புதன், 24 ஜூலை, 2024

மருத்துவத்திற்கான நோபல் பரிசு! கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்தவர்களுக்கு!

 



கட்டுரையாளர்: கோவர் அந்தோணிராஜ்

2023-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அடிப்படை அறிவியல் மூலமாக பெருந்தொற்றான COVID-19இல் இருந்து பல கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றிய mRNA தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் மிகவும் திறம்பட செயல்படக்கூடிய அந்த தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக அங்கேரி நாட்டைச் சார்ந்த உயர்வேதியாளர் கேட்டலின் கரிக்கோ (Katalin Karikó) மற்றும் அமெரிக்காவை சார்ந்த நோய் எதிர்ப்பு நிபுணர் ட்ரூ வெய்ஸ்மேன் (Drew Weissman), University of Pennsylvania ஆகிய இருவருக்கும் இப்பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்தானது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கூறுகளுடன் இணைந்து செயல்பட்டு நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய நோய் எதிர்ப்பு ஆற்றலை (ஆண்டிபாடிகளை) உருவாக்குகிறது. மேலும் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை நோய் காரணிகளுக்கு எதிராக பயிற்றுவிப்பது மூலம் நோய் காரணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோயிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது.
முதல் தலைமுறை தடுப்பூசி மருத்துவமானது கொல்லப்பட்ட அல்லது பலவீனமாக்கப்பட்ட வைரஸிலிருந்து தயாரிக்கப்பட்டு போலியோ (polio), மீசல்ஸ் (measles), மற்றும் எல்லோ ஃபீவர் (yellow fever) போன்ற நோய் தொற்றிலிருந்து மனிதர்களை காப்பாற்றியது.

மூலக்கூறு அறிவியலின் துரித வளர்ச்சியின் காரணமாக நோய் தொற்றுக்கு காரணமான வைரஸின் குறிப்பிட்ட புரதப் பகுதி பிரித்தெடுக்கப்பட்டு அதை தடுப்பூசியாக அளிக்கும்போது நோய்க் கிருமிக்கு எதிரான ஆண்டிபாடிகளை உருவாக்கி நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுகிறது. ஹெப்பாட்டிட்இஸ் பி வைரஸ் (hepatitis B virus) மற்றும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (human papillomavirus)- க்கு எதிரான தடுப்பூசி இந்த அடுத்த தலைமுறை தடுப்பூசி மருந்துக்கு உதாரணம் ஆகும். வைரஸின் பிரிக்கப்பட்ட புரதப் பகுதி பாதிப்பில்லாத வைரஸ் கேரியருக்குள் (vector) செலுத்தி பயன்படுத்தும் போது நோய்க் காரணிக்கு எதிரான மூலக்கூறுகளை உருவாக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது. எபோலா வைரஸ் (Ebola virus) தடுப்பூசி இதற்கு உதாரணம்.

மேற்சொன்னபடி வைரஸில் இருந்தோ, வைரஸின் குறிப்பிட்ட புரத மூலக்கூறில் இருந்தோ அல்லது vector அடிப்படையிலான தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு பல்வேறு படி செயல்முறைகள் தேவைப்படுவதால் குறுகிய காலத்தில் அதிக அளவிலான தடுப்பூசிகளை கரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் தயாரிப்பதில் சிரமம் உள்ளது. அதற்காக பல ஆண்டுகளாக எளியமுறையில் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் நியூக்ளிக் ஆசிட் (DNA & mRNA) அடிப்படையிலான தடுப்பூசி மருந்தாகும். செல்களில் உள்ள மரபணு தகவல்கள் குறிப்பிடப்பட்ட DNA ஆனது mRNA ஆக மாற்றம் செய்யப்பட்டு உடலின் இன்றி அமையாததான புரதங்களை உருவாக்க உதவுகிறது. ஆகவே நோய்த் தொற்று கிருமிகளின் மரபணு தகவல்கள் பொறிக்கப்பட்ட DNA நியூக்ளியஸில் (nucleus) mRNA ஆக மாற்றமடைந்து புரத உற்பத்தியின் மூலம் நோய்க் கிருமியின் வழியான ஆன்டிஜென்களை உருவாக்குகிறது. அதன் பிறகு அதற்கு எதிரான ஆண்டிபாடிகளை நோய் எதிர்ப்பு மண்டலம் மூலம் தூண்டிவிட்டு நோய் தொற்றிலிருந்து நீண்ட காலம் நம்மை பாதுகாக்கிறது.

