீண்டும் இந்தியாவும் அன்டார்க்டிகாவும் பிரிந்தன. அப்போது இரு கண்டங்களுக்கும் இடையே மிகப்பெரிய கடல் தோன்றியது. அதன் பிறகும் இந்த இரு நிலப்பகுதிகளும் பல முறை இணைந்துள்ளன.
இவை அனைத்தும் பூமியில் மனிதகுலம் தோன்று வதற்கு முன் நடைபெற்றன. இதற்கான ஆதாரங்களை எங்கள் ஆய்வுக்குழு சிங்க்பூம் மலைப்பகுதியிலும், ஒடிஸா மற்றும் ஜார்க்கண்டில் கிழக்குத்தொடர்ச்சி மலைப் பகுதியிலும் சேகரித்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வுக் குழுவின் ஆய்வு முடிவுகள் சர்வதேச அறிவியல் இதழான “எல்சீவியர்’ இதழில் அண்மையில் வெளியாகியுள்ளன.


உங்களுக்கு தேஜா-வூ மூளையா?
மூளையின் ஞாபகத் தவறுகளை சோதித்துப் பார்ப்பதுதான் தேஜா-வூ என்ற விசித்திரமான உணர்வு என சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று கூறியிருக்கிறது.
மூளையின் ஞாபகத் தவறுகளை சோதித்துப் பார்ப்பது தான் இந்த உணர்வு என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில், போலியான ஞாபகங்களை தூண்டச் செய்து, விரைவாக மறைந்துவிடும் தேஜா-வூ உணர்வை தன்னார்வலர்களுக்கு இந்த விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
பின்னர் அவர்களின் மூளையை ஸ்கேனிங் (வரிமம்) செய்கிறபோது அவற்றைக் கேள்விக்கு உட்படுத்தினர்.
மிகவும் தெரிந்தவைகளாக எண்ணுவதற்கும், அவ்வாறு இருக்கவே முடியாது என்று தெரிந்திருப்பதற்கும் இடையிலான ஒரு போராட்டத்திற்கு முடிவு காணும் முயற்சிக்கு முன்மொழிவுகளை வழங்கும் வகையில் மூளையின் தீர்மானங்கள் எடுக்கும் பகுதி விழித்துக் கொள்கிறது என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தேஜா-வூ விசித்திர உணர்வை அனுபவிப்பது மூளை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்.
-விடுதலை,18.8.16

திங்கள், 10 அக்டோபர், 2016

நானோ தொழில்நுட்பத்தின் முன்னோடி இயற்கை!

தற்காலத்தில் நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அளப் பரியது. உடுத்தும் உடையிலும், வீட்டில் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களிலும், சில மருந்துகளிலும், உணவு பொருட்களிலும், நோயினை கண்டறியும் கருவிகளிலும், நீர் சுத்தீகரிப்பு சாதனங்களிலும், மின் உற்பத்தி மற்றும் சேமிப்பு கலனிலும், நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏறக்குறைய எல்லா துறையிலும் உள்ள ஆராய்ச்சியாளர் களால் மிகவும் கவரப்பட்டு பயன்படுத்தும் தெழில்நுட்பமாக விளங்குகிறது நானோ தொழில்நுட்பம்! நானோ தொழில் நுட்பத்தின் மீதான மோகத்திற்கு என்ன காரணம்? நானோ பொருட்களின் அதீத பயன்களும், வித்தியாசமான பண்பு களும் தான்! முதலில் நானோ என்றால் என்ன? என்று அறிந்து கொள்வோம். நானோ என்ற சொல் நன்னாஸ் என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. நன்னாஸ் என்பதற்கு குள்ள அல்லது சிறிய என்று பொருள்.
உதாரணமாக ஜப்பனீஸ் குரங்கையும், மார்மோசெட் வகை குரங்கையும் பாருங்க. இரண்டும், குரங்கினமாக இருந்தாலும், ஜப்பனீஸ் குரங்கின் சராசரி உயரம் 60  ஆனால் மார்மோசெட்டின் சராசரி உயரமோ 19  தான்! எனவே, உயரத்தில் மிகவும் சிறியதான மார்மோசெட் குரங்கினத்தை, நானோ மார்மோசெட் என்று அழைக்கலாம். ஆனால், சிறிய என்ற சொல் ஒரு ஒப்பீட்டளவிலான வார்த்தை. கிலோ மீட்டரை, மீட்டருடன் ஒப்பிடும் பொழுது, மீட்டர் சிறிய அளவு ஆகும். இதே போன்று மீட்டரை, சென்டிமீட்டருடன் ஒப்பிடும் பொழுது, சென்டிமீட்டர் சிறிய அளவு ஆகும். எனவே, சிறிய அல்லது நானோ பொருள் என்றால், எந்த அளவிற்கு சிறிய என்ற வினாவுடன், குழப்பமும் ஏற்படு வதை தவிர்க்க விஞ்ஞானிகள், நானோ விற்கு சரியான அளவை கொடுத்துள்ளனர்.
அதுதான் 10-9. அதாவது, ஒரு பொருள் நானோமீட்டர் அளவில் இருக்கும் என்றால் அதன் அளவு 10-9  ஆகும். சரி, ஒரு பொருளின் அளவு குறைந்து நானோமீட்டர் அளவிற்கு சென்றால் என்ன நன்மை? அப்பொருளின் பண்புகள் பெருமளவு மாறுபடும், அதனால் அதன் பயன் களும் அதிகரிக்கும்.  மேலும் நானோ தொழில் நுட்பத்தின் முன்னோடி இயற்கை தான் என்பதை, பின்வரும் செய்திகள் மூலம் ஊர்ஜிதபடுத்த முடியும்!
பல்லியின் ஒட்டும் தன்மை: நம் வீட்டின் சுவரின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லியை பாருங்கள். புவியீர்ப்பு விசையையும் எதிர்த்து பல்லி உறுதியாக ஒட்டிக் கொண்டி ருப்பதற்கு என்ன காரணம்? அதன் கால்கள் தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, பல்லியின் ஒவ்வொரு காலிலும் லட்சக்கணக்கான இழைகள் உள்ளதாகவும், ஒவ்வொரு இழையிலும் என்னற்ற ஸ்பேட்சுலே எனப்படும் நானோ இழைகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நானோ கட்டமைப்புகளே பல்லி சுவரில் உறுதியாக ஒட்டிக் கொண்டிருப்பதற்கு காரணம் என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் நானோபசைகள். 
-விடுதலை,7.7.16