
தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று பொருட்கள் தேவை.
அவை
- எரிபொருள்
- வெப்பம்
- உயிர்வளி (ஆக்சிஜன்) என்பன.
இந்த மூன்று பொருள்கள் ஒன்று சேர்ந்தால் தான் தீ உண்டாகும்.

எரிந்து கொண்டிருக்கும் பொருளை அணைக்க வேண்டுமானால். எரியும் பொருளின் வெப்பத்தை குறைக்க வேண்டும். அதற்காக தண்ணீர் அல்லது தண்ணீரால் நனைக்கப்பட்ட பொருள் கொண்டு அணைக்கலாம். (குளிர்விக்கும் முறை)
அடுத்தது உயிர்வளி எனப்படும் ஆக்சிஜன் கிடைப்பதை தடை செய்ய வேண்டும். தீயை மூட வேண்டும் அல்லது கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) எனப்படும் கரியமில வளியினை படரவிட்டு அணைக்க வேண்டும். (போர்வை முறை)
பெரிய அளவில் எரிந்து கொண்டிருக்கும் போது; தீ மேலும் பரவாமல் இருக்க, பக்கத்தில் உள்ள எரிபொருளை அப்புறப்படுத்த வேண்டும். (‘தீ’க்கு பட்டினி போடும் முறை)
பூமியில் மட்டுமே தீ
நமது புவியில் மட்டுமே எளிதில் தீ உண்டாகும். மற்ற கோள்களிலோ விண்மீன்களிலோ, பால்வெளி மண்டலங் களிலோ (கேலக்சி) கூட தீ உண்டாகாது. நம் புவியில் மட்டுமே உயிர்வளி (ஆக்சிஜன் )உள்ளது. அதனால் இங்கு எளிதில் தீ உண்டாகின்றது
அதோடு மட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் (காற்றில்) ஒரு குறிப்பிட்ட அளவில் உயிர்வளி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தீ உண்டாகும். நமது வளிமண்டலத்தில் 20.95% உயிர்வளி உள்ளது. இது தீ உண்டாக போதுமான அளவு ஆகும்.

தற்போது உள்ள இந்த விழுக்காட்டிற்கு, அதாவது 25%க்கு மேல் உயிர் வளி இருந்தால் தற்போதுள்ள சாதாரண வெப்பநிலையிலேயே தானாகவே தீப்பிடித்து எரியும் நிலை ஏற்பட்டுவிடும். 15%க்கு கீழ் உயிர்வளி குறைந்தால் தீ அணைந்து விடும். தீயை உண்டாக்க முடியாது.
வெப்பம் எப்படி உண்டாகிறது?
வெப்பம் உண்டாக உராய்வு மட்டுமே போதும். இரண்டு பொருள்கள் உராயும்போது வெப்பம் உண்டாகிறது. அதேபோல் பொருள்கள் வினை புரியும்போதும் உராய்வு ஏற்பட்டு வெப்பம் உண்டா கிறது.

மின் விளக்கு எரிகிறது என்று சொல்கிறோம் ஆனால் உண்மையில் மின்விளக்கு எரிவதில்லை. வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்கிறது.
மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்கு போன்றவற்றை எரிய விட்டுக் கொண்டு இருந்த நாம், பழக்கத்தின் பேரில் மின் விளக்கையும் எரிகிறது என்கிறோம். ஒளிர்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
‘அக்னி பகவான்’
பெற்ற சாபமாம்
சிவபெருமான் இமய மலையின் உச்சியில், தன் மனைவி பார்வதியுடன் 100 தேவ ஆண்டுகள் உல்லாசமாக இருந்து, உடலுறவு இன்பத்தில் ஈடுபட்டு வந்தானாம்; இதனிடையே அக்னி பகவான் ‘புறா’ உருவம் கொண்டு அந்த இடத்திற்கு சென்று சிவபெருமானின் லீலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் சிவனின் விந்து நழுவி வீணானதாம். அதனால் பார்வதிதேவி தனக்கு குழந்தை பிறக்க விடாமல் செய்த அக்னி பகவானை “அக்னி(தீ)க்கு சயரோகம் (எலும்புருக்கி நோய்) பிடித்தது போல் உடன் புகையும் ஒரு பகுதியாக சேர்ந்து வரும்.”என்று சபித்து விட்டாளாம். அதனால் தான் தீ எரியும் போது புகையும் சேர்ந்து வருகிறதாம். காளிதாசர் இயற்றிய ‘’குமாரசம்பவம்’’ சருக்கம் – 10இல் இந்த கதை கூறப்பட்டுள்ளது.
உண்மையில் புகை எதனால் ஏற்படுகிறது
நீரை சூடு படுத்தும் போது நீரிலிருந்து நீராவி வெளி வருகிறது. இதுவும் ஒரு வகை புகை தான். நீரில் இருந்து வெளி வருவதால் அதை நாம் வேறுபடுத்தி நீராவி என்று சொல்கிறோம்.
ஒகேனக்கல்
தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்று ஒரு சுற்றுலா இடம் உள்ளது. ஒகேனக்கல் என்பது கன்னட மொழி பெயர். ‘ஒகனே’ என்றால் புகை. அதாவது ‘புகையும் கல்’ என்று பொருள். கல்லின் மீது நீர் மோதி சூடாகி, புகை போன்ற ஒரு நீர்த்துளிகளை உண்டாக்குகிறது. இதைத்தான் புகை என்கின்றனர்.
நாம் நடைமுறையில் புகை என்று சொல்வதைப் பற்றி பார்ப்போம்.
பொருட்கள் எரியும் போது தொடர்வினை ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து எரிகிறது. இதனால் இந்த பொருளில் உள்ள கரி, நீர் ஆகியவை ஆவி வடிவில் வெளியேறுகின்றன. அதாவது கரித்துகள், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் நீராவி கலந்த ஒரு பொருள் வெளியேறுகிறது இவைதான் கருநிற புகையாக தெரிகிறது.
பொருள் முழுமையாக எரிக்கப்பட்டால் புகை வருவதே தெரியாது. அரைகுறையாக எரிக்கப்படும் போது தான் புகை வருகிறது.
இந்த அறிவியல் உண்மை தெரியாத காலத்தில் மதத்தின் பெயரால் முட்டாள்தனமாக கருத்துகளை பரப்பியுள்ளனர். இதுபோன்ற கருத்துகளை மதவெறியர்கள் எப்படியாவது பாட புத்தகங்களில் சேர்த்துவிடலாம் என்று முயன்று வருகின்றனர்.
-விடுதலை ஞாயிறு மலர், 25.10.2025