பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் சண்டை மூண்டால்…-செ.ர.பார்த்தசாரதி

பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக சொல்லி; ‘மாயாஜால வித்தை’ (தந்திரக் காட்சி) காட்டுபவர்கள், கடைசியில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடாமலேயே மூட்டை கட்டி விடுவர்.
இது எதனால் என்றால் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விட்டால், கீரி பாம்பை கொன்று விடும் அதனால்.!
பாம்புகளின் வகைகள்
பாம்புகளில் நஞ்சு உள்ளவை நஞ்சு இல்லாதவை என இரண்டு வகை உள்ளது. அதேபோல் நஞ்சு உள்ளவைகளிலும் இரண்டு வகைகள் உள்ளன. அவை:
1.. நீயூரோ டாக்சிக்’ (Neurotoxic) உள்ளவை. 2.‘ஈமோ டாக்சிக்’(Hemotoxic) உள்ளவை. என்பனவாகும்.
நியூரோ டாக்சிக் நஞ்சு உடலின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ‘ஈமோ டாக்சிக்’ நஞ்சு இரத்தத்தைப் பாதித்து, திசு சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
நாகப்பாம்புகள், மாம்பாக்கள் மற்றும் கிரெய்ட்கள் ‘நியூரோ டாக்சிக்’ நஞ்சை கொண்டுள்ளன, அதே நேரத்தில் ‘ராட்டில் ஸ்னேக்ஸ்’ மற்றும் ‘அட்டர்ஸ்’ போன்ற விரியன் பாம்புகள் ‘ஈமோ டாக்சிக்’ நஞ்சை கொண்டுள்ளன.
கீரிப்பிள்ளையும் பாம்பும்
கீரிப்பிள்ளைக்கும் பாம்புக்கும் சண்டை மூண்டால் கீரிப்பிள்ளையே வெல்லும். கீரிப்பிள்ளை விரைந்து செயல்படும் ஆற்றல் கொண்டது. இதனால் பாம்பிடம் சண்டை போட்டு, போக்கு காட்டி, பாம்பை சோர்வடைய வைக்கும். கீரிப்பிள்ளை தனது உடலில் இருக்கும் மயிர்களை சிலிர்க்க வைத்து பாம்புக்கு பெரிய உடலாக காண்பிக்கும்; இதனால் பாம்பின் கடி கீரிப்பிள்ளையின் உடல் மீது பதியாமல், மயிர் பகுதியிலேயே பதியும். அதோடு அதன் தோல் பகுதி மிகவும் கடினமானதால், கடியும் சரியாக பதியாது. கீரிப்பிள்ளை பாம்பின் தலையை சிதைத்தும்; கழுத்தை குதறியும் கொன்றுவிடும். கீரிப்பிள்ளையின் கடி மிக வலிமை வாய்ந்தது. அப்படியே பாம்பின் கொத்து, கீரியின் உடம்பில் பட்டு நஞ்சு பாய்ந்தாலும் பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாது. காரணம் கீரிப்பிள்ளையின் உடம்பில் பாம்பின் நஞ்சுக்கான எதிர் புரதம் (Antibody), அதாவது மாறுபட்ட ‘அசிட்டோகோலின் ஏற்பி’ (Acetylcholine receptor) என்ற நச்சு முறிவு பொருள் (anti venom) உள்ளது. அதேபோல் கிளைக்கோ புரதம் ((Glycoprotein) என்கிற நஞ்சு எதிர்ப்பு பொருளும் உள்ளது. இந்தப் பொருள்கள் பாம்பின் நஞ்சை முறித்து விடும். இதனால் கீரிப்பிள்ளை பாம்பு கடியால் இறக்காது தப்பித்துவிடும். இதே போல் பாம்பு நஞ்சிற்கு எதிரான ‘புரதப் பொருள்’ உள்ள பல உயிரினங்கள் உள்ளன.
அதில் ஒன்று குதிரை. குதிரையின் காலில் பாம்பு கொத்திய பிறகு, குதிரையின் உடம்பில் பாம்பு நஞ்சுக்கு எதிரான புரதம் சுரந்து இரத்தத்தில் கலந்து விடும். இதனால் குதிரை பிழைத்து விடும்.
இதை பயன்படுத்தி குதிரையின் இரத்தத்திலிருந்து பாம்பு கடிக்கு ‘முறிவு மருந்து’ தயாரிக்கிறார்கள்.
பாம்பு கடிக்கு மருந்து
பாம்பின் நஞ்சை சிறிய அளவில் மாற்றம் செய்து, ஊசி மூலம் குதிரைக்கு செலுத்துகிறார்கள். சில நாட்களில் குதிரையின் உடம்பில் ‘நஞ்சு முறிவு புரதம்’ சுரக்கிறது. குதிரையின் இரத்தத்தில் இருக்கக்கூடிய இந்த புரதத்தை பிரித்தெடுத்து, மனிதர்களுக்கு ஏற்படும் பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
அதேபோல், கோழியின் உடலில் சிறிய அளவில் பாம்பின் நஞ்சை செலுத்தி;, அது இடும் முட்டையின் மஞ்சள் கருவைக் கொண்டு பாம்பு கடிக்கு மருந்து தயாரிக்கின்றனர். பாம்பு கடிக்கு மருந்து உயிரினத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. ‘இறைச்சி உணவு’ கூடாது என்பவர்கள் (Non-Vegetarian); பாம்பு கடிக்கு பலியாக வேண்டியது தான்!
- விடுதலை ஞாயிறு மலர், 27.09.2025