ஞாயிறு, 23 நவம்பர், 2025

எகிப்து பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட முதலைகளின் படிமம் குழம்பிப்போன ஆய்வாளர்கள்!

 கெய்ரோ, நவ. 6- பழங்கால படி மங்கள் அனைத்தும் நம்மை மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகின்றன. அந்த வகையில், எகிப்து நாட்டின் பாலைவனப்பகுதியில் இருந்து முதலையின் படிமம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

முதலையின் படிமம்

பாலைவனத்தில் எப்படி முதலை வாழ்ந்திருக்கும்? என்கிற கேள்வி விஞ்ஞானிகளை ஆச்சரியப் படுத்தினாலும், இந்த படிமங்கள் கடல் முதலையினுடையது என்று சொல்லப்படுவதுதான் அதைவிட ஆச்சரியமான விசயமாக இருக்கிறது. கடலில் முதலைகளால் வாழ முடியாது.

தற்போது இருக்கும் உப்பு நீர் முதலைகள் கடலில் 100 கி.மீ வரை கூட வேட்டையாடும் என்றாலும், அது நிரந்தரமான கடல்வாழ் உயிரி கிடையாது. இனப்பெருக்கத்திற்கும், முட்டையிடுவதற்கும் அது கரைக்கு வந்தாக வேண்டும். ஆனால் எகிப்து பாலைவனத்தில் கண்டு பிடிக்கப்பட்ட முதலை முழுக்க முழுக்க கடல்வாழ் உயிரினமாகும்.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்றும், இந்த மாற்றம் காரணமாக கடல்கள் இடம் பெயர்கின்றன என்றும் ஒரு கோட்பாடு விஞ்ஞானிகளால் முன்வைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு காலத்தில் எகிப்து கடல் பகுதியாக இருந்திருக்கலாம் என்றும், பின்னர் கடல் வேறு பகுதிக்கு மாறியதால், எகிப்து பாலை வனமாக மாறியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அப்படியாகத்தான் சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து கடல் பகுதியில், கடல் நீர் முதலை வாழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த முதலைகள், தற்போது நாம் பார்க்கும் முதலைகள் போன்று வடிவமைப்பை கொண்டிருந்தாலும், முழுக்க முழுக்க மீன் போல கடல் நீரிலேயே வாழ்வதற்கான அனைத்து அம்சங்களையும் பெற்று, முழு நேரமும் கடலி லேயே வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக் கின்றனர்.

டைனோசர்கள் அழியும் கொஞ்ச காலத்திற்கு முந்தைய காலத்தில்தான் இந்த முதலைகள் வாழ்ந்து வந்ததாகவும், இப்போது இந்த வகையான முதலைகளே கிடையாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை ஆய்வு செய்யும்போது, முதலைகளின் பரிணாம வளர்ச்சி நாம் கணித்ததற்கு முன்பிருந்தே நடந்திருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த மாதிரியான கண்டு பிடிப்புகள், உலகம் எப்படி உருவா னது, எந்தெந்த கட்டங்களை தாண்டி வந்திருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள உதவும். அதன் மூலம், உலகம் தற்போது எதை நோக்கி பயனித்துக்கொண்டிருக்கிறது? என்பதையும் அறிந்துக்கொள்ள உதவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

- விடுதலை நாளேடு, 6.11.25

சனி, 1 நவம்பர், 2025

உருகாத தங்கம்: உறைநிலையை விட 14 மடங்கு சூடாக்கிய விஞ்ஞானிகள்!

 

தங்கம் போன்ற எந்தவொரு திடப்பொருளையும் அதன் உறைநிலையை (Melting Point) தாண்டி சூடாக்கினால் என்ன ஆகும்? அது உருகி திரவமாக மாறிவிடும். ஆனால், விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு நம்பமுடியாத சோதனையைச் செய்துள்ளனர்.