1990 தொடக்கத்தில் நியூக்ளிக் ஆசிட் (DNA & mRNA) தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகளில், DNA தடுப்பூசி அதிக வரவேற்பை பெற்றது. ஆனாலும் அவைகள் நமது செல்களின் மேற்பரப்பான plasma membrane மற்றும் செல்லில் உள்ள nucleus membrane கடந்து சென்று செயலாற்றுவது என்பது கடினமானதாலும், DNA தடுப்பூசி தேவையற்ற மரபணு மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதாலும் mRNA தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சி அதிகரித்தது. mRNA செல்களின் plasma membrane கடந்து சைட்டோப்லஸ்மில் (cytoplasm) உள்ள ribosome-க்கு புரதங்களை உற்பத்தி செய்வதற்கான தகவல்களை கொடுத்து நோய்க் கிருமிக்கு எதிரான ஆன்ட்டி பாடிகளை உருவாக்குகிறது. mRNA தடுப்பூசியை செல்களில் செயல்படுத்துவதில் உள்ள சிரமம் மற்றும் அதன் மூலமான மரபணு மாற்ற செயல்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

mRNA தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் வெற்றி அடைந்தாலும் அதனுடைய குறைந்த நிலைத்தன்மை மற்றும் நமது உடலுக்குள் செலுத்துவதில் உள்ள சிரத்தன்மை தடுப்பூசியின் பயன்பாட்டை சவால் ஆக்கியது. இந்த சவால்களை கலைந்து mRNA தடுப்பூசியை பயன்பாட்டுக்கு வந்ததற்கான ஆராய்ச்சிக்காக தான் இருவருக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பே கேட்டலின் (Katalin) சவால்கள் நிறைந்த mRNA, மருத்துவ பயன்பாட்டிற்கு உதவும் என்ற தொலைநோக்கு எண்ணத்துடன், நோய் எதிர்ப்பு நிபுணர் வெய்ஸ்மேன் (Weissman) உடன் இணைந்து செயல்பட்டு mRNA மருத்துவத்தில் உள்ள சவால்களை களைய ஆரம்பித்தனர். முதலில் தயாரிக்கப்பட்ட mRNA மருந்தானது செல்களுக்குள் செலுத்திய போது எதிர்பாராத எதிர் வினைகளை உருவாக்கியது. அதற்குக் காரணம் mRNA கட்டமைப்பு மூலக்கூறுகளான Adenine (A), Uracil (U), Guanine (G) மற்றும் Cytosine (C) என்று அவர்கள் ஊகித்ததால், கட்டமைப்பு மூலக்கூறுகளில் சிறிய மாற்றம் செய்து வேண்டத்தகாத எதிர்வினைகளை குறைத்தனர். இருவரின் தொடர்ச்சியான ஆராய்ச்சியின் மூலம் mRNA மூலக்கூறில் மாற்றங்களை செய்து எதிர்வினை நிகழ்வுகளை குறைத்ததோடு இல்லாமல் அதிகளவிலான நோய் எதிர்ப்பு புரதங்களை உற்பத்தி செய்வதிலும் வெற்றி அடைந்தனர்.

mRNA நோய் தடுப்பு மருந்து அயனி கொழுப்பு நானோ துகள்களுக்குள் (ionic lipid nanoparticle) செலுத்தப்பட்டு அதனுடைய பயன்பாடு பல மடங்கு நம் உடலில் அதிகரிக்கப்பட்டது. பல ஆண்டுகள் mRNA தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்தாலும் இவர்களின் mRNA மூலக்கூறு மாற்றப்பட்ட தடுப்பூசி தான் 95 சதவீதம் கோவிட் நோய் எதிர்ப்பாற்றல் தந்ததுடன் மிகக் குறுகிய காலத்தில் பன்மடங்கு தடுப்பூசிகள் தயாரிக்க உதவியது. இந்த mRNA மூலக்கூறு மாற்றப்பட்ட தடுப்பூசி தொழில்நுட்பமானது சவாலான சுகாதார நெருக்கடி காலத்தில் பல கோடி உயிர்களை காத்தது மட்டுமல்லாமல், இந்த நுட்பமானது மற்ற பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக கேன்சர் நோயைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த பயன்பாட்டை அளித்துள்ளதால் இந்த தொழில் நுட்பம் பல்வேறு நோய்களை குணமாக்குவதில் அளப்பரிய பங்களிப்பு தரும் என்று எதிர்பார்க்கலாம்.