அவர்கள் திடமான தங்கத்தை, அதன் உறைநிலையை விட 14 மடங்கு அதிக வெப்பநிலைக்குக் கொண்டு சென்றும், அது உருகாமல் திடமாகவே இருப்பதை உறுதி செய்துள்ளனர். இது அறிவியலில் ஒரு மாபெரும் சாதனை.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோதனை!

சூரியனின் உட்பகுதி அல்லது மற்ற கோள்களின் மய்யம் போன்ற இடங்களில் உள்ள பொருட்கள் “வெதுவெதுப்பான அடர்த்தியான பொருள்” (Warm Dense Material) என்று அழைக்கப்படுகின்றன. இவை மில்லியன் கணக்கான டிகிரி வெப்பநிலையில் இருக்கும். ஆனால், இவ்வளவு அதீத வெப்பநிலையைத் துல்லியமாக அளவிடுவது விஞ்ஞானிகளுக்குப் பல்லாண்டுகளாகப் பெரும் சவாலாக இருந்தது.

இந்தச் சவாலை முறியடிக்க, விஞ்ஞானிகள் ஒரு அதிவேக எக்ஸ்-ரே லேசரைப் பயன்படுத்தினர். அவர்கள் 45 ஃபெம்டோ வினாடிகள் (அதாவது, ஒரு வினாடியை பல்லாயிரம் டிரில்லியனாகப் பிரித்தால் அதில் ஒரு பங்கு) மட்டுமே நீடிக்கும் லேசர் துடிப்பை, ஒரு மெல்லிய தங்கத் தகட்டின் மீது பாய்ச்சினர். இந்த அதீத ஆற்றல், தங்கத்தின் அணுக்களை அதிவேகமாக அதிரச் செய்தது. அதன் வெப்பநிலையை அளக்க, இரண்டாவது லேசர் துடிப்பை அனுப்பி, அது சிதறி வருவதை வைத்து அணுக்களின் அதிர்வைக் கணக்கிட்டனர்.

அதிர்ச்சியளித்த  முடிவுகள!

தங்கத்தின் சாதாரண உறைநிலை 1,337 கெல்வின் (1,064 C) ஆகும். ஆனால் இந்தச் சோதனையில், தங்கத்தின் வெப்பநிலை 19,000 கெல்வின் (18,700 C) வரை உயர்ந்தது. இது அதன் உறைநிலையை விட 14 மடங்கு அதிகம். இவ்வளவு கொதிநிலையிலும் தங்கம் உருகாமல் திடப்பொருளாகவே இருந்தது. இதுவே இதுவரை பதிவுசெய்யப்பட்ட “மிக வெப்பமான திடப்பொருள்” (Hottest Crystalline Material) ஆகும்.

பழைய கோட்பாடு உடைந்தது!

1980-களிலிருந்து, “என்ட்ரோபி பேரழிவு” (Entropy Catastrophe) என்ற கோட்பாடு ஒன்று இருந்தது. அதன்படி, எந்தவொரு திடப்பொருளையும் அதன் உறைநிலையை விட மூன்று மடங்குக்கு மேல் சூடாக்க முடியாது. அப்படிச் செய்தால், திடப்பொருளின் ஒழுங்கான அணுக்கட்டமைப்பு, திரவத்தின் ஒழுங்கற்ற அமைப்பை விட அதிக ஒழுங்கற்றதாக மாறி விடும். இது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியை (Second Law of Thermodynamics) மீறும் ஒரு முரண்பாடாகும். ஆனால், இந்தச் சோதனை அந்தப் பழைய கோட்பாட்டைத் தவறென நிரூபித்தது. மிக மிகக் குறைந்த நேரத்தில் தங்கத்தை சூடாக்கியதால், அதன் அணுக்களின் கட்டமைப்பு விரிவடைந்து, உடைந்து, திரவ மாக மாறுவதற்கு நேரமே கிடைக்க வில்லை.  இந்தச் சோதனை, அதீத வெப்பநிலையில் உள்ள பொருட் களை அளவிட ஒரு புதிய வழியை விஞ்ஞானிகளுக்குக் காட்டியுள்ளது.

-விடுதலை நாளேடு, 30.10.25